தமிழின அரசியலில் நாம் தமிழர் கட்சியின் சமூக நீதி போக்குகள்..- மணி செந்தில் வெகு காலமாகவே சமூக நீதி இயக்கங்களுக்கும், தமிழ்த்தேசிய இயக்கங்களுக்கும் உள்ள இடைவெளி வரலாற்றுப் பூர்வமானது. தமிழகத்தின் வரலாற்றில் சமூக நீதிக்கான குரல்கள் வெகுகாலத்திற்கு முன்பே ஒலிக்கத் தொடங்கி விட்டன . ஆனால்  20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீதிக்கட்சி சமூகநீதி தளங்களில் ஏற்படுத்திய அதிர்வுகள் கவனிக்கத்தக்கவையாக அமைந்தன. தமிழ்த்தேசிய உரிமைக்கான வரலாறும் இத்தகைய தன்மை உடையதுதான்.  தமிழ்த்தேசிய இனம் வரலாற்றின் போக்கில் உருவான தருணத்தில் இருந்தே அதற்கான உரிமைக்குரல்களும் தோன்றின. பழந்தமிழ் இலக்கியங்களும்,ஒலைச்சுவடிகளும் ஏற்படுத்திய இலக்கியச் செழுமை தமிழ்த்தேசிய இன ஒர்மைக்கு அடிப்படையாக திகழ்ந்தன.  தமிழ்த்தேசிய இயக்கங்களுக்கும், சமூக நீதி   இயக்கங்களுக்கும் இடையிலான  அடிப்படை முரண்களை புரிந்துக் கொள்ள வேண்டும். சமூக நீதி இயக்கங்கள் சமூகத்தின் ஊடாக சமநிலை பராமரிப்பினை கோருபவை. தமிழ்த்தேசிய இயக்கங்கள் தேசிய இனமொன்றின் உரிமைகளுக்காக போராடுபவை. சமூக நீதி இயக்கங்களின் அடிப்படை அம்சங்களான சாதீய மறுப்பு,மூடநம்பிக்கை ஒழிப்பு,பெண்ணடிமை தகர்ப்பு போன்றவைகளின் விழுமியங்களை தமிழ்த்தேசிய இயக்கங்கள் இயல்பாகவே தன் மரபின் மூலமாகவே உள்வாங்கி இருக்கின்றன. சமூகநீதி கருத்துக்களை தனது மரபின் மூலம், வாழ்வியல் மூலம் இயல்பாகவே உள்ளடக்கிய சமூகமாக தமிழ்த்தேசிய இனம் விளங்குகிறது .தந்தை பெரியார் போன்ற ஒரு மாபெரும் முற்போக்காளரை,கடுமையான எதிர்ப்பு அரசியல் உடையவரை தனது தலைவராக தமிழ்த்தேசிய இனம் ஏற்றதற்கான உளவியல் அதன் இயல்பிலேயே பெற்றிருக்கின்ற முற்போக்கு அம்சங்கள் தான் என அய்யா.பெ.மணியரசன் குறிப்பிடுவதையும் நாம் ஏற்கலாம்.


இனம் குறித்த வரலாற்று பெருமிதத்தால் கட்டமைக்கப்படும் தேசிய இன உணர்வே தமிழ்த்தேசியர்களின் அடிப்படையான, ஆன்ம உண்ர்வாக இருக்கிறது. தமிழர் மரபு  காலத்தாற் நீண்ட வரலாறு உடையது . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு.. முன்பிலிருந்து,நாளது தேதிவரை எழுத்துப்பூர்வமான ஆக்கங்களான  தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், ஐம்பெரும் காப்பியங்கள், நீதி நூல்கள் போன்ற ஆவணங்கள் தமிழர் மரபினை அடையாளப்படுத்தும் பணியினை செய்வதோடு.. தமிழ்த்தேசிய இனப் பெருமிதம் கொள்வதற்கான உளவியல் நியாயங்களை கற்பிக்கின்றன..

இவ்வாறாக வரலாற்றின் அடிப்படையில் இருந்து கட்டமைக்கப்படும் தமிழர் மரபு இயல்பிலேயே இயற்கை வழிபாடு, விவசாயம், பெண்களை போற்றுதல், சாதியற்ற சமூக வாழ்வு போன்ற பல்வேறு முற்போக்கு அம்சங்களை கொண்டிருக்கிறது. 
’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று தமிழரால் பாட முடிந்த உளவியல் அம்சம்தான் அக்கால வாழ்வியலாக  இருந்திருக்கிறது. நாடாளும் மன்னனின் அவைக்கு சென்று அவனை ”தேரா மன்னா..” என்று எளிய பெண்ணொருத்தி ஏசும் அளவிற்கு சமூக ஒழுங்கில் பெண்களுக்கான இடம் இருந்திருக்கிறது. ஒளவையார் போன்ற பெண்பாற் புலவர்கள் அரசனுக்கு ஆலோசனை சொல்லும் இடத்திலும், நெருக்கமான தோழியாகவும் இருந்திருக்கிற மதிப்பு சார் தகுதி பெண்களுக்கு இருந்தது.

ஆரியர் படையெடுப்பிற்கு முன்பே ஆசீவகம் போன்ற நெறிகள் தமிழக மண்ணிலே இருந்திருக்கின்றன..இயற்கை வழிபட்டு, ஏற்றத்தாழ்வு இல்லாத மெய்யியல் கொள்கை தமிழனுக்கு இருந்திருக்கிறது. முன்னோர் வழிபாடு, நடு கல் மரபு என நீளும் தமிழரின் மெய்யியல் வரலாறு செழுமை மிக்கது. சாதியற்ற,ஏற்றத்தாழ்வற்ற தமிழர் மெய்யியல் அம்சங்களில், ஆரியர் படையெடுப்புக்கு பிந்திய பண்பாட்டு தாக்குதல்களினாலேயே தமிழரின் சமூகம் சாதீய சமூகமாக பிளவுப்பட்டு கிடக்கிறது.

எனவே தான் தமிழ்த்தேசிய இயக்கங்கள் தமிழர் மரபின் மூலம் தமிழ்த்தேசிய ஓர்மை உணர்வினை மீட்டெடுக்க கடுமையான சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது.குறிப்பாக 2009 க்கு பிறகான தமிழ்த்தேசிய முழக்கங்கள் வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வலிமையும்,மூர்க்கமும் அடைந்திருக்கின்றன.அதில் முதன்மையான தமிழ்த்தேசிய அமைப்பாக நாம் தமிழர் கட்சி களங்களில் செயல்பட்டு வருகிறது. 

