உதிரச் எச்சலில் உருக்குலைய நேரிடும் உலகு… மணி.செந்தில்


இந்த உலகில் வாழ்கிற சாதாரண மனிதர்களைப் போல் உரிமைகளுடன் கூடிய வாழ்க்கைக்காக ..விடுதலை வேட்கையுடன் போராடிய மாவீரர்களை பயங்கரவாதிகள் என சித்தரித்த சர்வதேச சமூக வல்லாதிக்கத்தின் முகத்திற்கு முன் அலை அலையாய் வந்து விழுந்துக் கொண்டே இருக்கின்றன ஈழப்போரின் கொலைக் குற்ற காட்சிகள். ஈவு இரக்கம் அற்ற மனித மாண்பிற்கு அப்பாற்பட்ட காட்சிகளை கண்ட எவரும் கண்கள் நிறைந்து தலை குனிவர். படக் காட்சிகள் பலவற்றை வைத்துள்ள இங்கிலாந்தின் சேனல் 4 மானுட சமூகத்தின் நாகரீக வரையறைகளுக்கு உட்பட்ட காட்சிகளைத்தான் தங்களால் வெளியிட முடிந்தது என்றும் வெளியிட முடியாத அளவிற்கு காண சகிக்காத கொடுங்கோலங்களை கொண்ட படக்காட்சிகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன என்றும் கூறி அதிரச் செய்து இருக்கிறது. ரத்தமும், கொடூரமும் வழியும் அந்த படக்காட்சிகள் விலங்குகளாய் மனிதன் திரிந்த கற்காலத்தில் படம் பிடிக்கப்பட்டவை அல்ல. உலகத்தீரே.. நாகரீகமும்..அறிவியல் முன்னேற்றமும் சொல்லில் விவரிக்க முடியாத அளவில் உயர்ந்து..தனி மனித விழுமியங்களுக்காகவும், சமாதானத்திற்காகவும் உலக சமூகம் உருவாக்கப்பட்டு வருகிறது என பறை அடித்து பாசாங்கு காட்டுகின்ற தற்காலத்தில் தான்.. என்று உணருங்கள்.

நிர்வாண உடல்களை பேரினவாதத்தின் அலகுகள் கொத்தி சிதைத்திருப்பதைதான் இந்தியா உள்ளீட்ட வல்லாதிக்கங்கள் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என விளக்கமளித்தன. விரிந்துக் கிடக்கின்ற ஈர நிலத்தில் விடுதலைக் கனவு சுமந்த கண்கள் கட்டப்பட்டு..மறுத்த உரிமைகளின் மேல் வெகுண்டெழுந்த கைகள் இறுக்கப்பட்டு… தகிக்கின்ற சுதந்திர தாகத்திற்காக, இறுதியில் ஆடையும் அவிழ்க்கப்பட்டு ..சிறு முனகலோடு சிதைகிற சகோதரன். வன்புணர்வின் வலியில் கசங்கிய மலராய்.. உதிர முகத்துடன் உரு கலைக்கப்பட்டு ..வீழ்ந்து கிடக்கின்ற சகோதரி.. இறுகிக் கிடக்கும் உடலில் போர்த்தப்பட்டிருக்கும் உடையை காற்று கூட விலக்க துணியாமல் கண் கலங்கி நிற்கையில்.. வக்கிர சிரிப்புடன் ஆடை அவிழ்ந்து காட்டும் சிங்களனின் மன நோய்க்கு உலகம் வைத்திருக்கும் பேர்தான் பயங்கரவாத எதிர்ப்புப் போர்..

பேரினவாத வன்முறையினால் நம் சொந்த சகோதரியின் சிதிலமடைந்த பெண் குறியை நம் விழிகளில் உதிரம் மல்க பார்க்க நேர்ந்த அவலத்தினை நாம் எங்கே கொண்டு தொலைப்பது..? நம் சொந்த சகோதரியின் நிர்வாணத்தினை கண்ட பிறகும் கூட எவ்வித சலனமுமில்லாமல் மற்ற பணிகளை பார்க்கத் துணியும் எம் விழிகளை எங்கே கொண்டு புதைப்பது..? நம் கண் முன்னால் நம் சகோதரியை ஆடை அவிழ்ந்து காட்டுகிறான் எதிரி. முகத்தில் உதிரம் வழிய இறந்துக் கிடக்கிறாள் இசைப்பிரியா.. இசைப்பிரியா மட்டுமா அங்கு இறந்து கிடக்கிறாள்..? அல்லவே தோழர்களே.. தொன்மம் மிகுந்த ..இமயத்தில் புலிக்கொடி நட்டு உலகத்தினை ஆண்ட இனத்தின் நம் தாய்தான் அங்கு அம்மணமாக வீழ்ந்து கிடக்கிறாள்.. உடைந்த அவளின் தலையில் இருந்து காலம் காலமாய் நமக்கு மரபாய்..பண்பாடாய்..விழுமியமாய் புகட்டப்பட்ட தாய்ப்பாலின் மிச்சம் உதிரமாக அல்லவா அந்த ஈர நிலத்தில் பாய்கிறது..? அங்கே தான் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் உள்ளாடையோடு கிடக்கிறான். அங்கேதான் அம்மணமாய் பின்புறம் காட்டி கைகள் கட்டப்பட்ட மன்னன் ராசராசன் கிடக்கிறான். மானத்திற்காக மண்டியிடாத இரும்பொறை மண்டை உடைந்து மல்லாக்க கிடக்கிறான்.

உலக சமூகம் வரையறுத்து வைத்துள்ள அனைத்து நாகரீக சமன்பாடுகளையும் சிங்கள பேரினவாதம் மாற்றி அமைத்து போட்டிருக்கிறது . உலகத்தினை அழிக்கக் கூடிய ரசாயன ஆயுதங்களை வைத்திருப்பதாக கூறி எவ்விதமான புற, அக ஆதாரங்களையும் கணக்கில் கொள்ளாமல் ஈராக்கின் மீது படையெடுத்து அதன் அதிபரான சதாமை அவசர அவசரமாக தூக்கில் இட்ட அமெரிக்க வல்லாதிக்கம் உள்ளீட்ட உலக நாடுகள் புகைப்படங்களாக, படப்பதிவுகளாக என மலைமலையாய் குவிந்துக் கொண்டிருக்கும் சிங்கள பேரினவாதத்தின் போர்க்குற்ற காட்சிகளை கண்டு கண் மூடி மவுனத்திருப்பதன் நோக்கம் வெறும் பொருளாதார காரணிகள் மட்டும்தான். சகல வளங்களோடு விரிந்துக் கிடக்கும் தமிழரின் தாயகமான ஈழப் பெரு நிலம் வல்லாதிக்கங்களைப் பொறுத்த வரையில் நாக்கில் நீர் ஊற வைக்கும் சுவையான பண்டம் ஒன்றுதான்.

தங்களின் தாயக விடுதலைக்காக களமாடிய விடுதலைப்புலிகள் இறுதி வரை கடைப்பிடித்த ஒழுங்கமைவும், மனித சமூக நலனிற்கு உட்பட்ட விழுமியங்கள் சார்ந்த மரபு வாயிலான போர் முறையையும்…அதன் எதிர் வினையாக சிங்கள அரசு கடைப்பிடித்த காட்டுமிராண்டித்தனமான கொலைகளையும் உலகம் தன்னிரு கண்கள் கொண்டு பார்த்துக் கொண்டுதான் இருந்தது. இன்றளவும் மக்களை நேசித்த..மக்களுக்காக போராடிய இயக்கமான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க எந்த நாடும் முன் வராத சூழலில் தான்… அடுக்கடுக்காக சிங்கள பேரினவாதத்தின் போர்க்குற்றக்காட்சிகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. உலக சமூகத்தினால் கைவிடப்பட்ட தனித்த இனமாக தமிழ் தேசிய இனம் மாறிப் போய் இருக்கிறது. உலக சமூக நலனிற்காக உருவாக்கப்பட்ட பொதுவுடைமை சித்தாந்தம் பேசும் நாடுகள் கூட ஈழப் பெரு நிலத்தின் மேல் கவிழ்ந்துள்ள துயரங்களுக்கு ஆதரவு அளிக்க இயல வில்லை. மாறாக உலக மானுட மாண்புகளுக்கு எதிரான சிங்கள பேரினவாத அரசின் கொடுங்கோலங்களுக்கு துணை புரிவதன் அரசியல் தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிராக அமைந்துள்ளது.

ஈழப் பெரு நிலத்தின் விடுதலை என்பது இன்று தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலையாக முகிழ்ந்து இருக்கிறது என்பதுதான் நடந்து முடிந்த நான்காம் கட்ட ஈழப்போர் உலக தமிழின சிந்தனை மரபில் ஏற்படுத்திய மாற்றம் ஆகும். உலகமெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழ்த் தேசியத் இனத்தின் ஒற்றைக் கனவாக ஈழப் பெரு நிலம் மாற்றப்பட்டு விட்டது . ஈழத்தில் நிகழ்ந்திருக்கிற வன் துயரங்கள் ஒரு குறிப்பிட்ட மக்களின் மீது நிகழ்ந்த வன்முறையை சார்ந்தவை அல்ல. மாறாக 12 கோடி மக்களாய் விரிந்திருக்கிற தமிழ்த் தேசிய இன சுதந்திர வேட்கையின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல். தன் சொந்த சகோதர, சகோதரிகள் மீது நிகழ்த்தப்பட்டுள்ள கொடுங்கோன்மைகளுக்கு உலகச் சமூகம் பதில் தந்தாக வேண்டும் என்ற உத்வேகம் தமிழர்களின் ஆழ் மனதில் வன்மமாக உருவேறி வருகிறது என்பதற்கு சாட்சியாக தான் பனிக் கொட்டிய இரவில் இரகசியமாக வந்து இறங்க முயன்ற சிங்கள பேரினவாத போர்க்குற்றவாளி இராசபக்சேவிற்கு பிரிட்டன் தமிழர்கள் அளித்த கடும் எதிர்ப்பு . மேலும் தாயக தமிழகத்திலும் ஜவுளி கண்காட்சியை துவக்கி வைக்க கோவை வந்த சிங்கள பேரினவாத எம்.பியை ஓட ஓட விரட்டியடித்த பெரியார் தி.க, நாம் தமிழர் உள்ளீட்ட தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பு. இனி சிங்களம் கொழும்பினை விட்டு எங்கு தரை இறங்கினாலும் உலகத் தமிழினம் பாய்ந்து எதிர்க்கும் என்பதனை சிங்கள பேரினவாதம் உணர்ந்து நடுங்க துவங்கி இருக்கிறது.

