இசைப்பிரியா என்ற என் தங்கை...


கடந்த 1-11-2013 அன்று இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி சிங்கள பேரினவாத இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக இழைத்த மற்றொரு கொடூரத்தை ஒளிபரப்பி உள்ளது. இசைப்பிரியா 2009 ல் நடந்த முள்ளிவாய்க்கால்  போரில் தான் இறந்தார் என்கின்ற சிங்களனின் கட்டுக்கதை இப்போது அம்பலமாகி இருக்கிறது.

http://www.youtube.com/watch?v=kjgX9FxR20g

எத்தனை முறை பார்த்தாலும் கண்ணில் உதிரம் வர வைக்கிற காட்சியாக தொலைக்காட்சிகளில் ஓடியும் ஒருவருக்கும் உறைக்கவில்லை என்றால் இது இனம் அல்ல பிணம். சொந்த தங்கையை அம்மணமாக அடித்து இழுத்துச்செல்கிறான் எதிரி. இங்கே பட்டாசு கொளுத்திக்கொண்டும், புத்தாடை அணிந்துக் கொண்டும், தல படம் பார்த்துக்கொண்டும், டாஸ்மாக்கில் குடித்துக் கொண்டும் கும்மாளமாக இருக்கிறான் தமிழன். இப்படிப்பட்ட தன்மானற்ற ,தரங்கெட்ட இனத்தில் தான் நாமும் பிறந்திருக்கிறோம் என எண்ணும் போது வெட்கி தலைக்குனிகிறேன்.

இசைப்பிரியாவின் படத்தை அப்படியே போடாதீர்கள்  என்கிறார்கள்..வேறு  என்ன செய்ய வேண்டும்...? படத்தை காட்டினால் இந்த இனம் என்கிற பிணத்திற்கு உயிர் வர வில்லையே.. மரணங்களை காட்டித்தான் மரத்துப் போனவனை உசுப்ப வேண்டி இருக்கிறது. துயரங்களை காட்டித்தான் தூங்கிக் கொண்டிருப்பவனின் உறக்கத்தை கலைக்க வேண்டி இருக்கிறது. இத்தனையும் காட்டிய பிறகும் கூட எவனுக்கு இங்கே என்ன நடந்து விட்டது ?. அது என் தங்கை இசைப்பிரியாவின் நிர்வாணம் அல்ல. நான் வெட்கப்பட்டு மறைக்க. மனித தன்மை அற்றுப் போன பேரினவாதமொன்றின் கொடூரம். ரத்தமும், சதையுமாக அம்பலப்படுத்திதான் எமக்கான நீதியை கோருகிறோம். இது வியாபாரமோ,விளம்பரமோ அல்ல. மூடிக் கிடக்கும் உலகத்தின் கண்களை திறப்பதற்கான வெளிச்சம். பதிவிடும் அனைவருமே கலங்கிய கண்களோடும் ,வலி நிறைந்த நெஞ்சோடும் தான் பதிவு இடுகிறோம். வீட்டிற்குள் அமர்ந்திருக்கும் தங்கையின் உடை விலகினால் கூட சரியா உட்கார் என்று அறிவுறுத்துகிற இனத்தின் மகள் தான் நிர்வாணமாக்கப்பட்டு கொல்லப்படுகிறாள். எதிர்த்து கேட்டு நம் சகோதரர்கள் மாவீரர்களாய் விண்ணுக்கு போனார்கள்.நாம் மண்ணில் மானங்கெட்டவர்களாய்..அவமானத்தின் ...சாட்சிகளாய்...அடிமை தேசிய இனமாய் வாழ்கிறோம்..வாழ்கிறோம்


அனைவருக்கும் தெரியும் என்றே நினைக்கிறேன். என்ன செய்யலாம் இதற்காக என்ற புத்தகம்.மதுரை பிரபாகரன் வெளியிட்டது. நூல் முழுக்க ரத்தமும், சதையுமான புகைப்படங்கள் தான்.. இது போன்ற பதிவுகளை வெளியிட வேறு எந்த காரணங்களும் இல்லை. இதெல்லாம் ஒரு வகையான நீதி கோரல் தான். நீதிமன்றத்தில் கூட தாக்கல் செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையில் திட்டிய வார்த்தைகளை கூட அப்படியே சென்சார் செய்யாமல் தான் குறிப்பிடுவார்கள். காரணம் சம்பந்தப்பட்ட குற்றம் மிகச்சரியாக அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கம் தான். நம் தங்கை நிர்வாணமாக கிடப்பது வேதனைதான். நமக்கு இழிவுதான். என்ன செய்வது.. ஆனால் அந்த படத்தை காட்டியும் நமக்கான , நம் தங்கைக்கான நீதி வழங்கப்பட்டு விட்டதா...இல்லையே... என் தங்கையை நிர்வாணமாக பார்க்க விரும்பிய கண்களுக்கு வேண்டுமானால் அது நிர்வாணம். ஆனால் எனக்கு என் தாய் தான் அங்கே வீழ்ந்து கிடக்கிறாள் . இதை விட எப்படி சொல்ல இயலும் என எனக்கு புரியவில்லை. நாமெல்லாம் நினைப்பது போன்ற கண்ணியமான..நேர்மையான ஒரு  சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோமா என்று நான் உணரவில்லை .

No comments: