பேராண்மை -புனைவின் அரசியல்


சமீப கால திரைப்படங்களில் ஜனநாதன் இயக்கிய பேராண்மை திரைப்படம் திரையில் விவரிக்கிற புனைவின் அரசியல் நிராகரிக்கத் தக்கதாக நான் உணர்கிறேன். திரைமொழியில் அரசியலையும் தத்துவங்களையும் தெளிவான முறையில் கூறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கிறார் பேராண்மை ஜனநாதன் . படம் துவங்கிய ஆரம்ப காட்சிகளில் காட்டப்படும் வன கிராமமும், அதன் இயல்பான முகங்களும், அந்த கால்நடை பிரசவமும் நம்மை இருக்கையில் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ஆனால் இரட்டை அர்த்த வசனம் பேசும் மேல்வர்க்க,மேல் சாதியாய் உருவகப் படுத்தப்படும் பெண்களால் சாதீய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் கதாநாயகனின் கதாபாத்திரம் திரையில் ஏதாவது ஒரு காட்சியில் சாதீய ஒடுக்குமுறைக்கு எதிரான தனது குரலை பதிவு செய்யும் என ஆவலாய் நாம் அமர்ந்திருந்தால்…ஏமாற்றம் தான் .மேலும் இந்தியக் கொடிக்காவும், நாட்டிற்காகவும் உயிரைக் கொடுக்கவும், துப்பாக்கி தூக்கி தாக்கவும் அர்ஜீனும், விஜயகாந்தும் போதும். அதற்கு அரசு இயந்திரங்களால் சூறையாடப்படும் ஆதி சமூகத்தின் வன மனிதன் தேவை இல்லை. வகுப்பறையில் மார்க்சிய கூறுகளை எளிமையாக விளக்கும் கதாநாயகன் காட்டின் நடுவே அதிகார மையத்தின் சின்னமாக இருக்கும் இந்திய நாட்டிற்கு உயிரைக் கொடுப்பதாக சூளுரைப்பதும், சாதீய ஒடுக்குமுறையினை சகித்துக் கொண்டு மெளனித்திருப்பதும் முரண்களே.. தேசிய இனங்களின் விழிப்பு நிலை சமீப காலமாக உச்ச நிலைக்கு விரையும் இக்காலக் கட்டத்தில் பேராண்மை நிறுவ விரும்புவது எவற்றை..?
1.இந்திய ஏவுகணையை தகர்ப்பதற்காக காடு மலை ஏரி என கண்ணன் தேவன் டீக்காக அலையும் பி.டி.உஷாவினை போல அலையும் சர்வதேச கூலிப்படைக்கு எதிராக போராட விளிம்பு நிலை மனிதர்களும் தயாராக வேண்டும்- தங்களுக்கு எதிராக நாடும், அதன் ராணுவ,காவல் கட்டமைப்பு இயந்திரங்களும் நிகழ்த்தும் வன்முறைகளை ஏற்றுக் கொண்டு அவர்களும் நாட்டினை காக்க போராட வேண்டும் என்று ஜனநாதன் சொல்ல வருகிறாரா?
2. ஆதி வனத் தமிழின பழங்குடி மக்களின் மீது நிகழ்த்தப்படும் சாதீய, அரசு வன்முறையை விட இந்திய தேசியம் உயர்வானது என்று கதாநாயகன் மெளனமாக சகித்திருப்பதும், அதை காக்க போராடுவதும், இந்தியா எனும் பெருமிதத்திற்கு முன்னால் எளிய மக்களின் மீதான சாதீய, அரசு வன்முறை எதிர்வினை புரியத் தக்கதல்ல என்பதனை இறுதிக் காட்சி வரை உறுதி செய்வதன் மூலம் மக்களை விட அரசின் எல்லையற்ற அதிகாரம் ( THE KING CAN DO NO WRONG) என்பதை ஜனநாதன் நிறுவ முயல்கிறாரா.?

