பாலச்சந்திரன். என் மகனும்..அவனும் வேறல்ல –மணி செந்தில்





        பாலச்சந்திரனின் களங்கமற்ற விழிகள் வேட்டை நாய் போல இரவெல்லாம் துரத்துகின்றன.. வன்மம் கொண்ட விலங்கொன்றின் பற்கள் போல ஆழ்மனதில் குற்ற உணர்வு பதிந்திருக்கிறது. அலைகழிப்பின் ஊடே  கசியும் உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழிக்கும் போது என் மகன் பகலவன் பாலச்சந்திரன் போல கண் மூடி கிடக்கிறான். அழுகையும், ஆத்திரமும், கையாலாகத்தனமும் நேற்றைய இரவை பசித்த வேட்டை நாயிடம்  சிக்குண்ட சிறு முயலாக மாற்றின. துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த பாலச்சந்திரனின் மார்பில் கனிந்திருக்கும்  கருப்பேறிய அந்த துளைகளில் இருந்து  வெளியாகி, உலகம் முழுக்க பரவிக் கொண்டிருக்கும் தணியாவெப்பம் இனி நடு நிசிகளில் விழிகளை மூட விடாத மூர்க்க புழுக்கமாய் பற்றி எரியும். உறக்கமும், விழிப்புமாக அலைகழித்த என் கனவின் நினைவில்.. பாலச்சந்திரன் மார்பின் மீது எதிரியின் குண்டுகள் பாய்ந்தன. அந்த ஒலியில்,வலியில்  என்னருகே படுத்திருந்த என் மகன் பகலவன் ஓங்காரமாய் அழத் துவங்கினான். திடுக்கிட்டு விழித்த என் கழுத்தின் ஓரத்தின் வன்ம விலங்கொன்றின் பற்களின் தடம் ரத்தமாய் கசிந்து கொண்டிருந்தது.  என் அருகே படுத்திருக்கும் என் மகனும், தாய்நிலத்தில் வீழ்ந்திருக்கும் பாலச்சந்திரனும் வெவ்வேறானவர்கள் அல்ல என என் ஆதி அறிவு உணர்கிறது. மகனை இழந்த வலியில் தளர்ந்த தந்தையாய் கணிணி திரை முன் அமர்கிறேன்.

  எனக்கு முன்னால் ஒளி விடும் அந்த கணிணி திரையில் பாலச்சந்திரன் அசையாமல் அமர்ந்திருக்கிறான். சற்றே சரிந்து அமர்ந்திருக்கும் அவனது முறை அவனது தந்தையை நினைவுப் படுத்துகிறது.  அவனது விழிகளில் இருந்து அந்த நொடியில்..அவன் விழிகளின் எதிரே நிகழ்ந்த, நிகழ்ந்துக் கொண்டிருக்கும் சம்பவங்களை நான் அப்படியே வாசிக்க முயன்று தோற்கிறேன். சலனமற்ற விழிகளை அவன் அவனின் தந்தையிடமிருந்து பெற்றுள்ளான். புகைப்படங்களில் பார்க்கும் போது கூட துளியளவும் வஞ்சகம் பேசாத நேர்மையாளனின் கண்கள் அவை . களங்கமற்ற அந்த விழிகள் உண்டு,படுத்து,முயங்கி,வாழும் சராசரி மானுட இனத்திற்கு உரித்தானவை அல்ல. மாறாக  மானுட பாவத்தை செரித்து தன் உடலின் குருதியாய் கசிய விட்ட தேவனுக்கு உரித்தானவை.  

         வரலாற்றில் எப்போதாவது தோன்றும்  ஒரு மகத்தான மன்னனுக்கு மகனாக பிறந்ததை தவிர வேறு எந்த குற்றமும் செய்யவில்லை அவன். ஒரு தேசிய இனத்தின் மரபியல் அடையாளமாக அந்த குடும்பம் வாழ்ந்திருக்கிறது என்பதற்கு பாலச்சந்திரன் சாட்சியாக இருக்கிறான் . வரலாற்றின் நதி முடிவிலியாக கால ,தேச,தூரங்களின் கரைகளை தழுவி ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் அது தன் பயணத்தில் இப்படிப்பட்ட ஒரு இளவரசனை சந்தித்ததே இல்லை.  வீழ்த்தப்பட்ட நிலமொன்றின் மன்னனாக இருக்கும் அவனது தந்தை ஒரு நொடி நினைத்திருந்தால்.. தன் மகன்களை,தன் மகளை,தன் மனைவியை பாதுகாப்பான தேசமொன்றில்  அரண்மனை ,பணியாளர்களோடு ஆடம்பரமாக வாழ வைத்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படியல்ல. உயிருடன் உருக்கும் போதே உதட்டிற்கு அருகேயே மரணத்தை தொங்கப் போட்டு திரிந்த மனிதர் அவர். மரணத்தையும், வாழ்வினையும் செய்கின்ற செயல்களை வைத்து எடை போடும் உளவியல் அவருக்கானது.  அவர் மரபு சிதையாத ஆதித் தமிழனின் நேரடி பிள்ளை. தமிழ் தொல்குடியின் ஆதித் தொழிலான விவசாயத்தினை போலவே விடுதலையையும் விதைத்து அறுத்து விடலாம் எண்ணினார் அவர். அலை அலையாய் விதைகளை நிலமெங்கும் வீசித் திரிந்த அவரது கரங்கள் ஒரு போதும் சோர்ந்ததே இல்லை. தாய்ப் பெரு நிலத்தில் முளை விட்ட விடுதலை பசுமையை மூர்க்கமாய் பேரினவாத வல்லூறுகள் தாக்க பறந்து வருகையில் தாய்ப் பறவையாய் தன் இறகை விரித்து காத்து நின்றார் அவர். விதைகள் தீர்ந்த நாள் ஒன்றில் இறுதியாய் அவர் தேர்ந்தெடுத்து தூவியது தன் மகனை..

விதையாய் விழுந்து கிடந்த மகனின் சற்று திறந்திருந்த விழிகளில் ..சிறுவயதில் அவனை தூக்கி கொண்டாடிய தளபதிகள்,வீரர்கள் ஆகியோர் மங்கலான தோற்றத்தில் தெரிந்திருக்கவும் கூடும்.

ஒரு இளவரசனாக பிறந்த அவன் எப்போதும் இளவரசனாக வாழ்ந்ததில்லை.மண்ணின் விடுதலை ஒன்றே மகத்தான இலக்காக நினைத்து இயங்கும் அவனது தந்தை மிகவும் கறாரானவர்.  வயதான தன் தாய் தந்தையரை பொதுமக்களோடு மக்களாய் அனுப்பி வைத்தவர் . தனது மூத்த மகனை போர்க்களத்தில் நிற்க வைத்து சகப் போராளிகளோடு சாவினை தழுவச் சொன்னவர். தன் மகளை சீருடை அணிய வைத்து படையணியில் முன்னணியில் நிறுத்தியவர். நம் நிலம் போல மூத்த மகனுக்கு மத்தியில் பதவி,இளைய மகனுக்கு மாநிலத்தில் பதவி ,மகளுக்கு பாராளுமன்றத்தில் பதவி என்றெல்லாம் நினைத்துப் பார்க்க அவர்களில் யாருமே இல்லை. கொல்லப்பட்ட பாலச்சந்திரனின் மரணத்தை விட நமக்கு அதிர்ச்சியூட்டுவது தன் குடும்பம்,தன் மகன்,மகள் குறித்து அவனின் தந்தை கொண்டிருந்த மதிப்பீடுகளே. கண் மூடுவதற்கு முன் தன் மகனுக்கு அரசியல் அரியணையில் முடி சூட்டி விட வேண்டும் என்கிற கணக்குகளும்,பிணக்குகளும் மலிந்திருக்கின்ற மண்ணில் இருக்கின்ற நம்மால்  விடுதலை வேட்கையின் பால் எழுந்து விட்ட ஆழமான பற்றுறுதியை புரிந்துக் கொள்ள முடியவில்லை. 

