பறை மொழி அறிதல்..



அடி விழ… அடி விழ
அதிரும் பறை.
தலைமுறைக் கோபம்.
-மித்ரா

குடந்தை தமிழ்க் கழக பொறுப்பாளர் தோழர்.சுடர் பறைக் கற்றுக் கொள்ள போவதாக என்னிடம் கூறிய போது எனக்கு வியப்பும், மகிழ்வும் ஏற்பட்டது. பறை என்ற தொன்மத்தின் மீது நான் வெகு நீண்ட காலமாக சற்று மிதம் மிஞ்சிய ஈர்ப்பில் இருந்தேன். தமிழ் தொன்மக் கூறான பறை என்ற இசை வடிவம் திட்டமிட்டு வந்தேறிய சாதீயக் காரணிகளினால் ஒதுக்கப் பட்ட கலையாகவும், அதை உள் வாங்கி இசைத்த மனிதன் விளிம்பு நிலை பிறவியாகவும் திரிக்கப்பட்டதன் அவலம் உணர்ந்த பின் ..என் தொன்மக் கலையின் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்படாமல் என்ன செய்யும்..?

கலை இலக்கிய இரவுகளில் மக்கள் நடுவே பறை இசை நிகழ்த்தப்படும் போது என்னையும் அறியாமல் பறை இசைக்குள் ஊடுருவிக் கொண்டிருந்தேன்.ஆண்டைகளின் மீதுள்ள கோபத்தினை..உழும் மாடுகளின் மீது செலுத்திய என் தமிழனின் கோபம் ..பறை மீது ..இசையாய் மாறியது என்று நானே உணர துவங்கியக் காலக் கட்டத்தில் நான் இன்னமும் பறை அருகே நெருங்கினேன்.

என் பூர்வீக கிராமத் திருவிழாக்களின் போது பறை இசைக் கலைஞர்களோடு மிக நெருக்கமான மனிதனாய் நெருங்கியதும் பறை மீதுள்ள பற்றின் காரணமாகத்தான்.உலகம் முழுக்க ஆதி மனித இனங்களின் இசைக் கருவியாக இழுத்து தைக்கப்பட்ட மிருகங்களின் தோல்தான் இருந்து வருகிறது என்பதும்..ஆப்பிரிக்க பூர்வீக மக்களின் தொன்ம இசை வடிவமும் நம் பறை போன்ற ஒன்றுதான் என்பதும் என்னை வெகுவாக கவர்ந்தன.
அதனால்தான் தோழர் சுடர் அழைத்தவுடன் நான் மிகவும் உற்சாகத்தில் விஷ்ணுபுரம் சரவணனை அழைத்துக் கொண்டு பறை இசைப் பயிற்சி நடக்கும் மைதானத்தினை நோக்கி விரைந்தேன்.

.
நாங்கள் அங்கே சென்ற போது ஒரு பூசைக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டன. இரண்டு பறைகளும், சில மூங்கில் துண்டுகளும் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டு இருந்தன.ஒரு வயதான பறை ஆசிரியரும், அவரது மகனும் பூசைக்கான பணிகளில் இருந்தனர். அதில் அந்த வயதான பெரியவருக்கு இடது கை சற்று ஊனமாகவும், இரண்டு விரல்கள் இல்லாமல் இருந்ததும் கவனிக்கத் தக்கதாக இருந்தன.பூசைகள் முடிந்து பயிற்சி துவங்கும் போது பறை நாம் தமிழர் குடந்தை ஒருங்கிணைப்பாளர் தம்பி புகழ் மாறன் கரங்களில் இருந்தது. மற்றொரு பறை கற்றுக் கொடுக்கும் வயதான ஆசிரியர் கையில் இருந்தது.நான் கண்களில் ஆர்வம் தெறிக்க கவனித்துக் கொண்டிருந்தேன். முதலில் பறை அடிக்கும் குச்சிகளை எப்படி பிடித்துக்கொள்ள வேண்டும் என கற்றுக் கொடுக்கப்பட்டது.புகழ் மாறன் முயற்சி செய்துக் கொண்டிருந்தான். அவனுக்கு பறை அவ்வளவு இலகுவாக வரவில்லை. அடுத்தது பறை எனக்கு அளிக்கப்பட்டது.
.
இழுத்துக் கட்டப்பட்ட அந்த பழுப்பேறிய பறையினை மெதுவாக நான் தடவிப்பார்த்தேன். எனது புலன்களில் இனம் புரியாத நடுக்கம். எனக்குள் இருந்த என் இனத்தின் ஆதி மரபுணுக் கூறுவினை யாரோ தொட்டு எழுப்பியது போல ஒரு உணர்வு. மெலிதாய் தட்டிப்பார்த்தேன். பறை அதிர்ந்தது. அதன் அதிர்வில் என்னை சுற்றியுள்ள அனைத்தும் அசையாத் தன்மை உடையதாக மாறி விட்டதாக நான் உணர்ந்தேன்.