ஈழத்தில் நடந்த இறுதிக்கட்டப் போரில் நிகழ்ந்தேறிய முள்ளிவாய்க்கால் துயரங்கள் தமிழ்ச் சமூகத்தின் ஆன்மாவில் ஆழ்ந்த வடுக்களாக வடிவம் பெற்று வலித்துக் கொண்டிருக்கின்றன. தன் சொந்த சகோதரியின் ஆடையை அவிழ்ந்துக் காட்டி சிரித்து மகிழும் எதிரியின் எக்காளத்தினை தமிழனால் ஒருக்காலும் மறக்க இயலாது. தன் சகோதர சகோதரிகளின் நிர்வாணத்தினை முன் வைத்து தன் மனித தன்மையற்ற செயலால் தொன்ம தமிழின அற மனத்தின் தன்மான உணர்ச்சிக்கு சிங்கள பேரினவாதம் விடுத்துள்ள சவாலை உலக தமிழினச் சமூகம் நேரிடையாக சந்திக்கிறது . நாகரீகங்களை உலகிற்கு போதித்த தமிழனின் வரலாற்று மனதில் ஆற்றவே இயலா கடும் காயத்தினை ஏற்படுத்தியுள்ள ஈழத்தின் இறுதி நாட்களின் ஓலம் வெறிப்பிடித்த விலங்காய் தமிழினத்தினை துரத்திக் கொண்டே இருக்கும். விழிகளில் வழியத் துடிக்கும் நீருடன், காயம் தந்த வன்மத்துடன் ஒரு தேசிய இனமே தன் விடுதலைக்காக இந்த உலகப் பெரு வெளி சமூகத்தில் தன்னை மீண்டும் தகவமைத்துக் கொண்டு போராட துணிகிறது. விடுதலை குறித்த சிதைக்க இயலா நம்பிக்கைகளோடு தமிழின இளைஞர்கள் உலக வீதிகளில் பாட்டனின் புலிக் கொடியோடு அலைகிறார்கள்.

ஆனால் போர்க்குற்றம் குறித்த ஏராளமான ஆதாரங்கள் வெளியான பின்னரும் உலக சமூகத்தின் கனத்த மெளனம் தமிழ் மக்களை வெறுப்பின் வெளியில் தள்ளி இருக்கிறது . அடையாள அரசியலுக்காக வெளியிடப்படும் உலக பிரதிநிதிகளின் கண்டன அறிக்கைகள் தமிழ் மக்களின் மீது நிகழ்ந்துள்ள கடும் துயரங்களுக்கு போதுமானவை அல்ல . தடை செய்யப்பட்ட இரசாயான ஆயுதங்களை வைத்திருந்ததாக ஒரு பொய்யினை கூறி அவசர அவசரமாக ஒரு நாட்டின் மீது படையெடுத்து, அந்த நாட்டின் தலைவரை சிறைப்பிடித்து..குறுகிய காலத்திற்குள் தூக்கில் ஏற்ற முடிந்த உலக வல்லாதிக்கத்தினால் அடுக்கடுக்காய் ஆதாரங்களை கண்டு விட்டப்பிறகும் சிங்கள பேரினவாத போர்க்குற்றவாளி இராசபக்சேவினை தண்டிக்க முடியாமல் தடுமாறுவது எதனால்..?

பெருகி வழியும் தன் உதிரத்தினால் தன் மேலான சுதந்திர தாகத்தினை உலக மானுடத்தின் மனசாட்சியின் முன் நிரூபிக்கிறார்கள் தமிழர்கள் . தம் தொன்மையான தாய்நிலம் பறி போவதை காணச் சகிக்காமல் வெகுண்டெழுந்து போராடிய ஒரு தேசிய இன மக்கள் தங்களின் அளப்பரிய தியாகங்களினால் மூடிக்கிடக்கும் உலகின் கண்களை திறக்க முயல்கிறார்கள் . சமூக நீதி மற்றும் மானுட உரிமையின் மேலும் கட்டமைக்கப்பட்டுள்ளதாக கதைக்கப்படும் உலகின் அறம் தொக்கி நிற்கும் சமூக வாழ்வின் மேல் தன் உதிர எச்சிலை உமிழ்ந்து காட்டி இருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள். அவர்களின் வலியுணராமல் ..நீதி மறுக்கப்பட்ட அநீதியான இந்த உலகச்சமூகத்தின் மெளனம் தொடருமானால்… குமுறி உமிழப்பட்ட அவர்களது உதிர எச்சலில் உருக்குலைய நேரிடும் இவ்உலகு.

…அவர்களின் இன்றைய தேவை

வெறும் வார்த்தைகளல்ல.

உயர்த்திய கரங்கள்

அழுத்தமாய் ஒலிக்கும் குரல்கள்

சங்கிலித் தொடராய்

இணைந்த கைகள்

அடக்குமுறையை எதிர்த்து நிற்கும்

அணிவகுப்புகள். “ ( -கோசின்ரா கவிதையிலிருந்து)

எங்கள் இனத்திற்கு சீமானின் குரல் வேண்டும் – தீபச்செல்வன்


அன்பான சீமான் அண்ணன் மற்றும் பேரறிவாளன், முருகன் அண்ணன்களுக்கு.

போர் தின்ற பூமியில் இருந்து கொண்டு எனது நலத்தை எப்படிச் சொல்ல. அதிகாரங்கள் எழுச்சியின் குரல்களை தின்னும் பூமியில் உள்ள உங்கள் நலத்தை எப்படி விசாரிக்க.நாங்கள் எல்லோருமே கட்டுண்டு அகதிகளாகவும் அடிமைகளாகவும் இருக்கிறோம். இந்த நூற்றாண்டில் மட்டுமல்ல கடந்த காலத்தில் எமதினம் அனுபவித்த துன்பத்தை எந்த இனமும் அனுபவிக்க மாட்டாது.

உங்களால் எங்களுக்காக எழுப்பப்படும் குரல்கள் இங்கு பெரும் அதிர்வை உண்டு பண்ணுபவை. அதற்கு இலங்கை அரசு பயம் கொள்ளுகின்றது. ஆனால் சீமான் அண்ணன் அவர்களே! இன்று ராஜபக்ஷ விரும்புவதை கருணாநிதி செய்து உங்களை சிறை வைத்திருக்கிறார். நீங்கள் விடுதலை பெற்று வரவேண்டும் என்று நாங்கள் காத்திருக்கிறோம். பொங்கிய தமிழகத்தையும் திரையுலகத்தையும் கட்டுப்படுத்தி ஆட்சி நடத்தும் கருணாநிதியும் , உலகத் தமிழர்களின் குரல்களை கண்டு அஞ்சாது யுத்தம் நடத்திய ராஜபக்ஷவும் ஒன்றுதான்.

நம்பிக்கையை எப்படி வளர்த்துக் கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. அந்தளவில் அதிகாரத்தால் எங்களை சிதைத்து வதைத்துக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு. சிங்களக் குடியேற்றம், காணி நிலங்களை அபகரிப்பது, சிங்கள அரச கைக்கூலி அதிகாரிகை திணிப்பது, மீள்குடியேற்றத்தை பின்னடிப்பது என்று பல வகையில் மக்களுக்கு அவலத்தை அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது.

நாங்கள் எதைப் பற்றியும் பேச முடியாத சூழலை உருவாக்கி எங்கள் தாயகத்தை கனவை அழிக்கப் பார்க்கிறது.

நீங்கள் எப்பொழுது சிறையில் இருந்து விடுதலை பெறுவீர்கள் என்று அடிக்கடி நண்பர்களை விசாரிப்பதுண்டு. விடுதலையாக வேண்டும் என்று காத்திருக்கிற உணர்வுத் தமிழரர்களில் நானும் ஒருவன். திடமாக நம்புகிறேன் மீண்டும் அதிரும் உங்கள் குரல் எமக்காய் ஒலிக்குமென்று.

பேரறிவாளனது “தமிழ்முழக்கத்தில்“ வெளியான பதிவை படித்த பொழுது மிகவும் துக்கமாக இருந்தது. புகைப்படத்தை பார்க்கும் பொழுது ஈழப் போராளியின் முகம் என்று நினைத்தேன். அன்பான பேரறிவாளன் விடுதலை பெற்று வர தொரடர்ந்து போராடுங்கள். உங்கள் விடுதலைக்காக நாம் காத்திருக்கிறோம். “அணுகுண்டு வைத்திருக்கும் அமெரிக்கா, துவக்கு வைத்திருப்பவனை பயங்கரவாதி என்றான்” காசி ஆனந்தனின் வரிகள் சொல்லுவதைப் போல அதிகார விதியினால் உங்களை சிறை வைத்திருக்கிறார்கள். நம்பிக்கையுடன் போராடுங்கள் பேரறிவாளன்.

முருகன் “குப்பி“ திரைப்படம் பார்த்த பொழுதுதான் எனக்கு அந்த நாட்கள் மேலும் மனதை நெருக்கின. அந்தப் படம் பிழைத்து வி்ட்டதாக சொன்னார்கள். சகோதரி நளினி அத்தோடு உங்கள் வாழ்க்கை இப்படி கழிந்து விட்டது. எங்களுக்காக எங்கள் விடிவிற்காக இப்படியெல்லாம் உங்கள் வாழ்க்கை ஆகிவிட்டது. நீங்கள் சிறையிலிருந்து படிக்கிறீர்கள், எழுதுகிறீர்கள், ஓவியம் வரைகிறீர்கள் என்றெல்லாம் எங்கள் தினசரிப் பத்திரிகைகளில் செய்திகள் வரும். உங்களுக்கு இந்தா விடுலை அந்தா விடுதலை என்றும் செய்திகளும் படங்களும் வரும்.

உங்கள் பிள்ளையின் ஓவியம் என்று நினைக்கிறன் எங்கள் தினசரிப் பத்திரிகை ஒன்றில் வந்திருந்தது. உங்களது விடுதலை சாத்தியமாக வேண்டும் என்று காத்திருக்கின்றோம். அமீர் சொல்லிய பேட்டியில் ‘நாங்கள் சிறையில் இருப்பதைப்போலவும் நீங்கள் வெளியில் இருப்பதைப்போலவும்’ உணருக்கிறன். நம்பிக்கையுடன் விடுதலைக்காக போராடுங்கள். அந்த நாள் தமிழர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை நினைக்க மனம் ஏதோ செய்கிறது.

உங்கள் அருகில் சீமான் இருக்கிறார். அவரை பத்திரமாக பாத்துக் கொள்ளுங்கள். எங்கள் இனத்திற்கு அவரது குரல் வேண்டும். நீங்கள் வேண்டும். உங்களை அவர் பார்த்துக் கொள்ளுவார்.ஏதோ ஒரு நம்பிக்கையில் இருக்கிறது எங்கள் நிலம். ஆபத்தும் அழிவும் அதை சூழ்கிறது. முடியுமானவரை நமது உரிமைக்காக வேலை செய்வோம். ஒரு காலத்தில் நாங்கள் சந்திப்போம் அண்ணன்களே.முடிக்க முடியாத துயருடன் என் கடிதத்தை முடித்துக் கொள்கிறன்.

மிக்க அன்போடு தம்பி தீபச்செல்வன்

மகிழ்ச்சி திரைப்படம் – எளிமையின் அழகியல்.




கோடானுகோடிகளில் தயாரித்து..ஊரில் உள்ள அத்தனை திரையரங்குகளையும் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து..சொந்த தொலைக்காட்சிகளில் நொடிக்கொடி விளம்பரம் செய்து….ஊரை கொள்ளையடிக்கும் சுரண்டலின் மற்றொரு வடிவமாக திரைக்கலையை மாற்ற முயற்சிகள் நடக்கும் இவ்வேளையில் மிக எளிமையாக …எவ்வித ஆர்பார்ட்டமும் இல்லாமல் மகிழ்ச்சி திரைப்படம் வெளிவந்திருப்பதே மகிழ்ச்சிதான்.

.

