தமிழர் திருநாள் சிந்தனைகள்..



வழக்கம் போல பொங்கல் என்றாலே இனிப்பு பூசிக் கொள்கிறது மனசு. தெருவில் அதிகரித்து இருக்கும் நடமாட்டமும், வீட்டு வாசல்களில் பூத்திருக்கும் கோல மலர்களும்.. சட்டென இனிப்பினை நம் மனதிற்குள் நிறைப்பி விடுகின்றன.. வீட்டுக்கு திடீரென பக்கத்தில் முளைத்திருக்கும் கரும்புக் கடையில் (என் கடை அல்ல..) கூட்டம் இருக்க வேண்டும் என மனசு சிறிதாக பதட்டம் கொள்கிறது. கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதோ என சட்டென தொற்றுகிறது சிறு ஏக்கம் . என் பால்யத்தில் பொங்கல் என்றால் எங்களுக்கு தெரு தான் . ஆனால் இன்றைய சிறு பிள்ளைகள் தொலைக்காட்சி பெட்டிகளில் வீழ்ந்துகிடப்பதும் வலிக்கிறது. முன்னெல்லாம் பொங்கல் திருநாளில் நாம் ஆவலுடன் எதிர்பார்க்கும் விருந்தினர் தபால் காரர். அவர் கொண்டு வரும் வண்ண வண்ண அட்டைகளாக வந்து குவியும் பொங்கல் வாழ்த்துக்களில் நடிகர்கள்,தலைவர்கள் போன்றோர்கள் நம் வீட்டிற்கு வருவார்கள். காசுமீர் மலைகளும்,குமரிக்கடலும் நம் வீட்டில் எட்டிப்பார்க்கும்.. அந்த அட்டைகளின் எண்ணிக்கைதான் அக்காலத்து நம் குடும்ப கெளரவம். இப்போதெல்லாம் அலைபேசி குறுஞ்செய்திகளில் பொங்கலை குறுக்கி வாழ்த்தை வாட்ஸ் அப்பில் தெரிவித்து கொண்டிருக்கிறார்கள்.. சில சமயங்களில் அல்ல..பல சமயங்களில் அறிவியல் முன்னேற்றம் நம் இயற்கையான விழுமியங்களை விழுங்கி விட்டதோ என தோன்றுகிறது. ஆயிரம் இருந்தாலும்..பொங்கலில் தான் தமிழ் பிறக்கிறது,., வாழ்கிறது. ... 



சற்று நேரம் முன்பு அண்ணன் சீமானிடம் அலைபேசியில் பேசிக் கொண்டு இருந்தேன்.. சொந்த கிராமமான அரணையூருக்கு சென்று கொண்டிருப்பதாக சொன்னார்.. வருடாவருடம் தமிழர் திருநாளன்று தன் தாய் மண்ணில் இருப்பதை வழக்கமாக கொண்டிருப்பதையும் அவர் சொன்னார். மேலும் சொந்த மண்ணிற்கு திரும்புதல் தான் ஒவ்வொரு பூர்வகுடியும் கனவும் ...என்று சொன்னார். அவர் சொன்னதைதான் நான் சிந்திக்கிறேன். நண்பர் பாக்கியராசன் கூட அயலக வாழ்வை விட்டு ஊருக்கு திரும்புவதை சொல்லும் போது..இறுதி காலத்துல நம்மூர்ல போய் மண்ணோடு மண்ணா கலந்துடணும் தல என்று சொன்னதையும் நான் நினைத்துப் பார்த்தேன். தம்பி அறிவுச்செல்வன் என்கிற ராசீவ் காந்தி கூட உயர்நீதிமன்றத்தில் கோட்டு போட்டுக்கொண்டு வழக்கறிஞராக நிற்பதை விடவும்..சொந்த ஊர் கண்மாயில ஆடு மேய்ப்பதைதான் அண்ணா பெரிதாக நினைக்கிறேன் என்று சொன்னதும் நினைவிற்கு வந்தது. விடுதலைக்கு விலங்கு நூலை நான் எழுதிய போது அதன் நாயகனான ராசீவ் கொலை வழக்கு ஆயுட் கைதியான அண்ணன் ராபர்ட்பயஸ் சொன்னார்..தம்பி என் ஊரில் இருக்கும் வானம் தான் இங்கும் இருக்கிறது என்ற நினைப்பில் தான் நான் வானத்தையே பார்த்துக் கொண்டு இருக்கிறேன் என்றார். தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கூட தன் பூர்வீக கிராமத்தில் தான் படுத்துக் கிடக்கிறார் . இப்படி சொந்த மண்ணை நேசித்தல் பூர்வக்குடிகளின் மகத்தான இயல்பு. இது மண் மட்டுமல்ல.. என் முன்னோர்களின் கனவினையும்,நினைவினையும், வாழ்வினையும் சுமக்கின்ற நிலம். அந்த நிலம் தான் எம் உயிர். அதில் மீத்தேன் காற்றை எடுக்கவும், எரிவாயு குழாய்களை புதைக்கவும் யாரையும் அனுமதிக்க முடியாது.. நீ என் நிலத்தை தோண்டுகையில் என் தாத்தனின் மார்பினை பிளக்கிறாய்.. மீத்தேன் காற்றை உறிஞ்சுகையில் உறைந்துக் கிடக்கும் என் முன்னோனின் மூச்சுக்காற்றினை உறிஞ்சுகிறாய்.. இனி எம் மண்ணை மலடாக்கவும்., நீ சம்பாதிக்க பொருளாக்கவும் நான் அனுமதித்தேன் என்றால்.. நான் என்னையே விற்கிறேன் என்று பொருள்.. # மீத்தேன் எரிகாற்றுக்கு எதிராக ஒலிக்கிற ஒவ்வொரு குரலும் ... சாதாரண உரிமைக்குரல் அல்ல.. எம் மண்ணை மீட்டெடுக்கும் உயிர்க்குரல்..

இதோ..எம் நிலம் குறித்தும்..எம் மக்கள் குறித்தும் அப்படியே பிரதிபலிக்கிறார் அண்ணன் சீமான்..

http://www.youtube.com/watch?v=lULWQKHvq9U&feature=youtu.be

No comments: