தாய்நிலத்தை நேசிக்கும் தீரர்களின் போராட்ட பூமி -இடிந்தகரை


அவர்கள் சுழன்றடிக்கும் கடல் காற்றில் படகேறி வந்து சாரை சாரையாய் அந்த கடற்கரையோரம் அமைதியாக காத்திருந்தார்கள். கம்பீரமான அந்த அமைதி மூலம் இந்த உலகிற்கு செய்தி ஒன்றினை அவர்கள் தெரிவிக்க முயன்றார்கள். அந்த எளிய மக்கள் மாபெரும் கல்வி அறிவு கொண்டவர்கள் அல்ல. மதிப்பிற்குரிய அப்துல்கலாம் போல  ஏவுகணை நுட்பங்களை அறிந்தவர்கள் அல்ல. அமைச்சர் நாராயணசாமி போல அதிகார பலம் கொண்டவர்கள் அல்ல. திமுக தலைவர் கருணாநிதி போல போராட்டம் என்ற பெயரில் நடிக்கத் தெரிந்தவர்கள் அல்லமுதல் நாள் வரை ஆதரித்து விட்டு நம்பி நிற்கும் மக்களை நிராதரவாய் கைவிட்ட  தமிழக முதல்வர் ஜெயலலிதா போல நிமிட முடிவுகளை நொடிகளில் மாற்றும் வல்லமை கொண்டவர்கள் அல்ல. மாறாக எளிய கடற்கரை கிராம மக்கள். அன்றாடபிழைப்பிற்கு உயிரைப் பணயம் வைத்தால் தான் அன்றைய உணவு என்ற நெருக்கடியில் வாழ்பவர்கள் .
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாக தங்களைச்சுற்றி கட்டியெழுப்பப்பட்டு வரும்  மாபெரும் வல்லரசு ஒன்றின் அதிகாரம் தோய்ந்த கனவினை அவர்கள் தீரத்துடன் எதிர்த்து நின்றார்கள். சவரம் செய்யப்படாத ஒருவர்..தான் தேவ தூதனில்லை என அறிவித்துக் கொண்டு அமெரிக்காவில் பார்த்த வருமானம் வரத்தக்க பணியினை தூக்கி எறிந்து விட்டு அவர்கள் மத்தியில் வந்து சேர்ந்தார். அண்ணல் அம்பேத்கர் உரைத்தது போலகற்பி.ஒன்று சேர்.புரட்சி செய்..    அனைத்தும் நடந்தது.  இதற்காக அவர் கொடுத்த விலை மிகப் பெரியது. அவரது பள்ளிக்கூட்த்தினை இடித்து தரைமட்டமாக்கினர். போராட்டத்திற்காக நிதி வசூலிக்கிறார் என ஆயிரக்கணக்கான கோடிகளில் ஊழலில் திளைத்தவர்கள் குற்றம் சாட்டினர். அவர் அமைதியாக அங்குள்ள குழந்தைகளுக்கு வரப்போகும் ஆபத்து குறித்து வகுப்பெடுத்துக் கொண்டு இருந்தார். கடலுக்குப் போகும் மீனவன் ஒரு அறிவியல் விஞ்ஞானி அளவிற்கு புள்ளிவிபரங்களோடு ஆதாரப்பூர்வமாக விவாதிக்க துவங்கியது அங்குதான் நடந்தேறியது.
தன்னை ஒரு வளர்ந்து வரும் வல்லரசு என பீற்றிக் கொள்ளும் இந்தியாவின் ஜனநாயக முகத்திரையை கிழித்து எறிந்து இருக்கிறார்கள் இடிந்தகரை மக்களும், அண்ணன் உதயகுமார் அவர்களும்.  ராணுவம்,காவல்துறை,அதிகாரிகள்,அரசியல் தலைவர்கள்,ஊடகம் என அனைத்து விதமான சர்வாதிகாரமும் எளிய அம்மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டன. ஆனால் அவர்கள் அசரவே இல்லை. ஆரம்பத்தில் ஆதரவு தருவது போல நடித்து பின் நட்டாற்றில் கைவிட்ட தமிழக முதல்வரின் நடவடிக்கைகள் அம்மக்களை சற்றே பின்னடைய வைத்தாலும் அவர்கள் சோர்ந்து விடவில்லை . வல்லாதிக்க அரசின் பிரதிநிதியாகவே மாறிவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் கூட இடிந்தகரை மக்களுக்கு எதிராக நின்ற போதும் அவர்கள் உறுதியாகவே நின்றார்கள்.
இடிந்தகரையில் பிறந்திருக்கின்ற ஒரு சின்னஞ்சிறிய சிறுமிக்கு கூட அணு உலையின் ஆபத்து பற்றி புள்ளி விபரங்களோடு தெரிந்திருக்கிறது என்றால்..அது அண்ணன் உதயகுமார் அவர்களின் கடும் முயற்சியோடு வழங்கப்பட்ட பயிற்சி.
ஒரு வருட காலத்திற்கும் மேலாக ஆயிரக்கணக்கில் மக்களை திரள வைத்துக் கொண்டு ஒரு கோரிக்கையை தீவிரமாக எடுத்து வைத்து போராடுவது என்பது மிக சுலபமல்ல. அந்த வகையில் இடிந்தகரை மக்களும், அண்ணன் உதயகுமாரும் சமூகப் போராட்டங்களை சளைக்காமல் முன்னெடுக்கும் சக்திகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்திருக்கிறார்கள் . ஒரு மாபெரும் போராட்டத்தில் மக்கள் திரளை சளைக்காமல் பங்கெடுக்க வைப்பதற்கு மாபெரும் உளவியல் உந்துதல் தேவைப்படுகிறது. போராட்டங்களை எப்போதும் சாதாரண மக்கள் விரும்புவதில்லை. ஆனால் ஊழல் மலிந்த , பாகுபாடு நீதி முறை கொண்ட ,எப்போதும் அநீதிக்கு ஆதரவாக நிற்கின்ற அரசாதிகாரம் மக்களை போராட்டங்களுக்கு வலிந்து தள்ளுகின்றன. உடை, உணவு,உறையுள் ஆகிய 3 முக்கிய அம்சங்களில் ஏதேனும் ஒன்று பாதிக்கப்பட்டால் தான் சாதாரண மனிதன் வீதிக்கு வருகிறான் . ஆனால் இடிந்தகரை மக்கள் தம் மண்ணிற்காக, தன் எதிர்கால தலைமுறைக்காக போராடுகிறார்கள்.
மண்ணின் மைந்தர்கள் தங்கள் நிலம் காக்க  போராடுவதும்,அரச வல்லாதிக்க கரம் வன்முறை முகம் காட்டி அதனை முடக்க முயல்வதும் தமிழரின் வரலாற்றில் காலங்காலமாய் நடந்து வரும் நிகழ்வுகளாகும். எதிரி வலிமையானவன் என நன்கு தெரிந்தும் வேல் கொண்டும் வாள் கொண்டும் வெற்றிவேல், வீரவேல் என முழங்கி எதிரி நோக்கி பாய்ந்த பூலித்தேவன், மருது பாண்டியர், ராணி மங்கம்மாள் என நீளும் வீர மரபு மகத்தானது. தாய் மண்ணை காக்க போராடிய விடுதலைப் போராட்டம் தான் ஈழ மண்ணில் ரத்தம் சிந்தும் மாவீரர்களையும், தன்னையே இழந்து தன்னிலம் காக்க நின்ற தலைவனையும் இந்த உலகிற்கு அடையாளம் காட்டியது.  
  வெறும் வாழ்விடம் தானே..வெறும் நிலம் தானே.. அரசு காட்டும் வேற்றிடத்திற்கு போகவேண்டியது தானே.. என்றெல்லாம் குரல்கள் இடிந்தகரை மக்கள் மீது பாய்கின்றன. எம் பாட்டனும்,பூட்டனும் வழிவழியாய் வாழ்ந்து ,கலந்து,திரிந்து,சுமந்த நிலத்தினை அரச ஏதோச்சிக்கார வல்லாண்மை ஆசைக்கு பலி கொடுத்து விட்டு , பன்னாட்டு மயத்தின் மினுக்கத்தினால்  மேற்பூச்சில் மினுங்க நகர பொருளியல் வாழ்விற்காக  பூர்வீக பூமியை தொலைத்து விட்டு நகர தமிழ்த் தேசிய இனம் போன்ற தொன்ம இனங்களுக்கு எப்படி முடியும்..?
அணு உலை ஆபத்தானது என்றும், சுற்றுப்புற சூழலுக்கு எதிரானது என தெரிந்தும், தங்கள் அழிவிற்கு தாங்களே சம்மதிக்க வேண்டும் என கூடங்குளம், இடிந்த கரை மக்கள் மீது அரச பயங்கரவாதம் தொடுத்திருக்கும் இப்போர் அநீதியானது. ஆனால் உலகம் முழுக்க வாழும் பூர்வீக குடிகள் போலவே அம்மக்களும் தங்கள் மீது திணிக்கப்படும் அநீதி அணு உலையை அசராமல் எதிர்த்து வருகிறார்கள். மின்சாரம் தயாரிக்க மயானமாய் கூடங்குளமும்,இடிந்தகரையும் மாற வேண்டும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. கனிம வள கொள்ளைக்காக தண்டகாரண்ய காடுகள் துவங்கி தனது பேராசை நாவினை அலைய விடும் இந்திய வல்லாதிக்கத்தின் கொடூர முகம் .. இன்று கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிற மக்களையும் தீவிரவாதிகளாய்,வன்முறை வாதிகளாய் அடையாளம் காட்ட ஆசையுடன் நிற்கிறது. வெள்ளைக் கொடி ஏந்தி போராடும் அம் மக்கள் உலகின் மாபெரும் ஜனநாயக நாட்டின் கொடுங்கோன்மை பக்கங்களுக்கு வாழும் சாட்சிகளாக விளங்குகிறார்கள்.  தமிழ் மண்ணில் பிற இனத்தவர் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு, வசதி, தகுதிகளை ஏற்படுத்தி ஏற்றிவிடும்  தத்துவங்களாக ஒளிரும் திராவிடம், இந்திய தேசியம் என்பவற்றின் மீது நிற்கும் திராவிட தேசிய கட்சிகள்(விதிவிலக்கு மதிமுக மட்டும்) அணு உலைக்கு ஆதரவாக நிற்பதன் மூலமே புரியவில்லையா...? இது பூர்வீக குடி மக்களின் உரிமை போராட்டம் என.   காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. பொய்மையின் பூச்சினில் மிளிர்ந்த முகங்கள் அம்மணமாகி அம்பலப்பட்டுக் கொண்டே இருக்கின்றன..வெகு காலம் இப்படியே  நகர முடியாது. ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்கு முன்னோடம் தான் தாய் மண்ணை தன் உயிருக்கு மேலாக நேசிக்கும் தீரர்களின் பூமி – இடிந்தகரை.