எழுத்தாளர் நீல.பத்மாபனின் தலைமுறைகள் நாவல்தான் மகிழ்ச்சியாக மலர்ந்திருக்கிறது. ஒரு புதினத்தை திரைமொழியின் சட்டகங்களுக்குள் அடக்குவது என்பது மிக எளிதான விஷயமல்ல. படிக்கும் போது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நாவல்கள் திரைமொழியாக விரியும் போது மிகப் பெரிய ஏமாற்றத்தினை அளிப்பதாக இருந்திருக்கின்றன. வாசகன் மனநிலையை தக்க வைத்து நகர்த்திச் செல்லும் புதினப் படைப்பாளியின் உத்திகள் அப்படியே திரைக்கதை ஆசிரியருக்கும் பொருந்தவன அல்ல. புதினத்தினை திரைமொழியாக்கும் போது ஏற்படும் சிக்கல்களை வெற்றிக் கொள்வது என்பது சவாலான காரியம் . சவாலினை எதிர்க்கொண்டு துணிந்து களம் இறங்கியுள்ள வ.கெளதமனை நாம் மனதார பாராட்டலாம்.

.

தொன்ம கதையொன்றின் நம்பிக்கையிலிருந்து கதை புறப்படுகிறது . தொன்ம கதை விவரிப்பிற்கு பயன்படுத்தப் பட்ட ஒவியங்களின் நேர்த்தியில் இருந்தே படம் நம்மை ஆக்கிரமிக்க துவங்குகிறது. சகோதர –சகோதரி பாசத்தினை காலங்காலமாக நாம் திரைப்படங்களில் சந்தித்து வருகிறோம். எத்தனை முறை நம் முகத்தினை கண்ணாடியில் நாம் பார்த்தாலும் அலுக்காதததை போல…நம் வாழ்க்கையை நாம் மீண்டும் ..மீண்டும் பல்வேறு கோணங்களில் இருந்து தரிசிக்கும் போது ஆர்வமடைகிறோம். இன்றளவும் பாசமலர் நம்மை கண் கலங்கத்தான் வைக்கிறது. அதே போலத்தான் மகிழ்ச்சியும். கொண்டாடி வளர்த்த பெண் புகுந்த வீட்டில் கொடுமைக்கு உள்ளாகி திண்டாடிப் போகையில் அவளது உயிருக்குயிரான சகோதரன் என்ன முடிவு எடுக்கிறான் என்பதுதான் திரைக்கதையின் ஒரு வரி .

.

விழிகளை குளிர வைக்கும் பசுமை நிறைந்த நாகர்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் திரைப்படம் படமாக்கப்பட்டிருப்பது திரையை அழகாக்குகிறது . பசுமையாய் விரிந்து கிடக்கும் இயற்கையை ஒளிப்பதிவாளர் அப்படியே அள்ளி வாரி வழங்கி இருக்கிறார். ஒவ்வொரு காட்சியின் படிமமும் இயற்கையின் அழகோடு படமாக்கப் பட்டிருப்பது அழகு. சகோதரியின் மீது அளவற்ற அன்பினை கொண்டிருக்கும் கதையின் நாயகனாக இயக்குனர் கெளதமன். முதன் முறையாக கதாநாயகனாக நடிக்கும் போது ஏற்படும் படபடப்பு அதிசயமாக கெளதமனிடம் காணமுடியவில்லை. அதீதமாக உணரப்பட்டு விடக் கூடிய சோகக் காட்சிகளில் கூட அளவாகவே உணர வைத்திருக்கும் கெளதமனின் சாமர்த்தியம் நமக்குப் புரிகிறது. தன் உயரத்தினை புரிந்துக் கொண்டு நேர்த்தியாக கெளதமன் செயல்பட்டிருப்பது நம்மை கவருகிறது. சாதீய இறுக்கங்களினால் காயப்படுத்தப்படும் பாத்திரமாக செந்தமிழன் சீமான் வருகிறார். சீமானின் பெருங்கோபமும் ,பேரன்பும் வெளிபடும் வகையில் அவரது கதாபாத்திரம் மிளிர்கிறது . கோபம் மிகுந்த காட்சிகளில் சீமானின் ஆவேசம் அடங்க மறுக்காமல் பிறீடுவதை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்கள். சமூக இழிவுகளை துடைத்தெறிய துடிக்கும் சீமான் தன் நண்பனிடம் அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வாய்..மிக தெளிவாய் துணிவுடன் ஒரு நொடியில் முன் வைக்கும் கோரிக்கை நம்மை கைத்தட்ட வைக்கிறது . மற்ற படங்களில் ஒப்பிடுகையில் அஞ்சலியின் கவர்ச்சி சற்றே அதிகம் என்றாலும் அவரின் விதவிதமான முக பாவனைகள் அழகு.

.

நம் வாழ்க்கையில் நாம் பெண்களுக்கென அளித்துள்ள இடத்தினை எதனாலும் அளவிட முடியாது. பெண்களை சார்ந்தே சமூகம் இயங்கிறது. ஆணாதிக்க சமூகம் வரையறுத்து வைத்துள்ள சங்கிலி பிடியில் இருந்து பெண் விடுதலைப் பெற எத்தனை விதமான போராட்டங்களை …அவதூறுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது..? .. கதாநாயகனின் சகோதரி மேல் அவரது கணவன் நிகழ்த்தும் மூர்க்கமான வன்முறையில் இருந்து விடுதலைப் பெற சாவினையும் தேர்ந்தெடுக்கிறாள். ஆனால் தற்கொலை முயற்சியினை காரணங்காட்டி நிரந்தரமாக அவளது பெற்றோர் வீட்டிற்கே துரத்தி விடுகின்றான் கணவன் . எதனால் தான் தண்டிக்கப்படுகிறோம் என தெரியாத நம் வீட்டின் பெண்கள் போலவே அவளும் இருக்கிறாள். தன் சகோதரிக்காக காதலையும் இழந்து நிற்கும் கதாநாயகனிடம் அவனது புரட்சிகரமான தீர்வினை அறியும் அவனது முன்னாள் காதலி தற்போது வேறு ஒருவரின் மனைவியாக வரும் அஞ்சலி “ எல்லாம் முன்னரே நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் “ என வலியோடு சொல்லும் போது நம் சொந்த வாழ்க்கையை அப்படியே ஒரு நொடிக்குள் மீள் பார்வை பார்த்து விடுகிறோம்.குறிப்பாக கதாநாயகனின் தந்தை தன் மகளின் திருமணத்திற்காக விற்று விடப்போகும் நிலத்தில் ..காற்றிலாடும் பசும் நெற்கதிர்களை கட்டி அணைத்தவாறே கண்கலங்கும் காட்சி கவிதை . கண்கலங்கி விட்டேன்.

.

வித்யாசாகரின் இசையில் அறிவுமதி அண்ணன் எழுதிய ‘உச்சுக் கொட்ட’ என்ற பாடலும் வைரமுத்து எழுதிய ‘ ஊத்துத் தண்ணி ஆத்தோட ‘ என்ற பாடலும் சிறப்பாக இருக்கின்றன. படத்தொகுப்பும் , ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக இருக்கின்றன.

.

படத்தில் குறைகளே இல்லையா என்றால்…நுட்பமான குறைகள் இருக்கின்றன. பிரகாஷ்ராஜினை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம். கதாநாயகனின் தங்கை திருமணம் ஒரு போட்டோ மூலமாகவும், சட்டென வந்துப் போகும் ஒரு வசனம் மூலம் வந்துப் போவது சற்று குழப்பத்தினை ஏற்படுத்துகிறது. கால மாற்றங்களை காட்சிமயப்படுத்துதலில் சற்று குழப்பங்கள். விடுங்கள். இப் படத்தின் திரைமொழி முன் வைக்கும் அரசியல் இக் குறைகளை காணாமல் அடித்து விடுகிறது . இறுதி காட்சியில் சீமானின் மகனாக வரும் ‘ பிரபாகரன்’ இயக்குனரின் மாறா இனப் பற்றை காட்டுகிறது. சாதிக்காக துடிக்காமல் …சாதிக்க துடியுங்கள் என்றும்..ஓடாத மானும்..போராடாத இனமும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என்றும் மிதமான குரலில் அழுத்தமாக உரைத்து படத்தினை முடித்து வைக்கிறார் சீமான்.

.

வ.கெளதமன் என்ற இளம் படைப்பாளி ஒரு வாழ்க்கையை திரைப்படமாக நுட்பமான காட்சிகளால் உருவாக்கி நம் முன்னால் வைத்திருக்கிறார். சாதீயத்தினை உடைக்க துணியும் புரட்சிக்கரமான கதை இது. ஆடம்பரங்கள் இல்லாமல் ..ஒரு எளிய திரைமொழி மூலம் ஒரு வலிமையான கருத்தினை முன் வைக்கிறார் கெளதமன். நம் வாழ்வியலுக்கு சற்றும் பொருத்தமில்லாத கேடு கெட்ட குப்பைகளை திரைப்படங்களாக்கி திரையரங்குகளை குப்பை தொட்டிகளாக பயன்படுத்தும் ‘தந்திரன்ங்களுக்கு’ மத்தியில் ‘மகிழ்ச்சி’ நம்மை ஆறுதல் படுத்துகிறது.

.

மகிழ்ச்சி போன்ற படங்கள் வெற்றி பெறுவதன் மூலம் தமிழ் திரை உலகம் புதிய வெளிச்சங்களை தன் மீது பாய்ச்சிக் கொள்ள வழிப்பிறக்கும் என்பது எனது ஆழமான நம்பிக்கை. உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி போன்ற தமிழர் வாழ்வியலை முன் வைக்கும் தமிழுணர்வு மிக்க படைப்பாளர்களின் திரைப்படங்களை கொண்டாட வேண்டும் . கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாகி பண்பாட்டு சிதைவிற்குள்ளாகி இருக்கும் நம் தமிழினம் மரபு சார்ந்த வாழ்க்கையை முன் வைக்கும் இது போன்ற படைப்புகளை அங்கீகரிப்பதன் மூலமாக தன்னைத் தானெ மீட்டுருவாக்கம் செய்து கொள்ளும் முயற்சிகளை துவங்கும் என நம்பலாம். இன்றைய உலகமயமாக்கலின் விளைவாக எண்ணற்ற குடும்பங்கள் சிதைவுறும் இக் காலக்கட்டத்தில் மகிழ்ச்சி திரைப்படம் நம் முன்னால் நிறுவ முயலும் பாசமும் … அது எழுப்பும் உணர்வும் மிக முக்கியமானவை.நெகிழச் செய்பவை.

தலைமுறைகளை தாண்டியும் பசுமையும் ,பாசமும் நிறைந்த வாழ்க்கை ஈரத்தோடு இன்னும் சாரம் குறையாமல் இருக்கின்றது என்பதை கணிணித் திரைகளில் உலகினை ஆண்டுக் கொண்டிருக்கும் இந்த தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டும் வாழ்வியல் பாடமாக மகிழ்ச்சி திரைப்படம் இருக்கிறது. இனப்பற்று மிக்க படைப்பாளியான கெளதமனும்..படத்தினை தயாரித்த அதிர்வு திரைப்பட்டறை மணிவண்ணனும் வரவேற்கப் பட வேண்டியவர்கள். வரவேற்கிறோம்.

.

மகிழ்ச்சி .வெல்லும்

வென்றாக வேண்டும்.

மகிழ்ச்சி.

கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் :


கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் :

சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்கள் கூட்டறிக்கை


வரலாறு நெடுகிலும் படைப்பாளிகள், கலைஞர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவுமே சார்புநிலை எடுத்திருக்கிறார்கள். ரஷ்யப் புரட்சியைச் சாட்சியமாக இருந்து கண்டு சொல்ல, அமெரிக்க எழுத்தாளர் ஜோன் ரீட் மொஸ்கோ சென்றார். ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் குடியரசுவாதிகளுக்கு ஆதரவாகச் சார்புநிலையெடுத்து, அவர்களுக்காகப் போராட ஸ்பெயினுக்கு விரைந்தனர் எர்னஸ்ட் ஹெமிங்வே, ஜோர்ஜ் ஓர்வெல், கிறிஸ்ரோபர் கோட்வெல் போன்ற படைப்பாளிகள். வியட்நாம் மக்களுக்கு ஆதரவாக, அமெரிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடினார்கள் தத்துவவாதிகளான பேர்ட்ரண்ட் ரஸ்ஸல், ழீன் போல் ஸார்த்தர் போன்றோர். ஈராக் யுத்தத்தின்போது, ‘அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகை அழிக்க வந்த ஒரு பிசாசு’ எனத் தனது நோபல் பரிசு உரையில் பிரகடனப்படுத்தினார் நாடகாசிரியரான ஹரோல்ட் பின்ரர்.

படைப்பாளிகள், கலைஞர்கள் எந்த மதிப்பீடுகளுக்காக நிற்கிறார்கள்? இவர்கள் கருத்துச் சுதந்திரத்திற்காகத் தம்மை உறுதியாக நிலைநிறுத்திக்கொண்டவர்கள். ‘வாளை விடவும் எழுதுகோல் வலிமையானது’ என்று நிரூபித்தவர்கள்.

சிறிலங்காவில் எழுதுபவர்கள் தேர்ந்துகொள்ள இன்று என்ன இருக்கிறது? லசந்த போன்ற மனச்சாட்சியுள்ள சிங்கள, தமிழ்ப் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகிறார்கள். இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் தமது உயிராபத்துக் கருதி சிறிலங்காவிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். மாற்றுக் கருத்து ஊடகங்கள் அனைத்தும் தாக்கப்படுகின்றன. கலைஞர்கள் காணாமல் போனோராக அறிவிக்கப்படுகிறார்கள். படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பில்லாத நாடு சிறிலங்கா என உலக ஊடகங்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றன.

தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினைப் பயங்கரவாதமாகச் சித்திரித்து, தமிழின அழிப்பை நடத்தி முடித்துள்ளது சிறிலங்கா பயங்கரவாத அரசு. தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை அழிக்க எடுத்த இராணுவ நடவடிக்கையின்போது, சர்வதேச யுத்த விதிகளை மீறி, தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மூலம் போராளிகளையும் தமிழ் மக்களையும் வகைதொகையின்றிக் கொலைசெய்தும், பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்தவர்களை மண்மூடிக் கொன்றும், சரணடைந்தவர்களைச் சல்லடையாக்கி நரபலியாடி நின்றது இந்தச் சிங்களப் பயங்கரவாத அரசு. யுத்தம் முடிவடைந்த பின்பும் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு சாட்சியங்கள் இல்லாமல் ஆக்குவதற்காக, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை யுத்தபூமியில் பார்வையிட தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருகிறது.

சிறிலங்கா அரசினால் நிகழ்த்தப்பெற்ற போர்க்குற்றங்களும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டு, சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்கப்படவேண்டும் என்று உலகின் மனித உரிமை அமைப்புக்கள், டப்ளின் தீர்ப்பாயம் போன்ற நீதியமைப்புக்கள் தொடர்ந்தும் குரலெழுப்பிவருகிறன.

தமிழர்களின் குருதியில் தோய்ந்துபோய் இருக்கும் இனவெறிச் சிங்கள அரசு, நீதிக்கான தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள, தனது நிரந்தரச் செயற்பாடான பொய், ஏமாற்று, வஞ்சக நடிப்பு ஆகியவற்றை மீண்டும் அரங்கேற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசியல் களத்தில் மட்டுமல்லாது, தமது பொருளியல் நலன் கருதிய வகையில் கலை, இலக்கியம், விளையாட்டு, கேளிக்கை ஆகியவைகளின் மூலம் தனக்கான அதிகார வெளியைச் சிறிலங்கா அரசு ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறது.சிறிலங்கா பயங்கரவாத அரசின் இந்தத் திட்டத்தின் சங்கிலித் தொடர்ச் செயற்பாடுகளாகக் கொழும்பில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழா, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கேளிக்கை, சிறிலங்கா இராணுவத்தினர்களுடனான இந்திய நடிகர்களின் கிறிக்கெற் விளையாட்டு ஆகிய களியாட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன.

சிங்கள மேலாதிக்கத்தால் இறுகிப்போன சிறிலங்கா அரசு, பல்வேறு மனித உரிமை அமைப்புக்களைக் கொழும்பில் அனுமதிக்க மறுத்துவரும் நிலையில், தனது பகை இனத்தின் இலக்கிய மாநாட்டை, அதுவும் உலகெங்கிலுமிருந்து திரட்டப்பட்ட சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டைக் கொழும்பில் நடத்த அனுமதித்திருக்கிறது என்றால், சிங்கள அரசிற்கு அதனால் ஏற்படும் அரசியல் அனுகூலம்தான் இதற்கான அடிப்படையாக இருக்குமே தவிர, தமிழ் எழுத்தாளர்களது செயற்பாட்டு நலன்களின்பால் கொண்ட அக்கறையாக இருக்க முடியாது.

2011 ஜனவரியில் கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்துவதற்கான அதனது ஏற்பாட்டாளர்களின் ஜனநாயக உரிமையை, மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள எழுத்தாளர்கள் கலைஞர்கள் எனும் வகையில் நாங்கள் மதிக்கிறோம் என்றாலும், இன்றைய நிலையில் சிறிலங்கா பயங்கரவாத அரசினால், தன் நலன் சார்ந்து உருட்டப்படும் சதுரங்கக் காய்களாகவே இந்த எழுத்தாளர்கள் ஆகிப்போவார்கள் என்பதற்கும் அப்பால் வேறெதுவும் நிகழப்போவது இல்லை என்றும் நாங்கள் கருதுகிறோம். சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்களை மாநாட்டில் பங்குகொள்ள அனுமதிப்பதன் மூலம் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள் அனைவரும் தனது பக்கமே எனும் தோற்றப்பாட்டினை சிறிலங்கா அரசு தனக்கான அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்க முனையலாம். இதற்கு நாம் எவரும் பலியாகிவிடக்கூடாது.

இன்னும் உலர்ந்துவிடாத எமது மக்களின் குருதிச் சுவடுகளின் மீதும், எமது பெண்களதும் எமது பச்சிளம் குழந்தைகளினதும், முதியவர்களினதும் மரணித்த, எரியூட்டப்பட்ட உடலங்களின் மீதும் நடத்தப்படும் சிறிலங்கா அரசின் அரசியல் நாடகத்திற்கு துணைபோகக் கூடிய வகையில், நடைபெற்ற மனிதப் பேரழிவுக்குக் காரணமான சிறிலங்கா கொடுங்கோல் அரசு குறித்த எந்த நிலைப்பாட்டையும் முன்வைக்காத, இந்தச் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை எல்லா வகையிலும் புறக்கணிப்பதே மனச்சாட்சியுள்ள படைப்பாளிகளாக, கலைஞர்களாக உள்ளவர்களது வரலாற்றுக் கடமையாகும் என நாங்கள் கருதுகிறோம்.

நீதியின்மேல் பசி தாகம் உடைய படைப்பாளிகள், கலைஞர்கள் தார்மீக நிலையில் மனிதகுல மனச்சாட்சியாகவே இருப்பவர்கள். அநீதிகளை, சிறுமைகளைக் கண்டு பொங்குபவர்கள். நொந்துபோன மக்கள் வலியின் குரலை ஓங்கி ஒலிப்பவர்கள். நீதிக்காக அதிகாரத்தை எதிர்ப்பவர்கள். வரலாறு நெடுகிலும் நிமிர்ந்து நிற்கும் இந்தத் தார்மீக அடிப்படைகளில் நின்று எழுத்தாளர்களாகவும் கலைஞர்களாகவும் நாங்கள் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நிராகரிக்கிறோம்.