தெளிவில்லாத திரைமொழியும், அது நிறுவ முயலும் தத்துவமாக இருக்கும் இந்திய தேசிய உணர்வு காட்சிகளும் நம்மை மிகவும் சோர்விற்கு உள்ளாக்குகின்றன.. உன்னைப் போல் ஒருவன் ஒரு இந்திய பார்ப்பன இந்துத்வா குரலாய் ஒலித்தது..பேராண்மை இந்திய தேசிய மேலாதிக்கத்தினை எளிய மனிதர்கள் மீது நிகழ்த்தப்படும் சாதீய, அரசு வன்முறைகளை மெளனமாக கடப்பது போன்ற வழிமுறைகள் மூலம் நிறுவ முயல்கிறது. முன்னதை விட பின்னது மிகவும் அபாயகரமானதொன்றாக நான் உணர்கிறேன். கண் சிவந்தால் மண் சிவக்கும் ,ஆணிவேர்,கோவில் பட்டி வீரலட்சுமி ஆதிக்க எதிர்ப்புணர்வு போன்ற படங்களுக்கான இந்திய தேசியத்தின் உரத்த, சாசக மறுமொழியாக பேராண்மை இருக்கின்றது.


இயற்கை, ஈ போன்ற படங்களை வைத்து பேராண்மையை கடக்க முடியாது. தமிழ் மொழி கல்வி பயின்ற கதாநாயகிக்கு மட்டும் அந்த ஆதி இளைஞன் மீது காதல் வருவதாக சித்தரிப்பது போற்றத் தக்கது என்றால் அந்த கதாநாயகியும் மற்ற ஆங்கில கல்வி பயின்ற மேல்சாதி,மேல் வர்க்க தோழிகளுக்கு கட்டுப்பட்டவளாக காட்டப்படுவது சலிப்பை தருகிறது. தமிழ் மொழி பயின்றவள் என்றால் திரை மொழியில் பலவீனமான ஒரு கதாபாத்திரமாக சித்தரிப்பது பல படங்களில் தொடர்வது போல இதிலும் தொடர்கின்றது. மற்றப் படி என்.சி.சி மாணவிகளுக்கு ஏவுகணை தொழிற்நுட்பமும், அதி நவீன இயந்திர துப்பாக்கிகளும் கைவரக் கொடுக்கும் கல்வி நம் நாட்டில் எங்கே இருக்கிறது.., அதி பாதுகாப்பு உடைய ஒரு இடத்தின் அருகில் மிக எளிதாக மற்றொரு ஏவுகணையை நிறுவுவது ….போன்ற துளைகள் நிரம்பிய திரைமொழியில் பேராண்மை வடிவேல் கண்கலங்க பேசும் ஒரு வசனத்திலும், உடல் ஊனமுற்ற அந்த ஆதி மனிதன் தன் கைகளால் நடந்து தாக்க முயல்கிற மூர்க்கத்திலும் - நின்று விட போராடுகிறது.


பிழைகள் அற்ற திரைமொழி சாத்தியமில்லைதான்.. ஆனால் பேராண்மை சாத்தியப்படுத்த முயலும் எதிர்வினையற்ற சாதீய, அரசு இயந்திரங்களின் வன்முறை காட்சிகள் மறுக்கவே இயலா பிழைகள் தான்.


நன்றி: தோழர்.விஷ்ணுபுரம் சரவணன்

பறை மொழி அறிதல்..



அடி விழ… அடி விழ
அதிரும் பறை.
தலைமுறைக் கோபம்.
-மித்ரா

குடந்தை தமிழ்க் கழக பொறுப்பாளர் தோழர்.சுடர் பறைக் கற்றுக் கொள்ள போவதாக என்னிடம் கூறிய போது எனக்கு வியப்பும், மகிழ்வும் ஏற்பட்டது. பறை என்ற தொன்மத்தின் மீது நான் வெகு நீண்ட காலமாக சற்று மிதம் மிஞ்சிய ஈர்ப்பில் இருந்தேன். தமிழ் தொன்மக் கூறான பறை என்ற இசை வடிவம் திட்டமிட்டு வந்தேறிய சாதீயக் காரணிகளினால் ஒதுக்கப் பட்ட கலையாகவும், அதை உள் வாங்கி இசைத்த மனிதன் விளிம்பு நிலை பிறவியாகவும் திரிக்கப்பட்டதன் அவலம் உணர்ந்த பின் ..என் தொன்மக் கலையின் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்படாமல் என்ன செய்யும்..?

