ஏனெனில்…. அது அவர்களது மரபியல் குணம். – மணி.செந்தில்


“சிற்றில் நல் தூண் பற்றி,’நின் மகன்

யாண்டு உளனோ?’ என வினவுதி ; என் மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்

புலி சேர்ந்து போகிய கல் அளை போல,

ஈன்ற வயிறோ இதுவோ;

தோன்றுவன் மாதோ,போர்க்களத்தானே.

– திணை: வாகை துறை: ஏறான் முல்லை.

பொருள்: “ சிறிய வீட்டில் உள்ள நல்ல தூணைப் பற்றிய வண்ணம் ‘உன் மகன் எங்கு உள்ளானோ?’ என வினவுகிறாய்.என் மகன் எங்கிருப்பான் என நானறியேன்; புலி இருந்து பின் பெயர்ந்து சென்ற கற்குகை போல அவனை பெற்ற வயிறு இதுவேயாகும் . அவன் போர் நிகழும் களத்தில் தோன்றுமியல்புடையவன் ( அவனை காண்பதற்கு அங்குச் செல் ) – புற நானூறு –நியூ செஞ்சுரி வெளியீடு .

.

ஒரு காட்சி.

வல்லாதிக்க கழுகுகள் ஒரு சேர ஒன்று சேர்ந்து கொத்தி குதறிப் போட்ட தாய் நிலத்தில் இருந்து மிஞ்சியது,தங்கியதை அள்ளிக் கொண்டு நடந்து முடிந்த பேரவலத்தின் துயர் சாட்சிகளாய் எதிர்காலம் என்னும் அடர் இருட்டின் மீது கவிழ்ந்துள்ள பேரச்சத்தினை சுமந்த வண்ணம் தயங்கி..தயங்கிப் படியே முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து வெளிவந்த மக்கள் திரளிலிருந்த அந்த வயதான முதியவரும், அவர் தள்ளிக் கொண்டு வந்த சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த நோயுற்ற அந்த பெண்மணியும்.. ஊரெல்லாம் ஆயுத பிச்சை எடுத்து, உலக சதிகள் பல செய்து பெற்ற வெற்றி தந்த கர்வமும், கண்டிப்பும் நிறைந்த அந்த காவலாளியிடம் சலனமற்ற முகத்தோடு அஞ்சாமல், மறைக்காமல் சொன்னார்கள்..”நாங்கள் தான் வேலுப்பிள்ளை,பார்வதி அம்மாள் – பிரபாகரனின் தாய் தந்தையர்.” ஏனெனில்..அது அவர்களது மரபியல் குணம்.

.

ஒரு மகத்தான விடுதலைப் போர் ஒரு சேர சேர்ந்த வல்லாதிக்க பலத்தால் முறியடிக்கப்பட்ட துயரைத் தவிர அவர்களுக்கு எவ்விதமான அச்சமும், தயக்கமும் இல்லை. கடுமையான இரத்த அழுத்தம், தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு போன்ற தொகுப்பு நோய்களால் அவதிப்பட்டு வந்த அய்யா வேலுப்பிள்ளையை தூக்கிச் செல்ல முயன்ற சகத் தமிழனின் உதவியை மறுத்து அவராகவே நடந்து சென்றார். பல முறை தடுக்கி கீழே விழுந்தும், மீண்டும் தானாகவே எழுந்து நடந்தார். ஏனெனில்..அது அவர்களது மரபியல் குணம்

.

தங்கள் மகனுக்கும் அதைத்தான் அவர்கள் போதித்தார்கள். மரணம் கண்ணுக்கு முன்னால் தொங்கிக் கொண்டிருந்த போதும் அவர்கள் சலனமில்லாமல் தான் இருந்தார்கள். ஒரு நாட்டை ஆண்ட தலைவனின் பெற்றோர் என்ற முறைமையில் அவர்கள் எவ்வித சலுகையையும், அனுதாபத்தினையும் விரும்பாதவர்களாக இருந்தார்கள். அனைத்தையும் இழந்த அவர்களுக்கு வரலாற்றின் பாதையில் கடுமையாக பழி வாங்கப்பட்ட ஒரு இனத்தின் மக்களுக்காக தங்கள் மகன் நடத்திய அறவொழுக்குடன் வீரம் செறிந்த விடுதலைப் போராட்டம் தந்த பெருமிதம் அவர்களுக்கு இருந்தது. ஏனெனில்..அது அவர்களது மரபியல் குணம்.