கோவை ஞானி கோட்பாட்டாளர், இந்தியா எஸ். வி. ராஜதுரை கோட்பாட்டாளர், இந்தியா ஏ. ரகுநாதன், திரைப்படக் கலைஞர், பிரான்ஸ் தமிழவன் கோட்பாட்டாளர், இந்தியா நா. முத்துமோகன் கோட்பாட்டாளர், இந்தியா நாஞ்சில்நாடன் நாவலாசிரியர், இந்தியா பொன்னீலன் நாவலாசிரியர், இந்தியா இன்குலாப் கவிஞர், இந்தியா சிற்பி பாலசுப்ரமணியம் கவிஞர், இந்தியா புவியரசு கவிஞர், இந்தியா பா. செயப்பிரகாசம் சிறுகதையாசிரியர், இந்தியா கலாப்ரியா கவிஞர், இந்தியா பழமலய் கவிஞர், இந்தியா சேரன் கவிஞர், கனடா மாலதி மைத்ரி கவிஞர், இந்தியா மகேந்திரன் கோட்பாட்டாளர், இந்தியா கவிதாசரண் பதிப்பாளர், இந்தியா தேவிபாரதி எழுத்தாளர், இந்தியா புனித பாண்டியன் இதழாளர், இந்தியா காமராசன் பொதுச்செயலாளர்,கலை இலக்கியப் பெருமன்றம், இந்தியா கௌதம சித்தார்த்தன் பதிப்பாளர், இந்தியா அசோக் யோகன் பதிப்பாளர், அசை, பிரான்ஸ் காலம் செல்வம் கவிஞர், பதிப்பாளர், கனடா க. முகுந்தன் இதழாசிரியர், மௌனம், பிரான்ஸ் சுகிர்தராணி கவிஞர், இந்தியா அரசெழிலன் இதழாளர், நாளை விடியும், இந்தியா க. விஜயகுமார் பதிப்பாளர், இந்தியா நிழல் திருநாவுக்கரசு பதிப்பாளர், இந்தியா அ. விஸ்வநாதன் பதிப்பாளர், பதிவுகள், இந்தியா கே. வி. ஷைலஜா பதிப்பாளர், இந்தியா வேனில் கிருஷ்ணமூர்த்தி பதிப்பாளர், இந்தியா அய்யநாதன் ஊடகவியலாளர், இந்தியா புகழேந்தி ஓவியர், இந்தியா பொள்ளாச்சி நசன் ஆவணக்காப்பாளர், இந்தியா கி. பி. அரவிந்தன் கவிஞர், பிரான்ஸ் தமிழ்நாடன் கவிஞர், இந்தியா கண. குறிஞ்சி பதிப்பாளர், இந்தியா பொதியவெற்பன் பதிப்பாளர், இந்தியா எ. நாராயணன் இதழாளர், இந்தியா ம. செந்தமிழன் ஊடகவியலாளர், இந்தியா அமரந்தா மொழிபெயர்ப்பாளர், இந்தியா க. வாசுதேவன் கவிஞர், பிரான்ஸ் மே. து. ராசுகுமார் ஆய்வாளர், இந்தியா செழியன் திரைப்பட ஒளிப்பதிவாளர், இந்தியா தளவாய் சுந்தரம் ஊடகவியலாளர், இந்தியா பாலா கார்டூனிஸ்ட், இந்தியா பாஸ்கர் சக்தி எழுத்தாளர், இந்தியா ஜனநாதன் திரைப்பட இயக்குநர்,இந்தியா அழகிய பெரியவன் சிறுகதையாசிரியர், இந்தியா எஸ். சிறிதரன் சிறுகதையாசிரியர், ஐக்கிய அமெரிக்கா ராஜுமுருகன் திரைப்பட இயக்குநர், இந்தியா யுகபாரதி திரைப்பட பாடலாசிரியர், இந்தியா ஏக்நாத் ஊடகவியலாளர், இந்தியா பிரேமா ரேவதி ஊடகவியாலாளர், இந்தியா லெனின் ஊடகவியலாளர், இந்தியா மு.சந்திரகுமார் விமர்சகர், இந்தியா முனைவர் பஞ்சாங்கம் விமர்சகர், இந்தியா தமிழியம் சுபாஷ் திரைப்பட இயக்குநர், நோர்வே ஆ. சிவசுப்ரமணியன் ஆய்வாளர், இந்தியா டானியல் ஜீவா சிறுகதையாசிரியர், கனடா ச. பாலமுருகன் நாவலாசிரியர், இந்தியா நிழல்வண்ணன் மொழிபெயர்ப்பாளர், இந்தியா பேராசிரியர் கோச்சடை மொழிபெயர்ப்பாளர், இந்தியா எஸ். வேலு விமர்சகர், இங்கிலாந்து சன். தவராசா விமர்சகர், ஸ்விட்சர்லாந்து டி. எஸ். எஸ். மணி பத்திரிக்கையாளர், இந்தியா இரா. முருகவேள் மொழிபெயர்ப்பாளர், இந்தியா குட்டி ரேவதி கவிஞர், இந்தியா லெனின் சிவம் திரைப்பட இயக்குநர், கனடா அருள் எழிலன் பத்திரிக்கையாளர், இந்தியா ஆர். ஆர். சீனிவாசன் ஆவணப்பட இயக்குநர், இந்தியா வளர்மதி நாடகாசிரியர், இந்தியா அறிவன் விமர்சகர்,இந்தியா நடராஜா முரளிதரன் பதிப்பாளர், கனடா ஜமாலன் கோட்பாட்டாளர், சவூதி அரேபியா ஹெச். பீர் முகமது கோட்பாட்டாளர், இந்தியா சுப்ரபாரதி மணியன் நாவலாசிரியர், இந்தியா மெலிஞ்சிமுத்தன் கவிஞர், கனடா பெருமாள் முருகன் நாவலாசிரியர், இந்தியா ரோஸா வசந்த் விமர்சகர், இந்தியா ரூபன் சிவராஜா வில்லிசைக் கலைஞர், நோர்வே வி. உதயகுமார் மொழிபெயர்ப்பாளர், இந்தியா ஆர். பாலகிருஷ்ணன் மொழிபெயர்ப்பரளர், இந்தியா லிங்கராஜா வெங்கடேஷ் விமர்சகர், இந்தியா பாமரன் விமர்சகர், இந்தியா அருள்மொழிவர்மன் விமர்சகர், கனடா ரஃபேல் கோட்பாட்டாளர், கனடா சிவதாசன் இதழாளர், கனடா இரவி அருணாசலம் சிறுகதையாசிரியர், இங்கிலாந்து எம். சி. லோகநாதன் கவிஞர், டென்மார்க் பா. சிறிஸ்கந்தன் விமர்சகர், கனடா டி. தயாநிதி நாடகக் கலைஞர், பிரான்ஸ் அ. முருகையன் கல்வெட்டாய்வாளர், பிரான்ஸ் நாச்சிமார்கோவிலடி ராஜன் வில்லிசைக் கலைஞர், எழுத்தாளர், யேர்மனி சாந்தினி வரதராஜன் எழுத்தாளர், யேர்மனி முல்லை அமுதன் கவிஞர், இங்கிலாந்து அய்யனார் விஸ்வநாத் சிறுகதையாசிரியர், இந்தியா கவிமதி கவிஞர், துபாய் பொன்.சந்திரன் விமர்சகர், துபாய் பாரதி தம்பி ஊடகவியலாளர், இந்தியா ஜென்ராம் ஊடகவியலாளர்,இந்தியா அன்பாதவன் கவிஞர், இந்திய அடூர் ஷா நவாஸ் ஆவணப்பட இயக்குநர், இந்தியா சச்சிதானந்தன் சுகிர்தராஜா ஆய்வாளர், எழுத்தாளர், இங்கிலாந்து கௌதமன் திரைப்பட இயக்குர், இந்தியா ஜெயபாஸ்கரன் விமர்சகர், இந்தியா குணா திரைப்பட இயக்குநர், பிரான்ஸ், கஜேந்திரன் ஊடகவியலாளர், இந்தியா கழனியூரான் நாட்டுப்புறவியலாளர், இந்தியா ஈரோடு தமிழன்பன் கவிஞர், இந்தியா அ. முத்துக்கிருஷ்ணன் விமர்சகர், இந்தியா தொ. பரமசிவம் ஆய்வாளர், இந்தியா சேரன் திரைப்பட இயக்குநர், இந்தியா தங்கர்பச்சான் திரைப்பட இயக்குநர், இந்தியா ஓவியா விமர்சகர், இந்தியா தமிழ்நதி கவிஞர், கனடா ராம் திரைப்பட இயக்குநர், இந்தியா இராஜேந்திர சோழன் சிறுகதையாசிரியர், இந்தியா மா. மதிவண்ணன் கவிஞர், இந்தியா என். டி. ராஜ்குமார் கவிஞர், இந்தியா பாரதி கிருஷ்ணகுமார் ஆவணப்பட இயக்குநர், இந்தியா வீ. அரசு ஆய்வாளர், இந்தியா அ. மங்கை நாடகாசிரியர், இந்தியா சிபிச்செல்வன் கவிஞர், இந்தியா தா. பாலகணேசன் கவிஞர், பிரான்ஸ் அஜயன் பாலா சிறுகதையாசிரியர், நடிகர், இந்தியா தேடகம் தோழர்கள், தேடகம், கனடா கீற்று நந்தன் பதிப்பாளர், இந்தியா நேமிநாதன் எழுத்தாளர், இங்கிலாந்து மு. புஷ்பராஜன் கவிஞர், இங்கிலாந்து யமுனா ராஜேந்திரன் கோட்பாட்டாளர், இங்கிலாந்து இ. பத்மநாப ஐயர் பதிப்பாளர், தமிழியல், இங்கிலாந்து.

கூட்டறிக்கை ஒருங்கிணைப்பாளர்கள் மு. புஷ்பராஜன், இங்கிலாந்து காலம் செல்வம், கனடா கி. பி. அரவிந்தன், பிரான்ஸ் யமுனா ராஜேந்திரன், இங்கிலாந்து இ. பத்மநாப ஐயர், இங்கிலாந்து கண. குறிஞ்சி, இந்தியா அருள் எழிலன், இந்தியா கீற்று நந்தன், இந்தியா.

இலங்கையில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இலங்கைவாழ் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்களை இவ்வறிக்கையில் இணைத்துக்கொள்ள நாங்கள் முனையவில்லை என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

என் அண்ணன் பாடல் – நெஞ்சுருக்கும் நல்லிசை.



.

காற்று குளிராய் வீசுகிறது. அனேகமாக மழை வரலாம். சன்னல் கதவுகள் வேகமாக படபடத்துக் கொண்டன. குளிர் காற்று அறைக்குள் வரட்டும் என கருதி சன்னல்களை திறந்து வைத்து கொக்கிகள் போட்டேன். அறையெங்கும் குளிர் பரவியது. கொஞ்சம் ஆழ்ந்து சுவாசித்துப் பார்த்தேன். மீண்டும் அந்த பாடலை கேட்கலாம் போலிருந்தது. நேற்று அமெரிக்காவில் இருந்து அருமை நண்பர் பாக்யராசன் அந்த பாடலுக்கான சுட்டியை அனுப்பி அவசியம் நான் கேட்டாக வேண்டும் என்று பணித்தது முதல் இந்த நொடி வரை அந்த பாடலை பல முறை கேட்டு விட்டேன். பாடலை கேட்ட முதல் முறையில் அந்த பாடல் கண்ணனுக்கானது இல்லை என்பது மிகத் தெளிவாக புரிகிறது. பாடலைக் கேட்கும் பலரும் இப்படித்தான் உணர்ந்துக் கொள்கிறார்கள்.

.

கண் கலங்கிக் கொண்டு இருக்கிறேன். ஆழமாக ஊடுருவி ஆறாத ரணமாய் சதா உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு வலிக்கு தன் தமிழால் மயிலிறகு மருந்து தடவி இருக்கிறார் என் அறிவுமதி அண்ணன். இருட்டின் ஆழத்தில் கிடக்கும் விழிக்கு வெளிச்ச தெளிப்பொன்றை பற்ற வைத்து ஆறுதல் சொல்லும் சொற்களோடு .. வரும் சுதா ரகுநாதனின் குரல் நம்மை அசத்திப் போடுகிறது.


.

ஒரு மனிதனை தொழுது வணங்குதல் என்பது அறிவு நிலைகளுக்கு எதிரானதாக இருக்கலாம். பிம்பங்களினால் எழுப்பப்படும் உருவம் நிலையற்றதாக போகலாம். ஆனால் அவரை சந்தித்தவர்களை நான் சந்திக்கும் போதெல்லாம் அவரைப் பற்றி..அவரோடு இருந்த கணங்கள் பற்றி கேட்டு மீண்டும் மீண்டும் சிலிர்ப்படைகிறேன். அவரது தோற்றம் என் முன்னால் விரிந்துக் கிடக்கிறது. என் படுக்கை அறையில் துவங்கி…. என் அலுவலக அறை வரை அவரது படங்களை ஆசையுடன் மாட்டி வைத்திருந்து என் வாழ்வின் தவிர்க்க முடியாத அம்சமாய் அவரை எனக்குள் மாற்றி வைத்திருக்கிறேன். எதிரிகளால் கூட குறை கூற முடியாத அந்த மனிதனின் நேர்மையையும், ஒழுக்கத்தினையும் கண் கலங்க நினைவு கூர்கிறேன். நான் அந்த மனிதனை நினைக்காத நொடியில்லை. என் மகனை அவரின் படத்தினை காட்டி பெரியப்பா என அவனை அழைக்கச் சொல்லி பெருமைப் படுகிறேன். என் வீட்டின் சிறப்பு நிகழ்வுகளின் போது அவரது படத்திற்கு முன்னால் நிகழ்வுகளை நிகழ்த்திக்கொள்கிறேன். அண்ணனைப் பற்றி ஏதாவது தகவல் உண்டா என கண்கள் முழுக்க ஆர்வத்துடன் கேட்கும் தம்பிகளுக்கு அவர் இருக்கிறார். வருவார் என நம்பிக்கையாய் உண்மையை சொல்கிறேன். அவர் இல்லாத உலகத்தில் நான் வாழ முடியாது என்ற நம்பிக்கை எனக்குண்டு. அவரைப்பற்றிய காணொளிகளை பார்க்கும் போது அவரது கண்களில் மிதக்கும் நம்பிக்கை மிகுந்த கனவுகளை யாராலும் களவாட முடியாது எனக்குள் அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன். அவரைப் பற்றி அவதூறு பேசுபவர்களை..அவரை விமர்சிப்பவர்களை நான் வெறுப்பின் உச்சத்தில் தள்ளுகிறேன். உலகத்தின் அனைத்து தத்துவ சாரங்களிலும் அவரை நான் பொருத்திப் பார்க்கிறேன். இரவு நேரங்களில் தனியே போகப் பயப்படும் என் மகனிடம் பெரியப்பாவினை நினைத்துக் கொண்டே போடா என பெருமைப் பொங்க சொல்கிறேன். எம் இனத்திற்கான நாட்டை அழித்தவர்களையும், அழிக்க துணைப் போனவர்களையும் நான் ஆழ்ந்த வன்மத்துடன் பார்க்கிறேன். வீதிகளில் எப்போதாவது நெகிழி பதாகைகளில் நிற்கும் அவரது உருவத்தினை கண்கலங்க பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.என்னால் இப்படித்தான் வாழ முடியும் என தோன்றுகிறது. அண்ணன் வருவார் என்ற நம்பிக்கைதான் என்னை இயங்க வைக்கிறது. அவரின் சாகசங்களினை யாராவது பெருமைப் பொங்க பேசினாலோ, எழுதினாலோ நான் அவர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவனாகிறேன்.