கலை இலக்கிய இரவுகளில் மக்கள் நடுவே பறை இசை நிகழ்த்தப்படும் போது என்னையும் அறியாமல் பறை இசைக்குள் ஊடுருவிக் கொண்டிருந்தேன்.ஆண்டைகளின் மீதுள்ள கோபத்தினை..உழும் மாடுகளின் மீது செலுத்திய என் தமிழனின் கோபம் ..பறை மீது ..இசையாய் மாறியது என்று நானே உணர துவங்கியக் காலக் கட்டத்தில் நான் இன்னமும் பறை அருகே நெருங்கினேன்.

என் பூர்வீக கிராமத் திருவிழாக்களின் போது பறை இசைக் கலைஞர்களோடு மிக நெருக்கமான மனிதனாய் நெருங்கியதும் பறை மீதுள்ள பற்றின் காரணமாகத்தான்.உலகம் முழுக்க ஆதி மனித இனங்களின் இசைக் கருவியாக இழுத்து தைக்கப்பட்ட மிருகங்களின் தோல்தான் இருந்து வருகிறது என்பதும்..ஆப்பிரிக்க பூர்வீக மக்களின் தொன்ம இசை வடிவமும் நம் பறை போன்ற ஒன்றுதான் என்பதும் என்னை வெகுவாக கவர்ந்தன.
அதனால்தான் தோழர் சுடர் அழைத்தவுடன் நான் மிகவும் உற்சாகத்தில் விஷ்ணுபுரம் சரவணனை அழைத்துக் கொண்டு பறை இசைப் பயிற்சி நடக்கும் மைதானத்தினை நோக்கி விரைந்தேன்.

.
நாங்கள் அங்கே சென்ற போது ஒரு பூசைக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டன. இரண்டு பறைகளும், சில மூங்கில் துண்டுகளும் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டு இருந்தன.ஒரு வயதான பறை ஆசிரியரும், அவரது மகனும் பூசைக்கான பணிகளில் இருந்தனர். அதில் அந்த வயதான பெரியவருக்கு இடது கை சற்று ஊனமாகவும், இரண்டு விரல்கள் இல்லாமல் இருந்ததும் கவனிக்கத் தக்கதாக இருந்தன.பூசைகள் முடிந்து பயிற்சி துவங்கும் போது பறை நாம் தமிழர் குடந்தை ஒருங்கிணைப்பாளர் தம்பி புகழ் மாறன் கரங்களில் இருந்தது. மற்றொரு பறை கற்றுக் கொடுக்கும் வயதான ஆசிரியர் கையில் இருந்தது.நான் கண்களில் ஆர்வம் தெறிக்க கவனித்துக் கொண்டிருந்தேன். முதலில் பறை அடிக்கும் குச்சிகளை எப்படி பிடித்துக்கொள்ள வேண்டும் என கற்றுக் கொடுக்கப்பட்டது.புகழ் மாறன் முயற்சி செய்துக் கொண்டிருந்தான். அவனுக்கு பறை அவ்வளவு இலகுவாக வரவில்லை. அடுத்தது பறை எனக்கு அளிக்கப்பட்டது.
.
இழுத்துக் கட்டப்பட்ட அந்த பழுப்பேறிய பறையினை மெதுவாக நான் தடவிப்பார்த்தேன். எனது புலன்களில் இனம் புரியாத நடுக்கம். எனக்குள் இருந்த என் இனத்தின் ஆதி மரபுணுக் கூறுவினை யாரோ தொட்டு எழுப்பியது போல ஒரு உணர்வு. மெலிதாய் தட்டிப்பார்த்தேன். பறை அதிர்ந்தது. அதன் அதிர்வில் என்னை சுற்றியுள்ள அனைத்தும் அசையாத் தன்மை உடையதாக மாறி விட்டதாக நான் உணர்ந்தேன்.