பார்ப்பனீய ,சாதீய அரசியல் முனைகளால் பலமாக தாக்கப்படுவதும், கடுமையான விமரசனங்களை எதிர்க்கொள்ளுவதுமான முதன்மை தமிழ்த்தேசிய அமைப்பாக நாம் தமிழர் செயல்பட்டு வருகிறது என்பதை பல வித சான்றுகளுடன் நிரூபிக்க முடியும்.சமீபத்தில் ஹெச்.ராஜா அண்ணன் சீமானைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததும், பல வருடங்களுக்கு முந்தைய பேச்சு ஒன்றினை வைத்துக்கொண்டு வன்மம் குறையாமல் இந்துத்துவா அமைப்புகள் நாம் தமிழரை எதிர்த்து சமீபத்தில் போராடியதும்..இதற்கு சான்றுகள். மேலும் காஷ்மீர் விடுதலை இயக்கத்தலைவர் யாசின் மாலிக்கை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து தேசிய இனங்களுக்கு இடையிலான இணக்கத்தினை ஏற்படுத்த முயன்றதும் நாம் தமிழரின் வலிமையான அரசியல் நடவடிக்கை.  மேலும் தமிழ்நாட்டில் இருக்கும் பல அரசியல் அமைப்புகளில் நாம் தமிழர் கட்சி மட்டும் தான் தேர்தலில் பாஜக கட்சியினை தனது முதன்மை எதிரியாக அறிவித்து, அதனை எதிர்த்து அது போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் தேர்தல் பணி ஆற்றியதும் இதில் குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே தமிழ்த்தேசிய அமைப்புகள் மீது வைக்கப்படும் தலையாய குற்றச்சாட்டு சாதீய முரண்களில் தனது கூர்மை அரசியலை நிலைநாட்ட முடியாமை. அதற்கு காரணம் சாதீய அமைப்புகள் மீதான பரிவு அல்ல. மாறாக சாதீய அமைப்புகளில் சிக்கிக் கொண்டிருக்கும் தமிழர்களை தமிழர் என்கிற ஓர்மை உணர்வில் ஒன்றிணைப்பதற்கான முனைப்பே அன்றி, வேறொன்றும் அல்ல.இன்றளவும் கொங்குப் பகுதிய சாதீய அமைப்பு ஒன்றினாலும், தலித்திய அறிவு சீவி வட்டத்தினாலும் சமமாக தாக்கப்படுகின்ற அமைப்பாக நாம் தமிழர் இருப்பதன் காரணம் வெவ்வேறான இரண்டும் தனது அரசியலுக்கு ஒரே எதிரியாக கருதுவது நாம் தமிழரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 

                  இவ்வாறாக வரலாற்றின் போக்கில் தமிழ்த்தேசிய உணர்வு தமிழர் மரபின் வாயிலாக கட்டமைக்கப்படுவதன் மூலம் தான் சாதீய மறுப்பு, பெண்ணடிமை தகர்ப்பு ,மூட நம்பிக்கைகள் ஒழிப்பு போன்ற பல்வேறு முற்போக்கு கொள்கைகளை இம்மண்ணில்
நடைமுறைப்படுத்தப்படும் என நாம் தமிழர் கட்சி நம்புகிறது. 2009 க்கு பிறகான தமிழ்த்தேசிய அமைப்புகளின் நவீன வடிவமாக நாம் தமிழர்  நிலைநிறுத்தப்படுவதற்கும், மத சாதீய உணர்வாளர்களால் கல்லெறியப்படுவதற்குமான மிக முக்கிய காரணமாக  இவ்வகையான நம்பிக்கைகளே என்பது குறிப்பிடத்தக்கது.சமூகநீதி இயக்கங்களுக்கும், தமிழ்த்தேசிய அமைப்புகளுக்கும் இடையே நீண்ட காலமாக பராமரிக்கப்பட்டு வரும் இடைவெளியை தனது நடைமுறை சாத்தியங்கள் மூலம் நாம் தமிழர் நிரப்ப முயல்கிறது. இன்னும் ஆழமாக சொல்லப்போனால் இரண்டிற்குமான மாற்றாக..புது வெளி ஒன்றினை..மாற்று அரசியலை நாம் தமிழர் நிறுவ முயல்கிறது. வெகுசன அரசியல் வெளியில் அதிகம் கண்டுக்கொள்ளப்படாத அயோத்திதாசர், இரட்டைமலை சீனுவாசன் போன்ற தலைவர்களின் விழாக்களை தனது கட்சி அமைப்பியல் நிகழ்வுகளாக நாம் தமிழர் கொண்டிருப்பதும்  இது போன்ற சிந்தனைகளால் தான்.. வெகுசன அரசியல் இயக்கங்கள் என்றாலே சமரசம் கொண்டு,பிழைப்புவாத அரசியல் நிலைகளை எடுப்பன போன்றதான பிம்பங்களை உடைப்பதில் நாம் தமிழர் தனது முழு கவனத்தைக் கொள்கிறது. ஒரு வெகுசன அரசியல் கட்சி சமூக இயக்கங்களுக்கான நுண்ணரசியல் தன்மைகளை பெறுவது எனபது தமிழக அரசியல் வெளியில் புதிதான ஒன்று. இயற்கை விவசாயம், மீத்தேன் எதிர்ப்பு, காட்டுக் கருவை ஒழிப்பு. ஆற்று மணல் கொள்ளை எதிர்ப்பு போன்றதான மண்சார்ந்த போராட்டங்களையும் நாம் தமிழர் மேற்கொண்டு வருவது  குறிப்பிடத்தக்கது.

       தமிழர் மரபினை மீட்டெடுத்து..இனப் பெருமித உணர்வில்..தமிழ்த்தேசிய ஒர்மையை படைக்க விரும்பும் நாம் தமிழர் கட்சி சமூகநீதி இயக்கங்களின் அடிப்படை அம்சங்களை உள்வாங்கி  தமிழர்களுக்கான ஒருவெகு சன அரசியலை கட்டமைப்பதில் துடிப்பாக  இருப்பது தமிழின அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய போக்காகவே நாம் கருதலாம்.


-மணி செந்தில்.

ஆம்.. நாங்கள் தமிழ்நாஜிக்களே... மணி செந்தில்

கடந்த சில நாட்களாக முகநூல் பதிவுகளில் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் ஆதரவாளர்கள் எம்மை கடுமையாக தாக்கிக் கொண்டிருப்பதும்...வசவாளர்களாக மாறி ஏசி,பேசிக் கொண்டிருப்பதும் தொடர்கின்றன...

மண்ணின் பூர்வக்குடி மக்களான தமிழர்கள் தங்களுக்கான அரசியல் வெளியை அமைக்க முயல்வதை தாங்கிக் கொள்ள முடியாமல்.. தமிழ்த்தேசிய இனம் என்ற சொல்லைக் கூட அரசியல் அரங்கில் பயன்படுத்தாமல் திட்டமிட்டு புறக்கணித்து ..கடந்த 2009 -ல் எமது தாய்நிலம் ஈழம் அழிக்கப்பட்டப் போது திட்டமிட்டு நீளத்துடித்த எம் கரங்களை அரசியல் அதிகாரத்தால் கட்டி, ஏய்க்கின்ற நாடகக் காட்சிகளால் தொடர்ந்து எம்மை ஏமாற்றி.. தொப்புள் கொடி உறவுகள் அங்கே துடிக்க துடிக்க கொல்லப்பட்ட போது ..மரபணு துடித்து ..உணர்வுகள் வெடித்து..உயிரோடு எரிந்து ..உலகத்திற்கே சாட்சிகளாக முத்துக்குமார் போன்ற தியாக மறவர்கள் திகழ்ந்த போது...தனது பிழைப்புவாத அரசியலுக்காக..ஊழல் பெருநாற்றம் எடுத்து நாறுகிற தனது பதவிக்காக எம் இனம் அழிய துணைப் போன இவர்கள்..