.

கண்களை மூடுங்கள் . விளக்குகளை அணையுங்கள். அசையாமல் இந்த பாடலை மென்மையாக உள்வாங்குங்கள். ஒற்றை புல்லாங்குழலோடு இதழ் இதழாய் விரியும் பாடலில் உங்கள் மனதை இழப்பீர்கள். சுதாவின் குரலில் ஒழுகும் உயிர் அறிவுமதி தமிழை பற்றி அப்படியே தேசியத் தலைவரை ஸ்தூலமாக நம் கண் முன்னால் நிறுத்திப் போடுகிறது.

“அவன் வருவான்; கண்ணில் மழை துடைப்பான்”

என குரல் உயரும் போது நாம் உடைகிறோம்.

“ பனி மூட்டம் மலையை மூடலாம், வழி கேட்டு பறவை வாடலாம்.”

என குரல் குழையும் போது இதுவரை இறுகிக் கிடந்த இதயத்தின் முடிச்சிகள் ஒன்றொன்றாய் அவிழ்ந்து இறகாகிறது.

.

இந்த பாடலும்..வரிகளும்..இசையும் ஓர் அனுபவம். இசைக்கு உயிர் உண்டு என்பதை மிக நெருக்கமாக உணர வைக்கும் தன்மை இப்பாடலுக்கு இருக்கிறது. எளிய சொற்களில் விரியும் இசை நம்மை ஆட்கொள்கிறது.

பாடலின் ஊடே தொக்கி நிற்கும் நம் தொன்மம் தந்த தாய்மையின் விரல்கள் நம்மை சாந்தப்படுத்துகிறது. கரைகிறோம். உருகுகிறோம். கரைந்து மிஞ்சிய கரைசலில் கண்ணீரின் உப்புத் துகள்கள் மிதக்கின்றன.

.

இந்த பாடல் படத்தின் எந்த சூழலுக்காக எழுதப்பட்டது என்ற இயக்குனரின் நோக்கங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு ..நாம் இந்தப் பாடலை அண்ணன் பாடலாகத் தான் உள்வாங்குகிறோம். அப்படித்தான் அதுவும் உள்ளே போகிறது. உயிரிசை வழங்கிய வித்யாசாகருக்கும்.. குரல் கொடுத்து அனுபவமாய் நம்முள் இறக்கிய சுதா ரகுநாதனுக்கும்., படத்தின் இயக்குனர் கரு.பழனியப்பனுக்கு நன்றிகளும்..பாராட்டுகளும்.

.

அறிவுமதி அண்ணனுக்கு நன்றி எல்லாம் சொல்லப் போவதில்லை.

அவர் அப்படித்தான். நான் இப்படித்தான்.

நாங்கள் இவ்வாறாக.

.

என்ன குறையோ என்ன நிறையோ

திரைப்படம்: மந்திரப் புன்னகை

இசை : வித்யாசாகர்

என்ன குறையோ

என்ன நிறையோ

எதற்கும் நான்

உண்டென்பான்

கண்ணன்

என்ன தவறோ

என்ன சரியோ

எதற்கும் நான்

உண்டென்பான்

கண்ணன்

என்ன வினையோ

என்ன விடையோ

அதற்கும் நான்

உண்டென்பான்

கண்ணன்

அதற்கும் நான்

உண்டென்பான்

கண்ணன்

( என்ன குறையோ )

நன்றும் வரலாம்

தீதும் வரலாம்

நண்பன் போலே

கண்ணன் வருவான்

வலியும் வரலாம்

வாட்டம் வரலாம்

வருடும் விரலாய்

கண்ணன் வருவான்

நேர்க்கோடுவட்டம்

ஆகலாம்

நிழல் கூட

விட்டுப் போகலாம்

தாளாத துன்பம்

நேர்கையில்

தாயாக கண்ணன்

மாறுவான்

அவன் வருவான்

கண்ணில் மழைத் துடைப்பான்

இருள் வழிகளிலே

புது ஒளி விதைப்பான்

அந்தக் கண்ணனை

அழகு மன்னனை

தினம் பாடி வா

மனமே

( என்ன குறையோ )

உண்டு எனலாம்

இல்லை எனலாம்

இரண்டும் கேட்டு

கண்ணன் சிரிப்பான்

இணைந்தும் வரலாம்

பிரிந்தும் தரலாம்

உறவைப் போலே

கண்ணன் இருப்பான்

பனி மூட்டம் மலையை

மூடலாம்

வழி கேட்டு பறவை

வாடலாம்

புதிரான கேள்வி

யாவிலும்

விடையாக

கண்ணன் மாறுவான்

ஒளிந்திருப்பான்

எங்கும் நிறைந்திருப்பான்

அவன் இசை மழையாய்

உலகினை அணைப்பான்

அந்தக் கண்ணனை

கனிவு மன்னனை

தினம் பாடி வா

மனமே

( என்ன குறையோ )

பாடலை பருக: http://www.raaga.com/a/?T0002515

பேரறிவாளன் - துயரக் காற்றில் அலையும் தீபம்.
























பேரறிவாளன் - துயரக் காற்றில் அலையும் தீபம்.

( ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளன் எழுதிய

தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் – என்று நூலை முன் வைத்து)

மனித நாகரிக சமூகம் மேம்பட தனக்குள் வரைந்து கொண்ட அறக்கோடுகள் விழைந்த ஓவியமாய் திகழும் பேரறிவாளன் தூக்குக் கொட்டடியில்.. மரணக் கயிற்றின் நிழலில் நிற்பது நாம் வாழ்க்கையின் மீது அமைத்துக் கொண்டுள்ள அனைத்து சமன்பாடுகளையும் கலைத்துப் போடுகிறது . மனித மாண்புகளின் மீது கட்டப்பட்டுள்ள எளிய மனித வாழ்வின் இருப்பினை பேரறிவாளன் தலைக்கு மேல் ஊசலாடும் தூக்குக் கயிறு சிதைத்துப் போடுகிறது .

மரணத்தின் நிழல் தரும் மன வலி மிக கொடுமையானது. வாழ்வதற்கான பற்றை வைத்துதான் மனித சமூகமே கட்டமைக்கப்பட்டுள்ளது. மாபெரும் ரஷ்ய எழுத்தாளர் தாஸ்தாயெவ்ஸ்கி சைபீரிய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது ஒரு மரணத்தின் வாயில் வரை சென்று திரும்பியதை ‘குற்றமும் தண்டனையும்’ என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார். நாஸி வதை முகாமில் இருந்து தப்பி வந்த யூத இளைஞன் ஒருவரான எலீ வீஸல் என்பவர் தனது அனுபவங்களை எழுதியுள்ள இரவு என்ற சுயசரிதை நாவலும் (தமிழில் வெளிவந்துள்ளது. யூனிடெட் ரைட்டர்ஸ் வெளியீடு ) வாழ்வின் மீது மனிதன் கொண்டுள்ள மாறாப் பற்றை விளக்குகிறது. சிறை வாழ்க்கை குறித்து தோழர் .தியாகு எழுதிய சுவருக்குள் சித்திரங்களும் இத்தகையதுதான்.

உயிர் வாழும் வேட்கை தரும் உணர்வில் தான் மனித சமூகத்தின் இயக்கமே நடைபெறுகிறது. ஒரு மனிதனின் உயிரை எடுப்பதற்கான உரிமை எவருக்கும் ,எதற்கும் இல்லை என உலகச் சட்டங்கள் அனைத்தும் உரத்த குரலில் கூறுகின்றன. ஆனால் சட்டங்களை அமல் படுத்தும் நீதிமன்றங்களுக்கு மட்டும் தண்டனை என்ற பெயரில் ஒரு உயிரைக் கொல்வதற்கு உரிமை இருக்கிறதென்றால் எத்தகைய முரண்பாடு ?

இறுக்கி கட்டப்பட்ட கட்டிடங்களுக்குள் அமர்ந்து கொண்டு ..சட்டப் புத்தகங்களின் காற்புள்ளி, அரைப்புள்ளிக்கெல்லாம் அர்த்தம் தேடுவதுதான் நீதிமன்றத்தின் பணியா என்றால் இல்லை. மாறாக தனி மனித விழுமியங்கள் மேல் கவிழும் இருட்டினை துடைக்கும் வெளிச்ச தெறிப்பாக சட்டங்களும், நீதிமன்றங்களும் மாறி இருந்திருக்க வேண்டும். இன்றளவும் சர்ச்சைகள் நீங்காத வழக்கொன்றின் முடிவு தவறொன்றும் செய்யாத ஒரு எளிய மனிதனின் மரணத்தில் தான் விளையும் என்பது வெட்கக்கேடானது. துயரமானது. பேரறிவாளன் தனது முறையீட்டு மடல்களில் முன் வைத்திருக்கும் எந்த கேள்விக்கும் எந்த அமைப்பிடமிருந்து பதிலில்லை. மூர்க்கமும் , அவசரமும் நிரம்பிய நம் நாட்டு அதிகார கட்டமைப்புகளின் துயரமான விளைவாக மாறி நிற்கிறது பேரறிவாளனின் உயிர்.

அமெரிக்க விடுதலைப் போராட்டக் காலத்தில் அங்கு குடியேறிவர்களுக்காக ஆதரவு குரல் கொடுத்து விடுதலையை ஆதரித்த குற்றத்திற்காக பிரிட்டிஷ் கவிஞர் தெல்வால் (THELWALL) சிறையிலடைக்கப்பட்டார். அப்போது அவர் தன் வழக்கறிஞருக்கு எழுதிய கடிதத்தில் “ என் வழக்கினை நானே உரைக்காவிடில் எனக்கு தூக்குத் தண்டனை கிடைக்கும்” என எழுதி இருந்தார். அதற்கு அவரது வழக்கறிஞர் எழுதிய பதிலில் “ உங்களின் வழக்கினை நீங்களே உரைத்தாலும் தூக்குத் தண்டனை கிடைக்கும்” என கூறியிருந்தார் – இந்த உரையாடல்களில் இருந்து உருவான சொற்றொடர்தான் “ நான் செய்தால் தூக்கிலிடப்படுவேன், செய்யாவிடில் தூக்கிலிடப்படுவேன் “(I’ll be hanged if I do and hanged if I don’t ). அதிகார வல்லாதிக்கத்தின் உச்சக் கட்ட அவல காட்சியின் வடிவம் இந்த சொற்றொடர்தான் அமெரிக்க பெரு நிலத்தின் வல்லாதிக்க அரசாட்சியை வீழ்த்துவதற்கான ஆயுதமாக ,ஆவேசம் மிகுந்த முழக்கமாக அமெரிக்க வீதிகளில் எழுந்தது.