இருண்மை வீதியில்
வெளிச்சத்துகள் உமிழும்
வெப்பம் சற்றே
காத்திரமானது தான்..

அதிகார நாவுகளின்
கொடுங்கோன்மை சொற்கள்
காலங்காலமாய் இதில் தான்
குளிர் காய்ந்தன..

ஏய்த்து மாய்மாலம் செய்த
முகங்கள் இதில் தான்
உல்லாச உவகையில்
சிவந்து திரிந்தன..

 பொய்மையில் நெளிந்த
நாவுகள் இதில் தான்
இந்த வெப்பத்தில் தான்
உண்மையின் உடலங்களை
பொசுக்கி பசியாறின..

அடுப்பில் நெருப்பாய்
அமைதியாய்
அமர்ந்திருக்கும்
இந்த நெருப்புத்தான் –நாளை
எரிமலையாய் எகிற இருக்கிறது
என்பது  இங்கு
எத்தனை பேருக்கு
தெரியும்....?

-மணி. செந்தில்


1 comment:

Prem said...

தோழரே உங்கள் கருத்துகளை நான் போராட்ட களத்தில் உபயோக படுத்தி உள்ளேன்... https://www.facebook.com/groups/stopkoodankulamatomicplant/

உங்கள் கருத்துகள் மிகவும் அருமை..