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழர் தேசிய இனவரலாற்றில் தோன்றிய மகத்தான தலைவர்.பிரபாகரன் அவர்களைப் பற்றி இப்போது பேச அழைக்கிறார்கள்..விவாதிக்க விரும்புகிறார்கள்..வெங்காயம்...

காலங்காலமாய் அடிமைப்பட்டு , அடக்கப்பட்டு, இது நாள் வரை திட்டமிட்டு பழிவாங்கப்பட்டு, சொந்த மண்ணிலேயே எம் மொழி மறந்து, எமது கலை,பண்பாடு தொலைத்து, வந்தவனை எல்லாம் வரவேற்பு அறையில் அமர வைக்காமல், வீட்டிற்குள் அழைத்துப் போனது மட்டுமில்லாமல், வீட்டினையே வந்தவன் பெயருக்கே மாற்றியளித்து விட்டு..வீதிக்கு வந்ததோடு மட்டுமில்லாமல்..அப்படி நாதியற்று வந்தததையும், வந்தவனை வாழ வைத்தோம் என்று வாய் கூச பெருமைப் பேசி..எம் மண்ணை,கனிமத்தை, அரசியலை,வாழ்வியலை, கொள்ளையடிக்க, எம் நிலத்தை வேரறுக்க, அவன் வாழ நான் சாக அனுமதித்து விக்கித்து வீதியில் நின்ற எமக்கு.. எமது மற்றொரு தாய்நிலத்தில் பிறந்து அடிமை தேசிய இனத்தின் இழிவுப் போக்க போராடிய எம் தலைவர் பிரபாகரன்.. இந்த மண்ணில் குடியேறி.. கொள்ளையடித்து..கொழுப்பேறி..குடும்பம் குடும்பமாக கூத்தடிக்கும் மற்ற எந்த அரசியல் தலைவரையும் விட மேலானவன் மட்டுமல்ல...அவன் தான் அடிமை இருட்டினில் வீழ்ந்து கிடக்கும் எமக்கு அகப்பட்ட உயிர் வெளிச்சம்.,.அவரைப் பற்றி பேசவும், விவாதிக்கவும் சிலஅடிப்படைத் தகுதிகள் தேவையாய் இருக்கின்றன.. நேர்மை..அர்ப்பணிப்பு..பெற்ற மகன்களை கூட இனத்திற்காக இழக்கத் துணிகிற தியாகம் என நீளும் அப்பட்டியலில் ஒன்று கூடாத இல்லாத, ஊழல் நாற்றமெடுத்து அரசியலின் இழிவான சீரழிவாக இருக்கிற ’தமிழக அரசியலின் பிதாமகர்கள்’ அவர் பற்றி பேச தொடங்குவதும் விவாதிக்க கோருவதும் அவர்களது திட்டமிட்ட மற்றுமொரு பிழைப்பு வாதமே...

எம் மண், எம் மக்கள், எம் மொழி என பேசி..உயிரற்ற சடலமாய் உருவமற்று கிடக்கிற..எம் மக்களை உசுப்பேற்றி..இன உணர்வு கொள்ளும் பணியை செய்யும் இளைஞர்களை...தமிழ்நாஜிக்கள் என்று தரங்கெட்ட இவர்களது வசவுகள் அழைக்குமானால்.... ஊழலும், சீரழிவும், ஆபாசமும்,வெட்கக்கேடும்,மோசடியும் ,மாய்மாலமும், இரட்டைநாக்கும், மண்ணின் பூர்வக்குடி மக்களை வீழ்த்தத்துணியும் பிழைப்புவாதமும் உடைய இவர்களை வீழ்த்த வந்த “ தமிழ்நாஜிக்களாக “ நாம் மாற..அல்லது இவர்களே நம்மை மாற்ற வெகு காலம் இல்லை என்று தான் எண்ண வேண்டியிருக்கிறது..# உன் முதுகில் ஓராயிரம் அழுக்கு..புழுவைப் போல வளைந்து நெளியும் உன் நாக்கு பேசுகிறது புனிதமான என் தலைவனைப் பற்றி ஓராயிரம் வழக்கு..வெட்கக்கேடு.

கண்களால் எழுதிய கலைஞன் –பாலுமகேந்திரா. –மணி செந்தில்


                


அது ஒரு பாடல் காட்சி.  கதாநாயகனும்,கதாநாயகியும் ஊட்டியின் மெல்லிய குளிரை அனுபவித்தவாறே ஏரிக்கரையில் பேசிய படி நடந்து செல்வார்கள். பின்ணணியில் இளையராஜாவின் மெல்லிய செவ்வியல் இசை கசிந்துக் கொண்டிருக்கும். மலரே மலரே ..உல்லாசம் என தொடங்கும் அப்பாடல் (http://www.youtube.com/watch?v=BG8n2RRvDxU ) இடம் பெற்ற திரைப்படம் ரஜினிகாந்த்,மாதவி நடித்த மறைந்த மாமேதை பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான உன் கண்ணில் நீர் வழிந்தால் .

          அவர் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ள திரையிசைப்பாடல்கள் இளையராஜாவின் நுண்ணிய நெய்தலால் ஆழ்மனதிற்குள் பாயும் வல்லமை உடையவை. செவிகளால் கேட்கும் போதே பரவசத்தையும்,சோகத்தையும், காதலையும், கண்ணீரையும் தர வல்ல அப்பாடல்களை தனது ஒளித்தூரிகையினால் ஆகச்சிறந்த நிகழ் ஒவியங்களாக செதுக்குவதில் பாலுமகேந்திரா வல்லவர் .

பொதுவாக அவர் படங்களில் உரையாடல்கள் குறைவாக இருக்கும் . அவரின் திரைப்படப் பாடல் காட்சிகளிலோ கதாநாயகனும்,நாயகியும் உரையாடிக் கொண்டே இயற்கை சூழ் பகுதிகளில் நடந்து சென்று கொண்டு இருப்பார்கள். டாடா சுமோக்களில் அடியாட்களை அள்ளிப் போட்டுக் கொண்டு வீச்சரிவாக்களோடு நான் அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா என கத்திச்செல்லும் கதாநாயகர்களை அவர் பாடங்களில் நீங்கள் பார்க்க இயலாது.  அவரது பட கதாநாயகன்  சாதாரணன். சராசரி மனிதனுக்குள்ள அனைத்து பலவீனங்களும் அவனுக்கும் உண்டு. அவரது படத்தின் நாயகிகள் அன்றாடம் நாம் சாலையிலோ, வேலை பார்க்கும் இடங்களிலோ, வீடுகளிலோ சந்திக்கும் பெண்கள். இப்படி தனது படத்திற்கான திரைமொழியை இயல்பு மீறாமல் பாதுகாத்து கொள்வதில் பாலுமகேந்திரா ஒரு மேதை.

அவரது ஒளி மொழி தனித்துவமானது.  இயற்கையாக நாம் எதிர்க்கொள்ளும் ஒளியின் அளவீடுகளை உணர்ந்து அதைத்தான் தன் திரைப்படங்களுக்கான ஒளி அளவாக அவர் பயன்படுத்தினார். அதனால் தான் அவர் திரைப்படங்களில்  பெய்யும் மழை , ஒளிரும் வெயில் ,அலை பாயும் கடல்,பசுமை வழியும் கானகம், பழங்காலத்து சிதிலமான கோவில், கருமை சுமக்கும் கற்சிற்பங்கள் , ஏகாந்த ஏரி என அனைத்தும் அவர் படங்களில் பேசின.

அவர் முதன் முதலில் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆன  " நெல்லு" என்கிற மலையாளப்படம் 1970 ஆம் ஆண்டு வெளியானது. அப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை பாலுமகேந்திரா பெற்றார். அவர் தன்னை ஒளிப்பதிவாளராகத்தான் எப்போதுமே கருதிக்  கொண்டார். காட்சியமைப்பிலும், ஒளி அளவிலும் அவர் செலுத்திய கவனம் அலாதியானது. எடுத்துக்காட்டாக நீங்கள் கேட்டவை படத்தில் ”கனவு காணும் வாழ்க்கை யாவும் “                           ( http://www.youtube.com/watch?v=yEiF1a8b-Lo ) என்ற பாடலில்  வாழ்க்கை நிலையாமை குறித்த அடுக்கடுக்கான  உதிரிக் காட்சிகளை அவர் அடுக்கி இருக்கும் விதம் அப்பாடலை ஆகச்சிறந்த பாடலாக்கியது. தண்டவாளத்தில் காது வைத்து கேட்கும் கமலையும் , ஸ்ரீதேவியையும் ரயில் கடந்து சென்றதை நாம் கண்டோம். நம்மால் இது வரை கடக்க முடியாமல் நிற்கிறோம்.

ஒளிப்பதிவாளராக பல மலையாள படங்களில் தடம் பதித்த பாலு மகேந்திராவுக்கு, கன்னடப் படமான "கோகிலா"வின் மூலம் தேசிய விருதும் கிடைத்தது. ஏற்கனவே உதிரிப்பூக்களில் ஒளிப்பதிவாளர் அசோக்குமாருடன் கைக் கோர்த்த இருந்த  மகேந்திரன்  "முள்ளும் மலரும்" படத்தில் பாலு மகேந்திராவை தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் செய்தார். அப்படத்தில் அடிப் பெண்ணே..பொன்னுஞ்சல் ஆடும் இளமை என்கிற பாட்டில் பாலுமகேந்திரா நிகழ்த்தி இருக்கும் வித்தை அதி உன்னதமானது. அப்படித்தான் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்ற புகழ்ப் பெற்ற பாட்டிலும் சிறு சிறு காட்சியையும் தனது திறமையால் பாலு செல்லூலாய்டு ஒவியமாக்கி இருப்பார். அதில் வரும் உச்சக் காட்சியில் தான் உயிருக்குயிராக நேசித்த தங்கை உட்பட அனைவரும் கடந்துப் போகையில் தன்னந்தனியனாய் நிற்கும்  காளி கதாபாத்திரத்தின் உணர்வினை மிகநுட்பமாக பாலுமகேந்திரா பதிவு செய்து அப்படத்தை மற்றொரு தளத்திற்கு கடத்தி சென்றிருப்பார்(http://www.youtube.com/watch?v=jU629VRND6c ) .  பதின்பருவத்து உணர்ச்சிகளை மையமாக வைத்து 1979ல், தனது இயக்கத்தில் " அழியாத கோலங்கள்" படத்தைத் தந்தார் (http://www.youtube.com/watch?v=EXuqUC-soQs ). இப்படத்திற்கு சலீல் செளத்ரி இசையமைத்தார்.  இப்படத்தினை தவிர பாலுமகேந்திராவின் அனைத்துப் படங்களுக்கும் இளையராஜாதான் இசை . இளையராஜாவின் இசையமைத்த 50 ஆவது படம் என்ற பெயரோடு வெளிவந்த படம் பாலுமகேந்திராவின் மூடுபனி.  இளையராஜாவும் ,பாலுமகேந்திராவும் கூட்டணி சேர்ந்து பல வெற்றிப்படைப்புகளை தந்தனர். இன்றளவும் தமிழின் ஆகச்சிறந்த படங்கள் பட்டியலில் அவரின் மூன்றாம் பிறை, வீடு, சந்தியாராகம், தலைமுறைகள் போன்ற படங்களுக்கு உறுதியான இடமுண்டு . நகைச்சுவைப்படங்களாக  அவர் எடுத்த ரெட்டைவால்குருவி, சதி லீலாவதி,ராமன் அப்துல்லா போன்ற படங்களும்  திரில்லர்  வகைப்படங்களாக அவர் இயக்கிய மூடுபனி, ஜீலி கணபதி போன்ற படங்களும், தன்னையே அவர் விமர்சித்து ஏசிக் கொண்ட நீங்கள் கேட்டவை, உன் கண்ணில் நீர் வழிந்தால் போன்ற படங்களும் அவர் வணிக ரீதியலான திரைப்படங்களையும்  அவர் எடுப்பதில் வல்லவர் என்கிற முயற்சிகளாக நாம் கருதலாம். ஆனால் அப்படிப்பட்ட படங்களில் கூட மனதில் எப்போது தேங்கி நிற்கும் கலை அம்சங்களுக்கு அவர் குறை வைப்பதில்லை. 

மூன்றாம் பிறை திரைப்படம் மீண்டும் அவருக்கு ஒரு தேசிய விருதை பெற்று தந்தது. சத்மா என்கிற பெயரில் அப்படத்தினை அவர் இந்தியிலும் எடுத்தார்.  வண்ண வண்ண பூக்களில்  காடுகளுக்கு நடுவில் பயணம் செய்யும் ரசனை மிக்க  இளைஞனை அவரால் மிக எளிமையாக திரைமொழி சட்டகங்களுக்குள் அடக்கி விட முடிந்தது. அவரது நாயகிகள் கதாநாயகனின் சட்டையை மட்டும் அணிந்து நடந்தது எங்கும் ஆபாசமாக பார்க்கப்படவில்லை. காதலுக்கும், காமத்திற்கும் இடையிலான மெல்லிய கோட்டை பாலுமகேந்திரா அலட்சியப் படுத்தினார். வீட்டில் வேலை செய்யும் பெண்ணும், அந்த வீட்டு இளைஞனும் யாருமற்ற வீட்டில் தனியாக ..இரசனையாக வாழ்ந்ததையும் (அது ஒரு கனாக்காலம் ), காட்டிற்குள் தனித்து ஒரு இளம் பெண்ணுடன் அருவியில் குளித்து,கதைகள் பேசி ஒன்றாக தூங்கியதையும் அவர் எவ்வித அதிர்ச்சி மதிப்பீடுகளையும் வலிந்து கூட்டாமல் ,அலட்டாமல் அழகாக எடுத்தார். ஒரு சராசரி இளைஞனின் கனவில் ஒரு இளம் பெண் வருவதுதான் இயல்பானது. அதை தான் நான் காட்டுகிறேன். இளைஞனின் கனவில்  சாமியார் வந்து ஆன்மீக பாடம் புகட்டுவது மாதிரி  எடுத்தால் தான் அது திணிப்பு என்று துணிவாக ஒரு பேட்டியில் சொன்னார்.