நானும் என் மூதாதையின் கரங்களை உடையவனாக மாறிப் போனேன். ஆசிரியர் சொல்லிக் கொடுப்பது என்னுள் இறங்க துவங்கியது. ஆசிரியர் அடிக்கத் துவங்கினார். நானும் அடிக்கத் துவங்கினேன். மிக எளிதாக பறை என் வசப்பட்டது.மேலும் மேலும் என்னுள் உக்கிரம் ஏறிக் கொண்டே இருந்தது.வானில் நிலா காய்ந்துக் கொண்டிருந்தது. என் முன் நிற்பவர்கள் மறைந்துப் போனார்கள். நான் அடித்துக் கொண்டிருந்தேன். ஒரு ஒழுங்கு வயப்பட்ட ஒலியை என் இனத்தின் வலியை நினைத்துக் கொண்டு வாசித்துக் கொண்டிருந்தேன். ஈழ நினைவும், வலியும் என்னை மேன் மேலும் உக்கிரப்படுத்தியது. உடலும் மெலிதாக ஆடத் துவங்கியது. அடித்துக் கொண்டே இருந்தேன். தாளக் கட்டுக்கள் மாற்றி வாசித்து காண்பிக்கப்பட்டும் என்னுள் உள்ள வலியும் ,உக்கிரமும் என் தொன்மத்தில் கிளர்ந்து என்னை மயக்க நிலைக்கு இட்டு சென்றது. என் முன்னால் என் மக்கள் பிணங்களாய் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். என் பறை மேலும் உக்கிரமடைந்தது. யாரும் எங்களுக்கு இல்லை..என்ற உணர்வும் தவிப்பும் என்னை தாங்க இயலா சோகத்திற்கு இட்டு சென்றன..என் பறையில் என் மூதாதை உக்கிரமாக வெளிப்படுவது போன்ற உணர்வு. கரங்கள் வலித்தன. கையில் வைத்திருந்த குச்சிகள் பிய்த்துக் கொண்டு போயின.நானும் ,அந்த வயதான பெரியவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அடித்துக் கொண்டிருந்தோம்.

கரங்களின் வலி அதிகரிக்கவே..அடிப்பதை நிறுத்தினேன். கரங்கள் வலிப்பதாக கூறியவுடன்.. தம்பி புகழ் நம் தேசிய தலைவரை நினைத்துக் கொள்ளுங்கள் என்றான். நான் மீண்டும் உக்கிரமாக அடிக்க துவங்கினேன்.

பறை மொழி மிகவும் வசீகரமானது மட்டுமல்ல..உள்ளுக்குள் ஊறும் அனைத்தையும் கிளறக் கூடியது. சமீப கால எனது வலி மிகுந்த துயர் மனநிலை பறையுடன் மிக எளிதாகப் பொருந்திப் போனது.ஒவ்வொரு அதிர்விலும் நூற்றாண்டுகளை கடந்து என் இனத்து மூதாதையின் அருகே இருந்து விட்டு வருவது போன்ற உணர்வு. வேறு எந்த இசை வடிவமும் என்னை இவ்வாறு அலைக் கழித்தது இல்லை.என் நிகழ்கால வலியை..எனது துயரத்தினை எனது ஆதி துவக்கத்தின் கரங்களில் வைத்துகொண்டு அழுவது போன்ற அனுபவத்தினை பறை எனக்களித்தது..அந்த இரவும்..அந்த வயதான ஆசிரியரும், அந்த ஒழுங்கமைவு இசையும் என் மனநிலையை பிறழச் செய்தன.சம காலத்தில் என் கண் முன்னரே என் இனம் அழிக்கப்பட்டதை எண்ணி எண்ணி எனக்குள் ஊறிக் கொண்டே இருக்கும் குற்ற உணர்வின் வெளிப்பாடாய் பறையின் மொழி வெளி வந்தது.