.

முதல்வர் வீட்டு மூன்றாம் தலைமுறைப் பேரன் கூட அதிகார போதை தரும் திமிறினால் எளிய காவலாளியைத் துப்பாக்கியை காட்டி மிரட்டும் ஆணவத்தினை அவர்கள் அறிந்திருக்க வில்லை. எளிய வாழ்வினைத் தான் அவர்கள் வாழ்ந்தார்கள். மக்களோடு, மக்களாக வாழ்ந்தார்கள். ஏதேச்சதிகாரத்தோடு நாட்டை ஆர்பாட்டங்களாய் ஆண்ட அதிபர்கள் எல்லாம் எதிர்ப்பு பெருகினால் குடும்பத்தோடு விமானம் ஏறி பயந்து ஓடும் உலகத்தில்…முப்படை வைத்து உலகம் வியக்க வாழ்ந்த ஒரு தலைவனின் குடும்பம் இப்படித்தான் வாழ்ந்தது. இந்த பரந்துப்பட்ட உலகின் முன் எவ்விதமான வேண்டுகோளையும் அவர்கள் வைக்க வில்லை. கடைசிக்காலத்தில் மருத்துவ உதவி கேட்டு அம்மாவின் கைரேகை (?) பதித்து தமிழக முதல்வருக்கு வந்ததாக காட்டப்பட்ட கடிதம் கூட அம்மாவின் நினைவு தப்பிய பொழுதுகளில் தான் வந்தது. ஏனெனில்..அது அவர்களது மரபியல் குணம்.

.

முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் இராணுவத்தினரால் செட்டிக்குளம் முகாமில் கைது செய்யப்பட்ட அய்யா வேலுப்பிள்ளையும், அம்மா பார்வதியும் பலத்த பாதுகாப்பிற்கிடையே இராணுவப் புலனாய்வுத் துறையினரின் நேரடி கண்காணிப்பிற்கு உட்பட்ட சித்ரவதைகளுக்குப் பெயர் பெற்ற கொழும்பு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். இன்றளவும் வெளியிடப்படாத அந்த கடுங்கொடுமைகளுக்கு உள்ளான அய்யா வேலுப்பிள்ளை கடந்த 2010 ஜனவரி மாதம் காலமானார். அவரது மறைவின் போதே அம்மாவிற்கு நினைவாற்றல் மிக குறைவாகவும், தன்னிலை வருவதும் போவதுமாக இருந்தது. மிகுந்த உடல் நலிவுற்ற அவரைச் சிங்கள பேரினவாத அரசு சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதித்தது. அங்கு அக்கா வினோதினி அம்மாவினைக் கவனித்துக்கொண்டார்கள். மேற் சிகிச்சைக்காக இந்திய அரசின் உரிய விசா பெற்று சென்னை விமான நிலையத்திற்கு அம்மா வந்த போது விமானத்தில் இருந்து இறங்காமலேயே அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.இது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியிடம் கேட்டதற்கு ‘தனக்கு எதுவும் தெரியாது’ என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பதிலை அளித்தார்.மீண்டும் பல வித அலைகழிப்பிற்குப் பிறகு மீண்டும் இலங்கை சென்ற அவர் இறுதி வரை அங்கேயே இருந்து காலமானார்.இதன் நடுவே அம்மா பார்வதி கருணாநிதிக்கு வேண்டுகோள் கடிதம் ஒன்று எழுதியதாகவும், அதை நன்கு பரிசீலித்த கருணாநிதி மத்தியில் ஆண்ட சோனியா அரசிடம் அனுமதிப் பெற்று,ஆதரவு பெற்று ‘யாரும் வந்து பார்க்க கூடாது, பேசக் கூடாது , அசையக் கூடாது, மூச்சு மட்டும் விடலாம்’ போன்ற பத்துக்கும் மேற்பட்ட கடுமையான நிபந்தனைகளோடு சென்னை வர அனுமதி அளித்ததாகவும் செய்திகள் வந்தன. ஆனால் இங்கிருந்து போன மதியாதார் அழைப்பினை அம்மா பார்வதி அவர்கள் ஏற்கவே இல்லை. சிங்கள பேரினவாதத்தினை விட கேடு கெட்ட தாயக தமிழகத்தின் இழிவான நிலையை கண்ட அம்மா இந்த மண்ணில் கால் வைக்காமல் போய் விட்டார். ஏனெனில்.. அது அவர்களது மரபியல் குணம்.