நேசிக்கும் பெண்ணோடு தனித்திருக்கும் ஒரு இளைஞன் என்ன செய்வானோ அதைத்தான் பாலுமகேந்திராவின் நாயகர்கள் செய்தார்கள் . தனது வாழ்க்கையை தனது திரைப்படங்களில் பிரதிபலித்துக் கொள்வதை அவர் விரும்பி செய்தார். ரெட்டைவால் குருவி,மறுபடியும் போன்ற படங்களில் அவர் தன்னை உள்நோக்கி பார்த்துக் கொண்டார். ஒளங்கள்,ஊமக்குயில்,யாத்ரா போன்ற மலையாளப்படங்களையும் ,கன்னடத்தில் கோகிலா, தெலுங்கில் நிரிக்‌ஷினா போன்ற  படங்களையும் அவர் இயக்கி தென்னிந்திய சினிமாவின் முக்கிய ஆளுமையாக அவர் திகழ்ந்தார். மட்டக்களப்பில் பிறந்த ஈழத்தமிழரான அவர் தமிழ் சினிமாவின் பிதாமகர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

அவரின் அழகியல் சார்ந்த திரைமொழியை  தொடர இன்றைய தேதியில் யாரும் இயக்குனர்கள் இல்லை. ஆனால் அவரது மாணவர்களான பாலா, வெற்றிமாறன், சீனு இராமசாமி போன்றோர்கள் தங்களின் உயரிய படைப்புகளால் பாலுமகேந்திரா என்கிற மகத்தான கலைஞனை நினைவூட்டுவார்கள். அவரும் இறுதிக் காலங்களில் திரைப்பட வகுப்புகளை நடத்தி தனக்கு பிறகும் தன்னியக்கம் நடக்க உழைத்தார்.  அவரது நிகரற்ற படங்களான வீடு,சந்தியாராகம் போன்ற படங்களின் பிலிம் சுருள்கள் பாதுகாக்கப்படாமல் வீணாகிப் போனதில் மிகுந்த சங்கடம் கொண்டார். திரைப்பட ஆவண காப்பகம் ஒன்றை அமைக்க கோரினார் . ஆனால் கோரிக்கைகள் இன்றும் காற்றில் தான் இருக்கின்றன.
அவரே ஒரு பேட்டியில் சொன்னதுதான்..

நானோ,மகேந்திரனோ,இளையராஜாவோ ஒரு நாளும் மறைய மாட்டோம். எங்களது படைப்புகள் அசையும். பேசும்.பாடும்.உங்களை கண்கலங்க வைக்கும்.  அதுவரை நாங்களும் இருப்போம்.

அவரின் நீங்கள் கேட்டவை படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.. ஓ..வசந்தராஜா.. தேன் சுமந்த ரோஜா.. என்ற பாடல் . அப்பாடலை எங்கள் கங்கைக் கொண்ட சோழபுரத்தில் எடுத்து இருப்பார் . அக்கோவில் அழகானது தான். ஆனால் இத்தனை அழகா..என வியக்க வைத்தவர் பாலுமகேந்திரா..

அவர் கண்களால் சுவாசித்தார். எழுதினார்.இயக்கினார்.


அவருக்கு பிறகும் அவரது படைப்புகளில் அவரது கண்களை நாம் காண்கிறோம்.

தமிழனாக பிறந்து …மாபெரும் மேதையாக வாழ்ந்து…என்றும் முடியாமல் வாழ்கிற பாலுமகேந்திராவிற்கு  அன்பு முத்தங்கள்….

-மணி செந்தில்சென்னை புத்தக கண்காட்சி – சில அனுபவங்களும்..நினைவுகளும்,,

                   இந்த முறையும் சென்னை புத்தகக் கண்காட்சி மிகுந்த வரவேற்போடும், உற்சாகத்துடனும், புதிய நம்பிக்கைகளோடும் முடிந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக சென்னை புத்தக கண்காட்சிக்கு தவறாமல் செல்கிறவனாய் இருக்கிறேன். புத்தகங்கள் வாங்குவது ஒரு புறம் இருந்தாலும், நமது பழைய-புது நண்பர்களை, எழுத்தாளர்களை,அறிவுலக  ஆளுமைகளை ஒரு சேர சந்திப்பதும் ,உரையாடவதும் அடுத்த ஒரு வருட காலத்தில் நாம் இயங்குவதற்கான,வாசிப்பதற்கான, எழுதுவதற்கான உந்துதல்.
   ஒரு இயல்பான வாசகனுக்கு கொட்டிக்கிடக்கும் புத்தகங்களை  ஒரு சேர காணுவது உற்சாகம் என்றாலும் 700 கடைகளிலும் நின்று …வந்திருக்கும் புதிய புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்து வாசித்து,தேர்ந்தெடுத்து வாங்குவது என்பது வாய்ப்பில்லாத ஒன்றாகவே இந்த புத்தக கண்காட்சியிலும் இருந்தது.  பல முக்கிய புத்தகங்களை வழக்கம் போல நான் இந்த வருடமும் தவற விட்டேன். குறிப்பாக அம்பேத்கார் பவுண்டேஷன் வெளியீடாக வந்திருக்கிற அண்ணல் அம்பேத்கார்  அவர்களின் 37 தொகுதி நூல்கள். பிறகு கடைசி நாளில் என் தம்பி இடும்பாவனம் கார்த்தி மூலமாக வாங்கினேன்.                