ஒரு ஒலிக்கும்..உணர்வுகளுக்கும் இடையில் நிகழும் ஒத்திசைவு பறையில் நிகழ்வது போல வேறு எதிலும் நிகழ்வது இல்லை.

பறை எனக்கானதும்..என் தொன்ம இனத்தின் இசைக்கானதும் ஆகும்.ஆண்டாண்டு காலமாக அதிர்ந்துக் கொண்டிருக்கும் பறையின் மொழி மனிதனின் துயரத்தினை,வலியை, கோபத்தினை ,உக்கிரத்தினை சொல்கிறது.
வாசித்து முடித்ததும் அந்த வயதான பெரியவர் என்னை இறுக அணைத்து முத்தமிட்டார். அதிர்ந்து அதிர்ந்து உணர்வேறிய அவரது விரல்களும் அப்போது நடுங்கின என்பதை நான் உணர்ந்தேன்.

. வானம் இருட்டிக் கொண்டு மழை பெய்ய துவங்கியது.

மிதக்கும் வலி…



இதழ்களின் இடுக்கில் புகையும் சுருட்டின்
உதிரும் சாம்பல்களுக்கு மத்தியில்….
தேடிப்பார்க்கலாம்…தப்பித் தவறி உதிர்ந்து விட்ட
உயிரோட்டம் உடைய காயம் ஒன்றை.
தனிமையில் கசியும் என் கோப்பை
முழுக்க குழந்தைகளின் உடலங்கள் மிதக்கின்றன..
வளைந்து நெளிந்து எழும் புகை வளையங்களின்
ஊடே…நன்கு கவனித்து பார்த்தால் நீங்கள் அறியலாம்.
ரசாயன எரித்தலில் கருகிப் போன
பிணம் ஒன்று தூக்கில் தொங்குவதை….
என் அறையின் உயரத்தில் தொங்கும் ஒற்றை
விளக்கின் உமிழலில் பரவித் தெறிக்கிறது
கருப்பை ரத்தச் சுழி ஒன்று….
நாசியை புணரும் ரத்த வாடை
என் விழிகளில் மாற்ற இயலா
வடுவாய் எஞ்சி நிற்கிறது..

தூரத்தில் யாரோ அழைக்கிறார்கள்
அறுந்து தொங்கும் ஒற்றை ரத்த விரல் நீட்டி..
தொப்புள் கொடி கழுத்தை சுற்றி பிறந்த பிணங்களின்
வாயில் எச்சில் கோழையாய் வழிகிறது இறையாண்மை..

.
ஓங்காரக் குரல் எடுத்து அழுகிறேன்.
எல்லாம் முடிந்த பின்னர்.
தனிமையாகத் தான் இருக்கிறேன்
என உறுதி செய்துக் கொண்டு.
.






மதிப்பிற்குரிய தமிழ்நதி அவர்களுக்கு..

(இக்கடிதம் ஆதவன் தீட்சண்யாவின் சமீப வினைகளுக்கு எதிராகவும், தமிழ்நதியின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாகவும் எழுதப்பட்டது.)


மதிப்பிற்குரிய தமிழ்நதி அவர்களுக்கு..