.

நம் தேசியத்தலைவர் பிரபாகரனை ஒரு தலைவராக, சமரசம் அடையா சமரனாக உருவாக்கியத்தில் அவரது தாய் பார்வதி அம்மாளுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. வல்வெட்டி துறையில் வாழ்ந்த திருமேனியார் குடும்பத்து திருவிளக்காக பார்வதி அம்மாள் திகழ்ந்தார். இயல்பான ஒரு தாய்க்குள்ள அனைத்து விதமான சுயநலப்பற்றுகளும் அவருக்கும் உண்டு. தாமதமாக வந்தாலே தவித்துப் போகும் தாய்மை அவருக்குள்ளும் இருந்தது. வீட்டிற்குள் மாட்டப்பட்டிருந்த தன் மகன் இருந்த புகைப்படங்களைத் தன் மகனே எடுத்துச் சென்று பதுக்கிய போது அச்சப்பட்டார். போராட்ட வாழ்வின் அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் தன் வாழ்நாளில் ஒரு சேர சந்தித்த அந்த தாய் கடுமையான அனுபவங்களின் வாயிலாய் சிரமப்பட்டார். ஆனால் தாய்நிலத்தின் மீதான அளவற்ற பற்று, சுதந்திர வாழ்வின் மீதான வேட்கை அனைத்தும் முழுமையாக உள்வாங்கிய ஒரு அதிமனிதனின் தாய் தன்னுடைய உணர்வுகளை ,தன்னுடைய பற்றுக்களை சுருக்கி , வீட்டின் நான்கு சுவர்களைத் தாண்டிய பெரு வாழ்வு வாழ்வதற்காக மகனை அனுப்பி வைத்தார் .அதைத்தான் இக் கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள புறநானூற்றுப் பாடல் சுட்டுகிறது. ஏனெனில் .. அது அவர்களது மரபியல் குணம்.

.

நம் அம்மா பார்வதி அவர்களை மருத்துவ சிகிச்சைக்காக கூட இங்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் உலகத்தின் மிக இழிவான மக்களாய் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதற்கான சாட்சியாக விளங்குகிறது. அதையும் தாண்டி செய்த தவறுகளை மறைக்க கருணாநிதி அடித்த கடிதக் கூத்துக்கள் நம்மை இன்னமும் தலைக் குனிய வைக்கிறது . நம் இனத்திற்காக நாடு கட்டி போராடிய மகத்தான தலைவனின் தாயாருக்கு மருத்துவ உதவி கூட வழங்க மறுத்த கருணாநிதியின் துரோகமும், இது போன்ற காட்சிகளை வழக்கம் போல ‘நாளை மற்றொரு நாளே’ என்பது போல வேடிக்கைப்பார்த்த நமது கையாலாகாதத்தனமும் எதிர் வரும் தலைமுறைப்பிள்ளைகளால் எச்சிலால் உமிழப்படும். அம்மா இதையெல்லாம் புரிந்துக் கொண்டுதான் இறுதி காலத்தில் எங்கும் செல்லாமல் தன் சொந்த மண்ணில் எரிந்து தாய் நிலத்தின் உரமாக கலந்துப் போனார். அம்மாவினை எரித்த சிதையில் மறுநாள் நாய்களை வைத்தெரித்து உலகிற்கு மீண்டும் தன் மனநோயாளித்தனத்தினை அப்பட்டமாக வெளிகாட்டியிருக்கிறது சிங்கள பேரினவாதம் . ஈழ மக்களும், புலம் பெயர்ந்த தமிழ் உறவுகளும் அசைவற்ற விழிகளுடன் உலகத்தின் பதிலுக்காக காத்திருக்கின்றனர். உலகமும் சிங்கள பேரினவாதத்தின் இது போன்ற இழிவான செயல்களை தான் வழக்கம் போல் காத்து வரும் மெளனத்தினால் அங்கீகரித்து இருக்கிறது. உலகத் தமிழர்கள் பெரும் துயரோடு அமைதி காக்கிறார்கள் . துயருடன் கலந்த அமைதி தான் புரட்சியின் கருவாக அமைகிறது என்பதை எகிப்து காட்டியிருக்கிறது . இழந்தவர்கள் பெறுவதற்கு சுதந்திரம் மட்டுமே இருக்கிறது. பெறுவார்கள். ஏனெனில்.. அது அவர்களின் மரபியல் குணம்.