                  இத்தனை ஆயிரம் புத்தகங்களுக்கு மத்தியில் நமக்கு தேவையான புத்தகங்களை வாங்குவது என்பது மிகப்பெரிய சவால் .அதே போல ஒவ்வொரு பதிப்பகத்தையும் தேடி நூல்கள் வாங்குவதும் மிகச்சிரமமான காரியமாகவே இருந்தது. காலச்சுவடு பதிப்பகத்திலும், உயிர்மை பதிப்பகத்திலும்,பாரதி புத்தகலாயத்திலும் கூட்டம் அலைமோதியது. வழக்கம் போல விகடன் அரங்கத்திலும் கூட்டம் அலைமோதியது.
                     இந்திய முன்னாள் பிரதமர் ராசீவ் கொலைவழக்கில் சிக்குண்டு மரணத்தண்டனை வாசியாக அண்ணன் பேரறிவாளனின் உயிர் வலி ஆவணப்படம் கிடைக்கும் எண் 273ஆம் அரங்கத்தில் வந்த பலருக்கும் அம்மா அற்புதம் அவர்களோடு புகைப்படம் எடுப்பதும் முக்கிய பணியாக இருந்தது. சளைக்காமல் அனைவருக்கும் அம்மா பதிலளித்துக் கொண்டிருந்தார்.  அந்த அரங்கத்தில் வந்து நிற்பதையும் ,அம்மாவை காண்பதையுமே முக்கிய பணியாக பலர் கருதியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
                        அன்றைய பிற்பகலில் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் அனைத்து படைப்புகளின் தொகுப்பு தொகுதியான பாவேந்தம் மற்றும் தமிழிசை அறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் என்கிற நூலின் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தேசிய தந்தை அய்யா.பழநெடுமாறன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், ஓவியர் வீர சந்தானம், பேராசிரியரும், ஆய்வறிஞருமான முனைவர் வீ. அரசு, முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ, தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், கவிஞர் காசி ஆனந்தன்,இயக்குனர் கவுதமன்  மற்றும் பல தமிழறிஞர்கள் கலந்துக் கொண்டனர்.  இறுதியாக பேசிய செந்தமிழன் சீமான் உணர்ச்சி பெருக்கில் அமைந்த பல பாரதிதாசன் பாடல்களை தனது கம்பீர குரலில் முழங்கி,நிகழ்கால அரசியலை ஒப்பிட்டு பேசியது மிகப்பெரிய ஈர்ப்பினை ஏற்படுத்தியது. தனது தம்பிகளோடு பல அரங்கங்களுக்கு சென்ற சீமான்   பல புத்தகங்களை வாங்கிச்சென்றார். அவரோடு வந்த இயக்குனர் பாலாவும் கவனத்தை கவர்ந்தார். சீமானின் பேச்சால் உந்தப்பட்டு உணர்வு வேகத்தில் நின்ற இளைஞன் ஒருவனை நாங்கள் அரங்கம் ஒன்றில் பார்த்தோம். இங்கே ஒரே தமிழ்புத்தகமா ல்ல இருக்கு.ஐ டோன்ட் லைக் தமிழ் என பேசிய அவனது இளம் மனைவியை அப்ப வெளிநாட்டுக்கு போ என்று திட்டிய அவனை பார்த்து சில நம்பிக்கைகள் பிறந்தன. 
                                                  குறைகள் பல இருந்தன. முதலில் அரங்க வரிசை. சீட்டுக் குலுக்கி எடுத்து தேர்ந்தெடுப்பதால்  ஒரே மாதிரியான புத்தகங்களை தேடி வருபவர்கள் முன்னும் பின்னும் அலைய வேண்டி இருந்தது. ஒரே மாதிரியான, வகைப்பாடுகளை உடைய புத்தகங்களை வெளியிடும் பதிப்பக அரங்கங்களை தனித்து பிரித்து வரிசைப்படுத்தினால் வரும் வாசகர்கள் தங்களுக்கான பகுதியில்  நின்று தேடி வாங்க எளிதாக இருக்கும். (எடுத்துக்காட்டாக காலச்சுவடு,உயிர்மை, காவ்யா, உயிரெழுத்து,வம்சி,புலம், கருப்புப்பிரதிகள், யூனிடெட் ரைட்டர்ஸ், தமிழினி ,   எதிர் என  ….) 700 புத்தக அரங்குகளில் தமக்கான புத்தகத்தை கண்டடைவதற்கான சாத்தியங்கள் எளிமையாக இருந்தால் தான் புத்தக விற்பனை இன்னும் களை கட்டும். அதே போல அங்கு விற்கப்பட்ட உணவுப் பொருட்களின் விலை. அங்கு ஒரு வேளை உணவு அருந்துவதை தவிர்த்தால்..கனமான இரண்டு புத்தகங்களை வாங்கி விடலாம் என்பதாலேயே பலர் பட்டினியாக திரிந்ததையும் காண முடிந்தது. பாபசி கவனத்தில் எடுத்துக் கொள்ள கோருவோம்.
      