உயர்ந்த மதிற்சுவர்களுக்கு மத்தியில் நாள், கிழமை, மாத வருடம் பேதம் அறியாமல் சிறை அறைகளில் எப்போதும் தேங்கி இருக்கும் வற்றா இருட்டில் ..துளித்துளியாய் கசிகிற வெளிச்சத் துளிகளை கண்களுக்குள் உள்வாங்கி ..வாழ்வின் ஏதோ ஒரு முனையில் திரும்பி விட மாட்டோமா…அதிசயம் நிகழ்ந்து விடாதா என்றெல்லாம் நினைத்துக் கொண்டு கண்கள் பனிக்க காத்திருப்பதன் வலியை பேரறிவாளன் எத்தனை நாள் சுமப்பார்?.. ஒரு ஆயுள் தண்டனைக்கும் அதிகமான நாட்களும் கடந்து..இயல்பான வாழ்க்கையின் எவ்வித சுகங்களையும் அறியாமல் ..அடைப்பட்டு கிடக்கும் பேரறிவாளன் மீதுள்ள குற்றச்சாட்டு – ஒரு கொலைக் குற்றத்திற்கு உதவி செய்ததாக . ராஜீவ் காந்தியின் படுகொலையை ஒரு தனி நபர் படுகொலையாகத்தான் கருதப்பட வேண்டும் என உச்சநீதிமன்றமே முடிவு செய்து விட்ட நிலையில்.. வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் சூழ்ந்துக் கிடக்கிற மரணத்தின் இருட்டில் தான் கழிக்க வேண்டும் என்ற தண்டனை ஒரு நொடியில் தொண்டையை இறுக்கி..கண்களை பிதுக்கி உயிரை கக்குகிற மரண தண்டனையைக் காட்டிலும்...கொடுமையானது.

தனது 19 ஆவது வயதில் சிறை புகுந்த பேரறிவாளனுக்கு இன்று 35 வயது ஆகிறது. தனிமைச் சிறையும், மரண வாசலின் முன்னே ஊசலாடும் தன்மையும் தந்த பரிசினால் கடுமையான உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் என்ற அவரது நூலின் தலைப்பில் உள்ள மடலில் பேரறிவாளன் நெஞ்சுருக்கும் சொற்களோடு தன் பக்கம் உள்ள அனைத்து நியாயங்களையும் ஒரு தேர்ந்த வழக்கறிஞர் போல எடுத்து முன் வைக்கிறார். பக்கங்கள் புரள புரள உண்மைகளும், உண்மைகளை புறந்தள்ளி ஒரு குற்றமற்றவனை பலியிடும் தன்மைகளும் வெளிவந்து நம்மை கண்கலங்க செய்கின்றன. ஒரு எளிய மனிதன் வெகு சுலபமாக கொல்லப்படும் அவலம் நிறைந்த சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் என்ற உணர்வு நம்மை மிகுந்த அச்சத்தில் கிடத்துகிறது. இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் புலனாய்வுத் துறையினரும், ஆளும் வர்க்கத்தினரும், உளவுத்துறையினரும், ஊடக தாக்குதல்களும் சூறையாடிய ஒரு அப்பாவி இளைஞனின் ரத்தக்கறை படிந்திருக்கிறது.

பேரறிவாளன் மீது அரசுத் தரப்பில் வைத்துள்ள குற்றச்சாட்டுக்களில் முக்கிய மாபெரும் குற்றச்சாட்டு என்னவெனில் ராஜீவ் காந்தி கொலையாளி தனுவிற்கு பெல்ட் பாம் செய்ய மின்கலம்(பேட்டரி) அதாவது சாதாரண பெட்டிக் கடைகளில் கிடைக்கும் 9 வோல்ட் பேட்டரி வாங்கிக் கொடுத்து குண்டு தயாரிக்க உதவியது.

ராஜீவ்காந்தி கொலையை விசாரித்த புலனாய்வு குழுவின் தலைமை அதிகாரியாக இருந்து ஒய்வுப்பெற்ற ரகோத்தமன் 10-08-2005 தேதியிட்ட குமுதம் வார இதழிலும்., 31-07-2005 தேதியிட்ட ஜீனியர் விகடன் இதழிலும் “தனு தன் இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டு பெல்டை செய்து கொடுத்தவர் யார் என்று இது நாள் வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை “ என மிக மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

இது நாள் வரை கண்டுபிடிக்கப்படாத ஒரு காரணிக்காக பேரறிவாளன் தலையின் மேல் தூக்குக் கயிறு தொங்குகிறது என்பது எவ்வளவு மோசமான சமூகத்தில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் நாம் வாழ்கிறோம் என்பதற்கு உதாரணம். ஆள்பவர்களும், அதிகாரம் படைத்தவர்களும் நினைத்தால் அப்பாவியான ஒரு எளிய மனிதனை தன் அதிகார கரங்கள் கொண்டு கொன்று விட முடியும் என்கிற நிலையில் தான் நாமெல்லாம் வாழ்கிறோம்.

ராஜீவ்காந்தி கொலைக்கு பிறகு 20-06-1991 ஆம் தேதியில் வெளிவந்த இந்தியா டுடே நாளிதழ் வெளியிட்ட “ராஜீவ் படுகொலை – சதி திட்டம்” தீட்டப்பட்டது எப்படி என்ற கட்டுரையில் பேரறிவாளன் வெடிகுண்டு நிபுணர் எனவும், ராஜீவை கொன்ற தனு கட்டியிருந்த வெடிகுண்டை செய்தவர் என்றும் சித்தரித்து எழுதப்பட்டிருந்தது. புலனாய்வு குழுவினரும், உளவுத் துறையினரும் திட்டம் போட்டு ஊடகங்களில் பரப்பி விட்ட பொய்யான கதைகளால் பேரறிவாளன் குற்றவாளியாக்கப்பட்டு தூக்குத் தண்டனை கைதியாக இன்று மரணக் கொட்டடியில் வாடிக் கொண்டிருக்கிறார். பிறகு இதே இந்தியா டுடே இதழ் 1996 ஆண்டு “துப்பில் துவாரங்கள்” என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரையில் இது நாள் வரை வெடிகுண்டு குறித்து எந்த புலனாய்வும் செய்யவில்லை என கட்டுரை வெளியிட, அதை எதிர்த்து புலனாய்வு துறையினர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது வேறு கதை.

அரசு தரப்பு சாட்சிய ஆவணம். 392 என்ற 07-05-1991 ல் பெறப்பட்டதாக கம்பியில்லா தந்தியில்

( சிவராசன் சென்னையிலிருந்து இலங்கையிலிருக்கும் பொட்டுஅம்மானுக்கு கம்பியில்லாத் தந்தி வழியாக அனுப்பியதாக சொல்லப்படும் சங்கேதச் செய்தியை இடைமறித்து ஆராய்ந்து பார்த்து உருவாக்கிய ஆவணம்) கொலைச்சதி சிவராசன், தனு,சுபா ஆகிய மூவருக்கு மட்டும்தான் தெரியும் என பதிவாகி உள்ளது. இந்த கூற்றை வழக்கினை விசாரித்த நீதிபதிகளும் ஒத்துக்கொண்டுள்ளார்கள். எனவே கொலைச்சதி பற்றி பேரறிவாளனுக்கு எதுவும் தெரியாது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாக இருக்கிறது. “குற்றமனமில்லா செயல் குற்றமென ஆவதில்லை “(actus non facit reum nisi mens sit rea- The intent and the act must both concur to constitute the crime –The act itself does not make a man guilty unless his intention were so –An act does not make one guilty unlees the mind is also guilty) என்ற சட்ட முதுமொழிகேற்ப பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சட்டகோட்பாடுகளின் மீதும், இயற்கை நீதியின் மீதும் அரசியலும், அதிகாரமும் நிகழ்த்திய வன்முறையாக பேரறிவாளனின் வாதங்கள் யாராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புரை (Pachan singh vs State of Punjab) பேரறிவாளன் வழக்கில் பின்னுக்கு தள்ளப்பட்டதில் இருந்து நியாயமும், நீதியும் மட்டுமே தண்டனையையும், விடுதலையையும் முடிவு செய்வன அல்ல என்பது முடிவாகி இருக்கிறது.

பேரறிவாளனுக்கு கிடைத்திருக்கும் தூக்குத் தண்டனை என்பது தடா சட்டத்தின் அடிப்படையில் பெறப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து வழங்கப்பட்டது ஆகும். தடா சட்டம் மிகக் கொடுமையான ஒன்று என்பதிலும், அது அரசியலைப்பு சட்டத்திற்கே முரணானது என்பதிலும் யாருக்கும் இருவேறுபட்ட கருத்துக்கள் இருக்க முடியாது. இக்கருத்தினை அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி சவாண் தடாச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என பாரளுமன்றத்திலேயே ஒத்துக் கொண்டார். (19-08-1994 மாநிலங்களவையில்). போலீஸ் அதிகாரிகளிடம் கொடுக்கப்படும் வாக்குமூலம் சாதாரண சட்டங்களின் படி நீதிமன்ற சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படக்கூடாது. (A confession made to a police officer is irrelevant-sec 25 Indian Evidence Act 1872 ) ஆனால் தடா என்ற ஆட்தூக்கி சட்டத்தின் வாயிலாக( பிரிவு 15 தடா சட்டம்) போலீஸ் அதிகாரிகளிடம் பேரறிவாளன் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் அவருக்கு எதிராக நீதிமன்ற சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தான் நிரபாரதி என்பதற்கு அனைத்து விதமான காரணங்களையும் தன் முறையீட்டு மடல்களில் பட்டியலிடுகிறார் பேரறிவாளன். ஆனால் ஒரு எளிய மனிதனின் நியாயங்களை கேட்பதற்கும், அவரது துன்பச் சூழல்களையும் போக்குவதற்கும், நெடிய சிறை தந்த காயங்களை ஆற்றுவதற்கும் ஆள்வோருக்கு விருப்பமில்லை. அண்ணா நூற்றாண்டு விழாவினை ஒட்டி தன்னை விடுவிக்க கோரி தமிழக முதல்வருக்கு எழுதியிருக்கின்ற முறையீட்டு மடலில் பேரறிவாளனின் ஆழமான புரையோடிப் போன காயத்தின் வலி தெரிகிறது. தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் தானும் தன் குடும்பமும் அனுபவித்து வரும் சொல்லவியலா துன்பத்தினை வடித்து இருக்கிறார் அறிவு. அந்த மடலில் தனக்கென கொள்கை பின்னணி இருந்ததே ஒழிய அரசியல் பின்னணி- செல்வாக்கு ஏதுமில்லை என குறிப்பிடுகிறார். உண்மைதான். பட்டப்பகலில் பத்திரிக்கை அலுவலகத்தினை தாக்கி 3 பேரை கொன்று விட்டு வரும் நபர்களுக்கு கூட மிக எளிதாக விடுதலை கிடைத்து விடும் இந்த நாட்டில் எந்த குற்றமும் செய்யாமல் 15 வருடமாய் சிறையில் வாடும் எளிய நிரபாரதிக்கு நியாயம் கிடைத்து விடுமா ..என்ன.?