.

துயர் கவிழ்ந்த பெரு நிலத்தினை , வெறித்துப் போன விழிகளை சுமக்கும் பசித்த வயிற்றினை, சொந்த ரத்த உறவின் நிர்வாணத்தினை, சொந்த தங்கையின் உடலின் மேல் வல்லுறவாய் நிகழும் பாலியல் தாக்குதலை , அவளின் ஈரக்குலையை அறுக்கும் போது எழும்பும் ஈனக்குரலை, எவ்வித சலனமுமில்லால் பார்த்து விட்டு, அடிப்படை குற்ற உணர்ச்சிக் கூட கொள்ளாமல் நம்மால் இந் நாட்களையும் கடக்க முடிகிறது. தேர்தல் குப்பைத் தொட்டிக்கு அருகே பதவி எச்சிலைக்காக சண்டையிட்டுக் கொள்ளும் தெரு நாய்களை நம்மால் எவ்வித சங்கடமும், அருவருப்பும் இல்லாமல் இயல்பாக பார்த்து விட முடிகிறது. இனத்தினை அழித்த ஓநாய் ஓட்டு பிச்சைக்காக வீட்டுக்கு வரும் போது அவன் விரல் நீட்டி தரும் காசை காற்சட்டைக்குள் போட்டுக் கொண்டு அவன் ஊற்றும் சாராயத்தினை சப்புக் கொட்டி குடிக்க முடிகிறது. இனத்தின் எதிரிகளை என்ன விலை கொடுத்தேனும் எப்படியாவது வீழ்த்த நினைக்க முயலாமல் அவமானத்தின் இழி பிறவிகளாய் தத்துவ குகைக்குள் இருட்டு சித்தாந்தம் பேசி, புள்ளி விபர புலம்பல்களோடு கொல்லைப் புறம் வழியாய் எதிரியின் எச்சிலைக்காக நியாயம் பேச முடிகிறது . இன்னமும் நம்பிக்கை இழக்காமல் எதிலும் முடங்கிப் போகாமல் தாங்க முடியாத துயரோடு, வீழ்ந்தவர்கள் சிந்திய உதிரத்தினை உடலிலே பூசிக் கொண்டு வன்மம் கொண்டு இனம் வெல்ல வீதியில் நிற்பவர்களை நயவஞ்சமாக புறம் பேசி சுகம் காண முடிகிறது.

சகிக்க முடியாத துயரொன்று உண்டெனில் – இவற்றை சகித்துக் கொண்டு வாழ்வதுதான்.

பார்வதி அம்மாவின் இழப்பும் அவ்வாறே.

உரமாய் கலந்தவையும்.. மாவீரர்களின் மூச்சுக்காற்றாய் அலைபவையும் முடங்கிப் போகாது. அழுத விழியோரத்தில் நம்பிக்கை என்ற சிவப்பினை ‘பிரபாகரன்’ என்ற சொல் தேக்கும். நாளை அந்த மண் மீண்டும் பூக்கும். ஏனெனில் அது அவர்களது மரபியல் குணம்.

எம் தாய்க்கு வீரவணக்கம் .