நானும் என் மூதாதையின் கரங்களை உடையவனாக மாறிப் போனேன். ஆசிரியர் சொல்லிக் கொடுப்பது என்னுள் இறங்க துவங்கியது. ஆசிரியர் அடிக்கத் துவங்கினார். நானும் அடிக்கத் துவங்கினேன். மிக எளிதாக பறை என் வசப்பட்டது.மேலும் மேலும் என்னுள் உக்கிரம் ஏறிக் கொண்டே இருந்தது.வானில் நிலா காய்ந்துக் கொண்டிருந்தது. என் முன் நிற்பவர்கள் மறைந்துப் போனார்கள். நான் அடித்துக் கொண்டிருந்தேன். ஒரு ஒழுங்கு வயப்பட்ட ஒலியை என் இனத்தின் வலியை நினைத்துக் கொண்டு வாசித்துக் கொண்டிருந்தேன். ஈழ நினைவும், வலியும் என்னை மேன் மேலும் உக்கிரப்படுத்தியது. உடலும் மெலிதாக ஆடத் துவங்கியது. அடித்துக் கொண்டே இருந்தேன். தாளக் கட்டுக்கள் மாற்றி வாசித்து காண்பிக்கப்பட்டும் என்னுள் உள்ள வலியும் ,உக்கிரமும் என் தொன்மத்தில் கிளர்ந்து என்னை மயக்க நிலைக்கு இட்டு சென்றது. என் முன்னால் என் மக்கள் பிணங்களாய் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். என் பறை மேலும் உக்கிரமடைந்தது. யாரும் எங்களுக்கு இல்லை..என்ற உணர்வும் தவிப்பும் என்னை தாங்க இயலா சோகத்திற்கு இட்டு சென்றன..என் பறையில் என் மூதாதை உக்கிரமாக வெளிப்படுவது போன்ற உணர்வு. கரங்கள் வலித்தன. கையில் வைத்திருந்த குச்சிகள் பிய்த்துக் கொண்டு போயின.நானும் ,அந்த வயதான பெரியவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அடித்துக் கொண்டிருந்தோம்.

கரங்களின் வலி அதிகரிக்கவே..அடிப்பதை நிறுத்தினேன். கரங்கள் வலிப்பதாக கூறியவுடன்.. தம்பி புகழ் நம் தேசிய தலைவரை நினைத்துக் கொள்ளுங்கள் என்றான். நான் மீண்டும் உக்கிரமாக அடிக்க துவங்கினேன்.

பறை மொழி மிகவும் வசீகரமானது மட்டுமல்ல..உள்ளுக்குள் ஊறும் அனைத்தையும் கிளறக் கூடியது. சமீப கால எனது வலி மிகுந்த துயர் மனநிலை பறையுடன் மிக எளிதாகப் பொருந்திப் போனது.ஒவ்வொரு அதிர்விலும் நூற்றாண்டுகளை கடந்து என் இனத்து மூதாதையின் அருகே இருந்து விட்டு வருவது போன்ற உணர்வு. வேறு எந்த இசை வடிவமும் என்னை இவ்வாறு அலைக் கழித்தது இல்லை.என் நிகழ்கால வலியை..எனது துயரத்தினை எனது ஆதி துவக்கத்தின் கரங்களில் வைத்துகொண்டு அழுவது போன்ற அனுபவத்தினை பறை எனக்களித்தது..அந்த இரவும்..அந்த வயதான ஆசிரியரும், அந்த ஒழுங்கமைவு இசையும் என் மனநிலையை பிறழச் செய்தன.சம காலத்தில் என் கண் முன்னரே என் இனம் அழிக்கப்பட்டதை எண்ணி எண்ணி எனக்குள் ஊறிக் கொண்டே இருக்கும் குற்ற உணர்வின் வெளிப்பாடாய் பறையின் மொழி வெளி வந்தது.