ஆதவன் தீட்சண்யாவை நாம் இந்த விஷயத்தில் பொருட்படுத்தவே தேவையில்லை. இழவு வீட்டில் யாரும் இல்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு நேற்றைய வன்மத்தோடு இன்று எச்சில் துப்பி விட்டு செல்லும் வக்கிரக்காரர்கள் இவர்கள்.சம காலத்து மனித அவலத்தின் ஊடாக இவர்களுக்கு வன்மம் கொள்ள முடிகிறதென்றால்.. இவர்களுக்குள் உள்ள படைப்பு மனம் குறித்த சந்தேகம் எழுகிறது.விடுதலைப் புலிகள் அமைப்பின் மேல் உள்ள வன்மம் சோபா சக்தி உள்ளிட்ட இவர்களைப் போன்ற ஆட்களுக்கு வன்னி மக்களின் துயரத்தின் மீது இப்போது கவிழ்ந்திருக்கிறது.என்னைப் போன்ற தாயகத் தமிழனுக்கு ஆறாத வடுவாய்,மாறாத குற்ற உணர்ச்சியாய் ஈழ மக்களின் துயரம் இதயத்தில் உறுத்திக் கொண்டே இருக்கிறது. தினம் தோறும் மனித வாழ்வில் நுகரப்படும் சாதாரண சலுகைகளும் , இன்ப உணர்வுகளும் கூட இச்சமயத்தில் நம்மை இயல்பிற்கு மீறிய குற்ற உணர்ச்சியில் வீழ்த்துகிறது. ஆனால் ஆதவன் தீட்சண்யாவும், சோபா சக்தியும் இந்த தருணத்தை கொண்டாடி மகிழ்ந்து..குறை சொல்லி ...வன்மம் பாராட்டுகிறார்கள் என்றால் நம் எதிரி சிங்கள பேரினவாதம் மட்டுமல்ல என்பதை நாம் உணர்கிறோம். வலி சுமப்பதை விட இந்த வக்கிரக்காரர்களின் வன்மத்தை சுமப்பது அவ்வளவு எளிதல்ல.. ஆனால் மீண்டெழுதல் என்பது சவால்கள் நிறைந்ததுதான். இணைந்தே எதிர்க் கொள்ளலாம்.
இந்த வக்கிரக்காரர்களின் பின்புல அரசியல் மிக கீழ்த்தரமானது. மக்கள் அவலத்தின் ஊடே இவர்கள் தேடுவது எவ்விதமான நியாயத் தீர்வுகளும் இல்லை. மாறாக இவர்களின் சொல்களின் ஊடாக கசியும் மனித இறைச்சி வாசனை கொடுங்கோலன் ராஜபக்சே மனநிலையை விட அபாயமானது. புலிகளின் வீழ்ச்சிக்கு பிறகுதான் இவர்களுக்கு வாயே முளைத்திருக்கிறது..முளைத்ததும் கள்ளிப் பாலாய் சொட்டுகிறது. இது போன்ற நபர்களை பொருட்படுத்தாமல் இருப்பதும் அபாயம்தான். இவர்களை தனிமைப்படுத்துவதும்..இவர்களின் பின்புல அரசியலை ஊரறியச் செய்வதும்தான் நம் பணியாக இருக்கிறது. ஒரு விடுதலை இயக்கத்தினை வாய் கூசாமல் விமர்சனம் என்கிற பெயரில் ஏசவும், தூற்றவும் துணிகிற இவர்களது சொல்லாடல்களின் பின்னால் உள்ள அரசியல் என்ன தெரியுமா..?
இவர்களின் ஒருவரான சுகன் ..சென்னையில் நடந்த சமீபத்திய கூட்டமொன்றில் சிங்கள தேசிய பாடலை பெருமையுடன் பாடுவதில் இருந்து இவர்கள் யார் ...? இந்த நரிகள் யாருக்காக ஓலமிடுகின்றன...? என்பது தெரியவில்லையா..?

தோழமையுடன்


மணி.செந்தில்


கும்பகோணம்

தலைக்குனிந்த சமூகத்தின் ஒரு குரலாய்….