             புத்தக கண்காட்சியில் சிறப்பு அம்சம்..நாம் யாரை வாசித்து வருகிறோமோ ..அவரை நேரடியாக சந்தித்து உரையாடும் அம்சம். அவ்வகையில் இப்புத்தக கண்காட்சியில் பலரை சந்தித்தேன். மிக முக்கியமாக மிகச்சிறந்த ஆய்வாளர் மற்றும் பதிப்பாசிரியர் பேரா.வீ. அரசு அவர்களை சந்தித்து உரையாடியது மகிழ்ச்சியை அளித்தது. சிறிது நேரம் பேசும் போது கூட ஒரு பல்கலைக்கழக நூலகத்தில் தேட வேண்டிய செய்திகளை அள்ளித்தருவதில் அரசு ஒரு அரசர்.  அதே போல சாரு,எட்வின் அண்ணா, விஷ்ணுபுரம் சரவணன்,எஸ்.டி.பிரபாகர்,செல்வராஜ் முருகையன் உட்பட பல தோழமைகளை சந்தித்ததும் உற்சாகமாக இருந்தது. எழுத்தாளர் சாருநிவேதிதா இனி தமிழில் நான் எழுதப்போவதில்லை என்பதை நியூஸ் சைரன் இதழில் தெரிவித்துள்ளதை பற்றிக் கேட்டேன். அவரது ஆரம்ப கால படைப்பில் இருந்து தற்போது வரை உள்ள படைப்புகளை பற்றி எனது வாசிப்பனுவத்தை சொன்னேன். குறிப்பாக ராக் இசையை பற்றியும்,மேற்கத்திய இலக்கியங்கள் , மேற்கத்திய பண்பாட்டு குறியீடுகள் குறித்தும் அவரது படைப்புகளில் விரவிக்கிடக்கின்ற தகவல்கள் மிக முக்கியமானவை என்று சொன்னேன். எனக்கு உங்கள் எழுத்துக்களில் ,கருத்துக்களில் உடன்பாடில்லை. ஆனால் உடன்பாடில்லாதது தேவைப்படுகிறது. அப்போதுதான் நாம் எதில் உடன்பட்டிருக்கிறோம் என உணர முடிகிறது என்று நான் சொன்னதற்கு தோழமையாக சிரித்த சாரு…அவர் வரைத்து வைத்திருக்கும் அல்லது நாம் உருவாக்கி வைத்திருக்கும் அவரது பிம்பத்திற்கு எதிராக அக்கணத்தில் இருந்தார்.மதுரை ஆட்கள் தமிழில் நிறைய எழுத வந்து விட்டார்கள். நம்மூர் ஆட்கள் குறைந்தது போல தோணுகிறது என வருத்தப்பட்ட சாரு எங்கள் நாகூர்க்காரர்.
               நண்பன் விஷ்ணுபுரம் சரவணனின் சிறார் நூலான வாத்து ராஜாவை நான் பாரதி புத்தகாலய அரங்கில் கேட்ட போது வெளியே வைத்திருந்தது விற்று விட்டது. உள்ளே இருந்து எடுத்து தருகிறேன் என விற்பனையாளர் சொல்ல எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்த தருணத்தில்..என் தோளில் ஒரு கை விழுந்தது. சரவணன்.கூடவே எட்வின் அண்ணா. ஒரு தேநீரோடு தோழமை உரையாடல்.
       தமிழ்நாட்டில் நடைபெறும் மாபெரும் புத்தக கண்காட்சியில் தமிழ் பேசுவோரை விரல் விட்டு எண்ணிவிடலாம். எக்ஸ்கியூஸ்மீ என்கிற சொல் தான் பரவலாக கேட்டுக் கொண்டே இருந்தது. கொஞ்சம் வழி என்று கேட்ட எங்களை வேற்றுக்கிரக வாசிகளை போல பார்த்ததும் நடந்தது. சீமான் அண்ணன்  இது புத்தக கண்காட்சி இல்ல…புக் ஃபேர் என்று வேதனை தொனிக்கும் கிண்டலுடன் தெரிவித்தார்.       
            வழக்கம் போல புத்தகங்கள் என் மேசையின் மீது குவிந்து கிடக்கின்றன. இவற்றை எல்லாம் ஒரு ஆண்டிற்குள் படித்து விட முடியுமா என தெரியவில்லை. ஆனால்..இவை எல்லாம் இல்லாமல் என்னால் வாழ முடியாது. இது ஒரு வகை போதை. இப்போதைக்கு ஆட்பட்டவர்களில் ஜமீன் தார் கொடுத்த பணத்திற்கு அரிசி வாங்குவதற்கு பதிலாக புத்தகங்கள் வாங்கிக் கொண்டு  வந்து மனைவியின் எரிச்சலுக்கு உள்ளான பாரதி தொடங்கி.. இந்த அறியா பாமரன் வரை அனேகர் அடக்கம்.
             இம்முறை நான் வாங்கிய புத்தகங்கள் : பின் தொடரும் நிழலின் குரல்-ஜெயமோகன், நிமித்தம்-எஸ்.ரா, என்ன நடக்கிறது இந்தியக்காடுகளில்-இரா.முருகவேள்,காவிரியின் கடைசி அத்தியாயம் –வெ.ஜீவகுமார்,ஷேக்ஸ்பியர் கதைகள்- ,கொற்கை- ஜோ டி குரூஸ், தோழர்களுடன் ஒரு பயணம் –அருந்ததிராய், அடைப்பட்ட கதவுகளின் முன்னால்( அண்ணன் பேரறிவாளனின் தாயார் அம்மா அற்புதம் அவர்களின் அனுபவங்கள் மலையாளத்தில் இருந்து, தமிழில் –யூமா வாசுகி ),மோடி-குஜராத்,இந்தியா ?-தமிழில் :சுரேஷ், வெண்கடல்-ஜெயமோகன், மரப்பல்லி-வாமுகோமு, எது சிறந்த உணவு-மருத்துவர்.கு.சிவராமன் –ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் –ஜான் பெர்க்கின்ஸ்(ஏற்கனவே விடியல் வெளியிட்டது என்னிடத்தில் உள்ளது. கொஞ்சம் கடின மொழி நடை.இது பாரதிபுத்தகாலயம் வெளியீடு ) ,அதிகார அரசியல்- அருந்ததி ராய், நள்ளிரவின் குழந்தைகள் –சல்மான் ருஷ்டி,  வெல்லிங்டன் – சுகுமாறன், வான்காவின் வரலாறு –இர்விங்ஸ்டோன் தமிழில் சுரா, தமிழ் இலக்கிய முற்போக்கு ஆய்வு முன்னோடிகள்-மூ.ச .சுப்பிரமணியன், இந்திய வரலாறு –இ.எம்.எஸ்.நம்புதிரி பாட், இராஜீவ் கொலையும் தமிழர்கள் மீதான பழியும்- தமிழன் பாபு, பகத்சிங் சிறைக்குறிப்புகள்- தமிழில் சா.தேவதாஸ், மாநில சுயாட்சி- முரசொலி  மாறன் -, பஷீர்- தனிவழிலோர் ஞானி, இந்துமதமும் காந்தியாரும்,பெரியாரும்-தொகுப்பு பசு.கவுதமன், இந்துமதக் கொடுங்கோன்மையின் வரலாறு – தர்மதீர்த்த அடிகளார்,  அண்ணா ஆட்சியை பிடித்த வரலாறு –அருணன்,  மருந்தென வேண்டாவாம்-மருத்துவர்.கு.சிவராமன்,  நவீன தொன்மங்களும் நாடோடிக்குறிப்புகளும்-ஜமாலன், வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நிலப்பரப்பு- ரேமண்ட் கார்வர், உணவே மருந்து – டாக்டர்.எல்.மகாதேவன்,  உணர்வும் ,உருவமும் ( அரவாணிகளின் வாழ்க்கைக் கதைகள்)- தொகுப்பு-ரேவதி, மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி-மோயோ கிளினிக் , காந்தி அம்பேத்கார் –மோதலும் சமரசமும்-அருணன், குஜராத் வளர்ச்சியா,வீக்கமா –சா.சுரேஷ், என் வாழ்க்கை தரிசினம்-ஜான்சி ஜேக்கப், அங்கிள் சாம்க்கு மாண்ட்டோ கடிதங்கள் –சரத் ஹசன் மாண்ட்டோ,  57 ஸ்னேகிதிகள் ஸ்கிநேகித்த புதினம்- வாமுகோமு, நிகழ்ந்தப் போதே திருத்தி எழுதப்பட்ட வரலாறு –மன்த்லி  ரெவ்யூ கட்டுரைகள், அமெரிக்க பேரரசின் ரகசிய வரலாறு –ஜான் பெர்கின்ஸ்,  சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும், திராவிட இயக்கத்தின் எழுச்சியும்- அதியமான்,  இயற்கைக்கு திரும்பும் பாதை – மசானபு ஃபுகோகா, சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே –தியோடர் பாஸ்கரன்
             எனது மகன் சிபி க்கு வாங்கி வந்த புத்தகங்கள் (அப்படிச்சொல்லி எனக்கும் வாங்கிக் கொண்டேன்)  :,வாத்து ராஜா- விஷ்ணுபுரம் சரவணன்,  சே குவேரா-படக்கதை,கிருஷ்ண தேவராயர்,அக்பர் , அசோகர்,சிவாஜி –வாழ்க்கை வரலாறு காமிக்ஸ்கள், முத்துக்காமிக்ஸ் வெளியீடுகள்.  