ஒரு ஒலிக்கும்..உணர்வுகளுக்கும் இடையில் நிகழும் ஒத்திசைவு பறையில் நிகழ்வது போல வேறு எதிலும் நிகழ்வது இல்லை.

பறை எனக்கானதும்..என் தொன்ம இனத்தின் இசைக்கானதும் ஆகும்.ஆண்டாண்டு காலமாக அதிர்ந்துக் கொண்டிருக்கும் பறையின் மொழி மனிதனின் துயரத்தினை,வலியை, கோபத்தினை ,உக்கிரத்தினை சொல்கிறது.
வாசித்து முடித்ததும் அந்த வயதான பெரியவர் என்னை இறுக அணைத்து முத்தமிட்டார். அதிர்ந்து அதிர்ந்து உணர்வேறிய அவரது விரல்களும் அப்போது நடுங்கின என்பதை நான் உணர்ந்தேன்.

. வானம் இருட்டிக் கொண்டு மழை பெய்ய துவங்கியது.

5 comments:

மாசிலன் said...

பராசக்தியில் குற்றவாளிக் கூண்டிலிருந்தபடி சிவாஜி கணேசன் பேசும் வசனத்தின் வேகத்திலும் அதே உணர்ச்சி பூர்வ நிலையிலும் படித்து உணரும்படி உள்ளது உங்களது பதிவு.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

மாசிலா said...

மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் தோழரே.

அழகு என்பது அதை இரசிக்கத் தெரிந்த கண்களுக்குள் இருக்கிறது என்பது போல்தான் இசை, கலை, நயம், பண்பாடு ஆகியவைகளும்.

அல்லது, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல், இந்த பறை இசையிலும் நம் மன வலிகளை வெளியேற்ற உதவும் வடிகால்கள் போன்ற சில மாய சக்திகள் மறைந்து இருக்கின்றன என்பதை நிரூபிக்க முயற்சிக்கிறீர்கள்.

இந்த கணினி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை காலத்திலும் இந்த கோணலில் பறை சார்ந்த உலகத்தை அனுபவித்து இவ்வளவு உயர தூக்கி போற்றி எழுத மிகுந்த துணிச்சலும் தைரியமும் தேவை. ஒரு வேளை, கற்பனை உலகில் வாழும் கவிஞரோ நீங்கள் என சந்தேகமாக இருக்கிறது.

மண்ணின் வாசனை மற்றும் அதில் பாய்ந்து வேரூண்றி அதே சமயம் நவீன காலங்களின் மாற்றங்களால் மறைந்து அழிந்துவரும் நமது அடையாளங்களை உணர்ச்சி பூர்வமாக வடித்து கொடுத்து விழிப்புணர்வூட்டியதற்கும் மிக்க நன்றி.

தொடர்ந்து எழுதிவாருங்கள்.

சுந்தரவடிவேல் said...

பறை நம்மோடு வந்துகொண்டேயிருப்பது. பறையைச் சமூகம் தள்ளியே வைத்திருக்கிறபோதும் அதன் ஒலியும் வேகமும் நமைவந்து ஆட்கொள்வதைத் தடுக்க யாரால் முடியும்? நல்லது. பறையின் அருமை இத்தலைமுறைக்குத் தெரியத் துவங்கியிருக்கிறது. இனி அது உலகெங்கும் ஒலித்து உயிர்களை எழுப்பும். மூதாதையரின் குரல்களில் அது பேசும்.
நல்லனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

thamizmagiz said...

உணர்வுகளை அற்புதமாக பறைந்திருக்கிறீர்கள்.
பறை மீதும், இனத்தின் மீதும் ஈர்ப்பு பொங்குகிறது.
நன்றி

naanjil said...

அமெரிக்காவில் பெட்னா 2008 தமிழ்த் திருவிழாவில் பறை இசை நிகழச்சி ஒன்றை திரு. பொற்செழியன் நடத்தினார்கள். அருமையாக இருந்தது. நாங்கள் இழந்ததை மீட்க முயற்ச்சிக்கிறோம். வளர்க உங்கள் பணி.
அன்புடன் நாஞ்சில் பீற்றர்
www.worldthamil.org