ஈழ உறவுகளுக்கு…
தாயகத் தமிழகத்திலிருந்து...மிகுந்த குற்ற உணர்ச்சியின் ஊடே எழுதுகிறேன். அரசியல் பிழைப்பு வாதிகளின் சதிகளில் சிக்கிக் கொண்டு மீண்டு எழவே முடியாத ஆழ் இருட்டிற்குள் நாங்கள் சிக்கித் தவிக்கிறோம். எம் முன்னரே எம் இனம் அழிக்கப்பட்டது. யாரும் கேட்கவில்லை. முத்துக் குமாரர்களாய் செத்தும் பார்த்தோம்..சீண்ட நாதியில்லை..தேர்தல் கூத்தில் சிக்கி சின்னாபின்னமாய் சிதைக்கப்பட்டோம் இறுதியில். காசுக்கும்,பதவிக்கும் காட்டிக் கொடுக்கப்பட்டு காவு வாங்கப்பட்டோம் நாங்கள்..உங்களின் துயரம் எங்களின் மாறாத வடுவாய்..தோல்வியாய் வரலாற்றின் முன்னால் எங்களை தலை குனிந்து நிற்க வைத்திருக்கிறது. உங்களின் முகத்தை பார்க்க கூட எங்களுக்கு திராணியில்லை. உங்களின் துயரத்தை கேட்டு பொங்கி அழ கூட எங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை.
இங்கே சினிமா ரசனையும்..மாத சம்பளம் வாங்கும் வர்க்கமும்…போதையில் முழ்கிக் கிடக்கும் கூட்டமும் அரசியலை தீர்மானிக்கின்றன..இங்கே யாருக்கும் தொன்மம் குறித்த புரிதலோ..தமிழ்ச் சமூகம் குறித்த அறிதலோ இல்லை.
மிக எளிதாக நாங்கள் விலைபோனோம் உறவுகளே… எங்களை நாங்களே காட்டிக் கொடுக்க சில ரூபாய் தாள்கள் போதுமானதாக இருந்தது. எங்களின் தொன்ம பெருமை மிகு அடையாளமாய் இருந்த உங்களை கொன்று குவிக்க காரணமாய் இருந்தவர்கள் மேடை ஏறும் போது..நாங்கள் தலைவர்கள் தொண்டை கிழியும் அளவிற்கு வாழ்க கோஷம் போட்டுக் கொண்டு இருந்தோம். தமிழ் மரபுகளை மீட்டெடுத்து..இந்த தலைமுறையின் கண்களுக்கு முன்னாலேயே நாடு கட்டி ஆண்டு பார்த்த எங்கள் உறவுகளான உங்களை அழிக்க மூலமாய் இருந்தவர்களின் கரங்களில் நாங்கள் மலர்க் கொத்து கொடுத்து கொண்டிருந்தோம்.
நீங்கள் தொப்புள் கொடி நம்மை துவளாமல் காக்கும் என நம்பிக்கையோடு இருந்தீர்கள் உறவுகளே….இறுதி வரைக்கும் காத்திருந்தீர்கள்.ஆனால் நாங்கள் ..கேவலம். ஒரு சாராயப் பாக்கெட்டிற்காகவும், பிரியாணி பொட்டலத்திற்காகவும், இருநூறு ரூபாய் காசுக்காகவும் உங்களை கைக் கழுவி விட்டோம் உறவுகளே…
நீங்கள் பசியால் கதறிய போது..கூக்குரல் கேட்க கூடாது என மருத்துவமனையின் ஏசி அறைக்குள் ஒளிந்துக் கொண்டோம்..
சாவுக் குழிகளுக்குள் நின்றுக் கொண்டு யாராவது காப்பாற்ற வாருங்களேன் நீங்கள் என கதறிய போது ..நாங்கள் கடற்கரை காற்று வாங்க … மதிய உணவு நேரம் வரைக்கும் சாகும் வரை உண்ணாவிரதம் நடத்தினோம்.
மழை மழையாய் பொழிந்த குண்டுகளினால் காயம் பட்டு…வலி பொறுக்க முடியாமல் நீங்கள் சயனைடு குப்பிகளை மென்ற போது..நாங்கள் தேர்தல் வெளிச்சத்தில் எங்களை மறந்துக் கொண்டிருந்தோம்.