-மணி செந்தில்.

.

தமிழர் திருநாள் சிந்தனைகள்..வழக்கம் போல பொங்கல் என்றாலே இனிப்பு பூசிக் கொள்கிறது மனசு. தெருவில் அதிகரித்து இருக்கும் நடமாட்டமும், வீட்டு வாசல்களில் பூத்திருக்கும் கோல மலர்களும்.. சட்டென இனிப்பினை நம் மனதிற்குள் நிறைப்பி விடுகின்றன.. வீட்டுக்கு திடீரென பக்கத்தில் முளைத்திருக்கும் கரும்புக் கடையில் (என் கடை அல்ல..) கூட்டம் இருக்க வேண்டும் என மனசு சிறிதாக பதட்டம் கொள்கிறது. கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதோ என சட்டென தொற்றுகிறது சிறு ஏக்கம் . என் பால்யத்தில் பொங்கல் என்றால் எங்களுக்கு தெரு தான் . ஆனால் இன்றைய சிறு பிள்ளைகள் தொலைக்காட்சி பெட்டிகளில் வீழ்ந்துகிடப்பதும் வலிக்கிறது. முன்னெல்லாம் பொங்கல் திருநாளில் நாம் ஆவலுடன் எதிர்பார்க்கும் விருந்தினர் தபால் காரர். அவர் கொண்டு வரும் வண்ண வண்ண அட்டைகளாக வந்து குவியும் பொங்கல் வாழ்த்துக்களில் நடிகர்கள்,தலைவர்கள் போன்றோர்கள் நம் வீட்டிற்கு வருவார்கள். காசுமீர் மலைகளும்,குமரிக்கடலும் நம் வீட்டில் எட்டிப்பார்க்கும்.. அந்த அட்டைகளின் எண்ணிக்கைதான் அக்காலத்து நம் குடும்ப கெளரவம். இப்போதெல்லாம் அலைபேசி குறுஞ்செய்திகளில் பொங்கலை குறுக்கி வாழ்த்தை வாட்ஸ் அப்பில் தெரிவித்து கொண்டிருக்கிறார்கள்.. சில சமயங்களில் அல்ல..பல சமயங்களில் அறிவியல் முன்னேற்றம் நம் இயற்கையான விழுமியங்களை விழுங்கி விட்டதோ என தோன்றுகிறது. ஆயிரம் இருந்தாலும்..பொங்கலில் தான் தமிழ் பிறக்கிறது,., வாழ்கிறது. ... சற்று நேரம் முன்பு அண்ணன் சீமானிடம் அலைபேசியில் பேசிக் கொண்டு இருந்தேன்.. சொந்த கிராமமான அரணையூருக்கு சென்று கொண்டிருப்பதாக சொன்னார்.. வருடாவருடம் தமிழர் திருநாளன்று தன் தாய் மண்ணில் இருப்பதை வழக்கமாக கொண்டிருப்பதையும் அவர் சொன்னார். மேலும் சொந்த மண்ணிற்கு திரும்புதல் தான் ஒவ்வொரு பூர்வகுடியும் கனவும் ...என்று சொன்னார். அவர் சொன்னதைதான் நான் சிந்திக்கிறேன். நண்பர் பாக்கியராசன் கூட அயலக வாழ்வை விட்டு ஊருக்கு திரும்புவதை சொல்லும் போது..இறுதி காலத்துல நம்மூர்ல போய் மண்ணோடு மண்ணா கலந்துடணும் தல என்று சொன்னதையும் நான் நினைத்துப் பார்த்தேன். தம்பி அறிவுச்செல்வன் என்கிற ராசீவ் காந்தி கூட உயர்நீதிமன்றத்தில் கோட்டு போட்டுக்கொண்டு வழக்கறிஞராக நிற்பதை விடவும்..சொந்த ஊர் கண்மாயில ஆடு மேய்ப்பதைதான் அண்ணா பெரிதாக நினைக்கிறேன் என்று சொன்னதும் நினைவிற்கு வந்தது. விடுதலைக்கு விலங்கு நூலை நான் எழுதிய போது அதன் நாயகனான ராசீவ் கொலை வழக்கு ஆயுட் கைதியான அண்ணன் ராபர்ட்பயஸ் சொன்னார்..தம்பி என் ஊரில் இருக்கும் வானம் தான் இங்கும் இருக்கிறது என்ற நினைப்பில் தான் நான் வானத்தையே பார்த்துக் கொண்டு இருக்கிறேன் என்றார். தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கூட தன் பூர்வீக கிராமத்தில் தான் படுத்துக் கிடக்கிறார் . இப்படி சொந்த மண்ணை நேசித்தல் பூர்வக்குடிகளின் மகத்தான இயல்பு. இது மண் மட்டுமல்ல.. என் முன்னோர்களின் கனவினையும்,நினைவினையும், வாழ்வினையும் சுமக்கின்ற நிலம். அந்த நிலம் தான் எம் உயிர். அதில் மீத்தேன் காற்றை எடுக்கவும், எரிவாயு குழாய்களை புதைக்கவும் யாரையும் அனுமதிக்க முடியாது.. நீ என் நிலத்தை தோண்டுகையில் என் தாத்தனின் மார்பினை பிளக்கிறாய்.. மீத்தேன் காற்றை உறிஞ்சுகையில் உறைந்துக் கிடக்கும் என் முன்னோனின் மூச்சுக்காற்றினை உறிஞ்சுகிறாய்.. இனி எம் மண்ணை மலடாக்கவும்., நீ சம்பாதிக்க பொருளாக்கவும் நான் அனுமதித்தேன் என்றால்.. நான் என்னையே விற்கிறேன் என்று பொருள்.. # மீத்தேன் எரிகாற்றுக்கு எதிராக ஒலிக்கிற ஒவ்வொரு குரலும் ... சாதாரண உரிமைக்குரல் அல்ல.. எம் மண்ணை மீட்டெடுக்கும் உயிர்க்குரல்..

இதோ..எம் நிலம் குறித்தும்..எம் மக்கள் குறித்தும் அப்படியே பிரதிபலிக்கிறார் அண்ணன் சீமான்..

http://www.youtube.com/watch?v=lULWQKHvq9U&feature=youtu.be

லசந்தா விக்கிரதுங்க. - சக மனிதனை நேசித்த இதழலாளன்.


"நம் இருவருக்கும் தெரியும், என் மரணத்துக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று. ஆனால், துணிந்து அவர் பெயரைச் சொல்ல முடியாது உன்னால். என் வாழ்க்கையில் மட்டுமல்ல, உன்னைப் பொறுத்து இதுதான் உனக்கும். உன் காலத்தில்தான் என் மரணம் நடந்தது என்பதை எந்த நேரத்திலும் உன்னால் மறக்க முடியாது!"

"என் மறைவு, சுதந்திரத்தை வீழ்த்தாது. இதற்காகப் போராடுபவர்கள் தொடர்ந்து பணியாற்ற ஊக்கமாக அமையும். நமது தாய்நாட்டின் மனித சுதந்திரத்துக்கு ஒரு தொடக்கமாக அமையும்."

- சிங்கள பத்திரிக்கையாளர் லசந்தா விக்கிரதுங்க. 


சுதந்திரமான உணர்வோடு ..காத்திரமான சிந்தனைகளோடு..உலகம் தழுவி மனித நேயத்தை நேசித்த மாபெரும் இதழியலாளர். லசந்தா விக்கிரமதுங்க.. 

தன் கண்முன்னால் இனப்பேரினவாத அரசால் தமிழ் மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்படும் போது மெளனமாக சகித்துக் கொண்டு..தொலைக்காட்சி பெட்டியிலும், சாராயக்கடையிலும் வீழ்ந்துக்கிடக்க அவர் ஒன்றும் தமிழ்நாட்டு தமிழனில்லை. எந்த சாமியார் எந்த நடிகையோடு புரண்டார்.. இன்றைய தின பலன் என்ன..யார் யாரோடு ஓடிப்போனார்..ரஜினி அரசியலுக்கு வருவரா..கருணாநிதி-ஜெ வின் இன்றைய சண்டை என்ன..தொப்புள் காட்டி நடிக்க மறுத்த நடிகை..தல யின் செல்ல மகளுக்கு பிறந்தநாள்..இளைய தளபதியின் இளைய மகன் காலையில கக்கூஸ் போகல.. என்றெல்லாம் செய்திகள் வெளியிடும் தமிழக ஊடகவியலாளரும் இல்லை. சிங்களனாய் பிறந்தாலும் மனிதனாய் வாழ்ந்த லசந்தா விக்கிரமதுங்க மனசாட்சி கொண்ட பத்திரிக்கையாளனாய் (நம்ம ஆளுங்க போல..இல்ல ) வாழ்ந்தவர். ஒரு காலத்தில் தனது நண்பனாய் விளங்கிய சிங்கள பேரினவாத அதிபர் இராசபக்சேவை தனது எழுத்துக்கள் மூலம் பதற வைத்த லசந்தாவின் அறச்சீற்றம் சிங்கள பேரினவாதத்தை சுட்டெரித்தது. இதன் விளைவாக 2009 சனவரி 8 ஆம் நாள் அன்று சிங்கள பேரினவாத கைக்கூலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். தமிழ்த் தேசிய இனம் இன அழிப்பினை எதிர்த்து குரல் கொடுத்து போராடிய தனது தோழனை விழியோரம் துளிர்க்கும் கண்ணீர் துளிகளோடு நினைவு கூர்கிறது.. இன்று அவருடைய 4 ஆம் ஆண்டு நினைவு நாள். 

#  வீரவணக்கம்.