பேரறிவாளன் தனது முறையீட்டு மடலில் தன்னை மொழி, இனப் பற்றாளன் என்றும், தொப்புள் கொடி உறவான தமிழீழ மக்கள் படும் இன்னல்களை போக்க உலகத் தமிழர்கள் போல தன்னால் இயன்றதை செய்பவன் எனவும் அடையாளம் காட்டியுள்ளார். இவ்வாறு பிறந்து வாழ்ந்ததுதான் பேரறிவாளன் செய்த ஒற்றை குற்றம். உண்மையான மொழி, இனப்பற்றாளர்கள் ஆளும் அதிகார வர்க்கத்தினரால் கொலைகாரன் ,கொள்ளைக்காரன் என பட்டங்கள் சூட்டி கொல்லப்படுவார்கள். இல்லையெனில் தீவிரவாதி என சிறைப்படுத்தப்படுவார்கள். அதுவும் இல்லையென்றால் அண்ட சராசரங்களையும் ஆட்டிப்படைக்கிற வல்லாதிக்க நாடாக வளர்ந்து வருகிற இந்திய திரு நாட்டின் இறையாண்மை ஒரு எளிய கிராமத்தில் பிறந்து, வளர்ந்து போராடி ஒரு இயக்குனராக உயர்ந்து ..காலத்தின் கோலமாய் இனம் அழிந்த சோகத்தில் இனி அழியாமல் இருக்க ஒரு அமைப்பினை கட்டி.. இளைஞர்களை சேகரித்து ..களமாடி வருகிற செந்தமிழன் சீமானின் தன் சகோதரன் கொல்லப்படுகிறானே என்ற வேதனையில் உதிர்த்த சொற்களில் இருக்கிறது என கூறி சிறையில் போடுவார்கள். வேதனை.

பேரறிவாளனின் தாயார் அற்புதம் அவர்களை நாம் தமிழர் கட்சி நிகழ்வுகளிலும், உணர்வாளர்களின் திருமணங்களிலும் நான் சந்தித்திருக்கிறேன். கண்களில் நிரந்தரமாக தங்கிவிட்ட சோக நிழலினை காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்புடன் பழகும் அற்புத தாய் அவர்கள். வயதான அந்த தாய் தன்னுடைய நிரபாரதியான மகனுக்காக இன்றளவும் ஒரு நெடிய போராட்டத்தினை மேற்கொண்டு வருகிறார். தன்னுடைய மகன் தலையின் மேல் தொங்கிக் கொண்டிருக்கும் தூக்குக் கயிற்றின் நிழலினை அகற்றிட ஒய்வு எடுக்க வேண்டிய வயதில் போராடிக் கொண்டிருக்கிறார் .ஒரு நாள் அவர் என்னிடம் சொன்ன “ ரொம்ப அலைஞ்ச்சிட்டேன்பா” என்ற சொற்கள் என்னை இன்றளவும் தூங்க விடாமல் அலைகழிக்கின்றன. கடுமையான மன உளைச்சலும், நெடிய சிறைவாசம் தந்த சோர்விலும் இருந்தாலும் பேரறிவாளன் சிறையில் ஒரு நன்னடத்தை உடைய மனிதனாக வாழ்ந்து இளநிலை கணி செயல்முறையியல் (B.C.A) படிப்பினை இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைகழகத்தின் மூலம் 3 ஆண்டுகள் படித்து முடித்து பட்டம் பெற்றுள்ளார். அத்தோடு 5 க்கும் மேற்பட்ட சான்றிதழ் கல்வியையும் இந்த துயர் மிகுந்த இடைப்பட்ட காலத்தில் முடித்துள்ளார். பேரறிவாளன் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது அரசு இறுதித் தேர்வில் பள்ளியின் இரண்டாவது மாணவனாக வந்திருந்து ஜேசிஸ் சங்க விருது பெற்றிருக்கிறார். N.C.C என்ற தேசிய மாணவர் படையில் இணைந்திருந்து உயர்நற்சான்றிதழ்களை பெற்றிருக்கிறார். இன்றளவும் சிறை வாழ்க்கையில் சிறையில் உள்ள நூலகத்தினை பராமரித்து வருகிறார். அங்கு வந்திருக்கும் அனைத்து புத்தகங்களையும் வாசித்து விட்டு குறிப்பு எடுத்து வைத்திருக்கிறார். சிறை வாழ்க்கையில் சக கைதிகளுக்கு சான்றான நபராக இருப்பதோடு..சக மனிதர்களின் மீட்சிக்காகவும் உழைத்து வருகிறார். அப்பழுக்கில்லாத அந்த மாமனிதனின் விடுதலையை கோர வேண்டியது மனசாட்சி உள்ள மானுட கடமையாக இருக்கின்றது.

குற்றம் செய்யாத ஒரு எளிய மனிதனை, அவரது வயதான தாயை அலைகழிப்பதும், மரணத்தின் பெயரைச் சொல்லி மிரட்டுவதும்தான் உயர்ந்த மாண்புகள் பெற்றிருக்கும் ஒரு ஜனநாயக நாட்டின் நீதி என்றால் நாம் வாழும் நாடு நாடல்ல என்பதனை நாம் உணர வேண்டும் . தூக்குத் தண்டனையை உலகத்தில் பெரும்பாலான நாடுகள் அகற்றி மனித உரிமைகள் மீதான தங்களது அக்கறையை வெளிப்படுத்தி கொண்டிருக்கும் இவ்வேளையில் இன்றளவும் தூக்குத் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கும் மூர்க்கத்தனமான ,பிற்போக்கு அம்சங்கள் உடைய நீதி பரிபாலன கட்டமைப்பை நாம் பெற்றிருக்கிறோம் என்பது மிகவும் சிந்திக்க வேண்டியது. மரண தண்டனையை ஒழிக்கும் போராட்டத்தின் மிக முக்கியப் புள்ளியாக பேரறிவாளனின் இந்த நூலை கொள்ளலாம்.

தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் என்ற நூலில் மனித உரிமைகள் மீது மிகுந்த அக்கறை காட்டும் நீதியரசர் டி. ஆர்.கிருஷ்ணய்யர் , நீதியரசர் எச்.சுரேஷ் உள்ளீட்ட பல அறிஞர் பெருமக்கள் அணிந்துரை வழங்கியுள்ளார்கள். அணிந்துரைகளின் வாயிலாக வலியுறுத்தப்படும் கருத்துக்கள் மனித உரிமைகள் மீதும், அதன் விழுமியங்கள் மீது ஆர்வம் உள்ளோர் மிகவும் ஆழமாக கற்க வேண்டியவை ஆகும். பல்வேறு சமயங்களில் பேரறிவாளன் எழுதியுள்ள முறையீட்டு மடல்கள், விண்ணப்பங்களின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது. ராஜீவ் கொலை வழக்கில் தான் சிக்குண்ட விதம் குறித்தும், எவ்வாறெல்லாம் விசாரணை என்ற பெயரில் தான் கொடுமைப்படுத்தப்பட்ட விபரங்களையும் இந்த மடல்களில் அறிவு மிக விளக்கமாக எடுத்தியம்பி உள்ளார். அவரது முறையீட்டு மடல்களும், விண்ணப்பங்களும் கெஞ்சல்களும், புலம்பல்களும் நிறைந்த இரங்கத் தக்க மனுக்களாக இல்லை. மாறாக இந்த உலகத்தில் தான் வாழ்வதற்கான உரிமை கோரும் ஒரு மனிதனின் நேர்மையான கோரலாக இருக்கிறது. இந்த நூல் தனிப்பட்ட ஒருவர் தூக்குத் தண்டனையில் இருந்து தப்பி செல்வதற்கான வழியாக விரியவில்லை. மாறாக ஒழிக்கப்பட வேண்டிய மரணதண்டனையை எதிர்க்கவல்ல இயக்கமாகவும் இந்த நூல் விளங்குவது சிறப்பு. இந்த நூல் ஆகாயம் வரை உயர்திருந்து பளபளக்கும் இந்தியாவின் நீதிமன்றங்கள் போற்றும் மாட்சிமை நிறைந்த நீதி பரிபாலனத்தின் மனசாட்சியில் வடுவாக நிலைத்திருக்கிறது.

நூல் முழுக்க அரசு தரப்பின் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் ஆதாரப்பூர்வமாக பதில் அளித்து, சட்டத்தின் முன்பாகவும், இந்த சமூகத்தின் முன்பாகவும் வினாக்களை வைத்து காத்திருக்கிறார் பேரறிவாளன். அவரது விளக்கங்களைப் படித்து இந்திய நீதிமன்றங்களின் இரண்டு புகழ்ப் பெற்ற நீதியரசர்கள் இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார்கள். இந்த ஒற்றை நூலை படித்தால் போதுமானது. பேரறிவாளனின் விடுதலை என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அறியலாம். தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் படித்து.. உணர வேண்டிய உணர்ச்சியாக.. அவரவர் உள் மனச் சான்றினை உலுக்கி எடுக்கும் வினாவாக இந்த நூல் அமைந்திருக்கிறது.

இனத்தின் மேலும், இந்த மொழியின் மீதும் பற்று வைத்து ஒரு முற்போக்கு குடும்பத்தின் மகனாய் பிறந்து தான் எந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டோம் என்று இன்றளவும் யோசித்துக் கொண்டிருக்கிற துயரோடு வாழும் பேரறிவாளனின் ஆன்மா நீதிபதி கிருஷ்ணய்யர் சொன்னது போல உயர்வானது. பேரறிவாளனின் துயர் மிகுந்த இருட்டில் உலக வெளிச்சம் பட வேண்டும் . உலகமெங்கும் இயங்கும் மனித உரிமை அமைப்புகளுக்கு பேரறிவாளனின் துயர் சேர வேண்டும். இந்த புனிதக் கடமையை உலகத் தமிழர்கள் தாங்களாக முன் வந்து செய்ய வேண்டும். இந்த நூல் ஆங்கிலத்திலும் மொழிப்பெயர்க்கப்பட்டு கிடைக்கிறது.

ஒரு மனித உயிரை பறிக்க நம் நாட்டு சட்டங்களும், நீதிமன்றங்களும் வைத்திருக்கும் அளவு கோல்கள் மிகவும் அபாயகரமானவை. பெரும்பாலான சமயங்களில் குற்றமற்றவர்களே சிக்கிக் கொள்ளும் வகையில் தூக்குமேடையின் உயரம் மிக அருகில் இருக்கிறது. இதனால் தான் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. மரணவாசல் அருகே வரை சென்று விட்டு இன்று தமிழ்த் தேசிய அறிவுலகின் ஆளுமையாக திகழ்ந்து வரும் தோழர். தியாகு இதற்கு மிகச் சரியான உதாரணம். கண்டிப்பாக பேரறிவாளனுக்கு சீர்க்கெட்டு கிடக்கும் தமிழ் உலக சூழலில் தேவை இருக்கிறது. நிச்சயமாக பேரறிவாளன் எங்களுக்கும் , எம் தமிழ்ச் சமூகத்திற்கும் அவசியத்தேவையாக இருக்கிறார். அனைத்திற்கும் மேலாக நீதியின் மேலும் ,இந்த தமிழ்ச் சமூகத்தின் மேலும் நம்பிக்கை வைத்து வயது முதிர்ந்த நிலையி்லும் எப்படியாவது குற்றம் செய்யாத தன் மகன் விடுதலை ஆகி விடுவான் என்ற எண்ணத்தின் உச்சியில் கனவை சுமந்து நிற்கும் எங்கள் தாய் அற்புதம் அவர்களுக்காகவது…

சிதிலமடைந்த உச்சியில்

சுழற்றி அடிக்கும் சூறைக்காற்றில்

அலைந்தெரியும் தீபம்.

பேரறிவாளன் திரு.

(தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் – அ.ஞா.பேரறிவாளன். வெளியீடு: திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம். விலை.ரூ.60. மேலதிக தகவல்களுக்கு : அற்புதம் குயில் தாசன் 11,கே.கே.தங்கவேல் தெரு,பெரியார் நகர், சோலையார் பேட்டை-635851 .www.hang-hanging.com,perarivalan.blogspot.com)