எல்லாம் முடிந்தது. வதை முகாம்களில் சிக்குண்டு கிடக்கிற உங்களை நாங்கள் சிந்தித்து பார்க்கவே கூடாது என்பதற்காக..விதவிதமான திரைக்கதைகள்..விதவிதமான நாடகங்கள்..
ஈழ உறவுகளை காப்பாற்றாமல் ..இந்த ஆட்சி இருந்தால் என்ன..போனால் என்ன என்று உருக்கமாய் அய்யகோ கூப்பாடு போட்டோம். .
இங்கு அனைத்திற்குமே ஒரு விலை இருக்கிறது..
எனவே தான் எங்களது ஊழலுக்கும் ,பதவிக்குமான விலையாய் உங்களை நிர்ணயித்தோம்.
ஆனால் டெல்லிக்காரன் புத்திசாலி. இந்த முறை அவன் வாங்கியது உங்களை அல்ல உறவுகளே..
எங்களை.
எங்களை நாங்களே ஒரு விலை போட்டு விற்றுக் கொண்ட கூத்திற்கு இங்கே வித்தியாசமான ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள் – அது பெயர் தேர்தல்.
இனி தாயகத் தமிழகத்தில் இப்போது வாழும் இந்த தலைமுறை தன் வாழ்நாள் முழுக்க துயர் மிகு வலியை சுமந்தே வாழும். இதற்கு அப்பாலும் உங்களை நாங்கள் எங்கள் உயிரினும் மேலாய் நேசித்தோம் உறவுகளே..அதை நாங்கள் முத்துக்குமாராய் நிரூபித்தும் காட்டினோம்.,தெரு தெருவாய் அலைந்து மக்களை திரட்டி..ஆர்பார்ட்டம், பேரணி, உண்ணாவிரதம், மறியல், மனித சங்கிலி என அனைத்தும் செய்தோம்.ஆனால் இந்திய அரசு எங்களை சிறிது கூட மதிக்க வில்லை. எப்படி எங்களை மத்திய அரசு மதிக்கும்..? பதவிக்காகவும், ஊழல் பிழைப்பிற்காகவும் எங்கள் தலைவர்கள் தான் டெல்லியின் காலை தொழுதுக் கொண்டிருக்கிறார்களே....எப்படி மதிக்கும்...?...எல்லாம் முடிந்த பின்னர்...என்ன செய்வது என்று தெரியாமல் வலி மிகுந்த மெளனத்தோடு தலைக் குனிந்து நடக்கிறோம்... பிறர் அறியாமல் தனிமையில் அழுகிறோம்.. தலைவரால் நீங்கள் உருவாக்கப்பட்டீர்கள்.. நாங்கள் தலைவர்களால் அழிந்துப் போனோம். இது தான் உண்மை.தமிழர்களுக்கான தேசத்தை நீங்கள் அவசியம் கட்டமைப்பீர்கள். உறவுளே... அதில் எனக்கெல்லாம் எள்ளவும் சந்தேகமில்லை..ஆனால் அந்த வெற்றியில் நாயினும் இழி பிறவிகளான எங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. நீங்கள் எழுவதும் …வாழ்வதும் சாத்தியம் தான் …ஆனால் நாங்கள்.?
துரோகங்களை வெல்லுங்கள்…
யாருக்கும்..எதற்கும் விலை போகாதீர்கள்…
நல்லத் தலைவனின் வழி தொடருங்கள்..
இல்லையேல் நாளை நம்முடையதல்ல..
அதற்கு சாட்சியாக… தோற்ற சமூகமாக..உங்கள் தாயக தமிழ் உறவுகள்
நாங்கள் இருக்கிறோம்..
எங்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்..
எப்படி வாழக் கூடாது என்பதற்கு.
தலைக்குனிந்த சமூகத்தின் ஒரு குரலாய்….
மணி.செந்தில்