பாலச்சந்திரனின் மரணத்தை வீரமரணம் என்றெல்லாம் வார்த்தை மெழுகு பூசி செழுமைப்படுத்திக் கொள்ள என்னால் முடியவில்லை. அந்த பாலகனின் கொலை இந்த உலகத்திற்கு ஒரு செய்தியை உரத்து அறிவிக்கிறது. அரசியலுக்கு எல்லாம் அப்பாற்பட்டு ஒரு சிறுவனை கொலை  செய்யும் உளவியல் உலவும் உலகில்தான் நாம் வாழ்கிறோம் என்கிற செய்தி. பார்த்த உடனேயே அள்ளிக் கொள்ள தோணும் அச்சிறுவனின் மென்மையான உடலை துளைக்க பேரினவாத பயங்கரவாதத்திற்கு மட்டுமே வலு இருக்க இயலும்.  விடுதலை கோரி குருதி தோய்க்கும் அந்த ஈரப் பெரு நிலத்திற்கு மட்டுமே பாலச்சந்திரன்களை உருவாக்க,சுமக்க,விதைக்க,முளைக்க வைக்க இயலும்.
இதையெல்லாம் காண உலகிற்கு எத்தனை மனவலிமை உண்டோ, அதே  சதவீதத்தில் ஒரு தேசிய இனமே ஆழ்மன வன்மத்தோடு அமைதியாய் காத்திருக்கிறது. எந்த எதிரி என் பிள்ளையை கொன்றானோ, அந்த எதிரியை எம் கண் முன்னால் சிவப்பு கம்பளம் விரித்து அழைத்து உபசரிக்கும் இந்தியாவின் இரண்டக எள்ளலையும் பார்த்துக் கொண்டு காத்திருக்கிறது. என்னடா முடியும் உங்களால் என எதிரி உதிர்க்கும் எகத்தாள அறைக்கூவலை கனவிலும் செவியெடுத்துக் கொண்டு கவனமாக காத்திருக்கிறது. கண்களில் வெடிக்கும் அழுகையை கழுத்திலேயே தேக்கி ..கண் சிவந்து காத்திருக்கிறது...காத்திருக்கிறது...கணக்குத் தீர்க்கும் கவனத்தோடு. மெளனமாக..

கனன்று எரியும் கண்களில்
நிழலாய் நிற்கிறாய்..
வடித்தெடுத்த  வார்த்தைகளில்
எதிரிகளின் மீது
உமிழும் வன்மமாய் மிஞ்சுகிறாய்..
பால்யம் சுமக்கும் உன் விழிகளை
ஒத்த குழந்தைகள் மீண்டும்
இம் மண்ணில் பிறக்க கூடும்..
அவற்றில் ஏதேனும் ஒன்று
ஏக்கமாய் என்னை பார்க்கும்
தருணத்தில் உன்னை
என்னுள் தருவித்து கொள்வேனடா..
என் மகனே...பாலச்சந்திரா..

-மணி செந்தில் 

ஈழ விடுதலை உணர்வை வீழ்த்த துடிக்கிற விகடனின் வில்லங்கம்.. -- மணிசெந்தில்




            இன்னும் சில நாட்களில் மாவீரர் தினம் உலகத் தமிழர்களால் அனுசரிக்க இருக்கின்ற நிலையில்  இந்த வார ஆனந்தவிகடனில் வெளிவந்திருக்கும் ’பெண் போராளி ’யின் பேட்டி கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது . ஒட்டு மொத்த போராளிகளின் உணர்வினையும் பிரதிபலிப்பதாக படிப்பவர் கருதும் வகையில் மிக திறமையாக உருவாக்கப்பட்டுள்ள அந்த பேட்டியை நாம் வெறுமனே கடந்து விட முடியாது.   
               இறுதிக்கட்ட முள்ளிவாய்க்கால் போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட பின்  தமிழ்த் தேசிய இனம் தன்னகத்தே அடைந்திருக்கின்ற  மாற்றங்கள் மகத்தானவை . ஈழம் என்கிற நாடு தமிழ்த் தேசிய இனத்தின் தணியாத தாகமாய் இன்று உருவெடுத்து நிற்கின்றது.  12 கோடிக்கும் குறைவில்லாத இனமாக தமிழ்த் தேசிய இனம் தழைத்து நின்றாலும் தன் பிள்ளைகளை காப்பாற்ற முடியாமல் போனதற்கான  காரணங்களையும், அதனை சார்ந்த  உலக ஒழுங்கினையும் ஆய்விற்கு உட்படுத்தி, எதிர்காலம் ஒன்றை புதிதாக சமைக்க தமிழ்த் தேசிய இனம் தன்னையே தயார் படுத்தி வரும் நிலையில் ..விகடனின் இந்த பதிவினை நாம் சாதாரணமான ஒன்றாக கருதிவிட இயலாது

                தீரமும், தியாகமும் நிறைந்த ஒரு விடுதலைப் போராட்டம் என்பது தோல்வி, வெற்றி நிலைகளுக்கு அப்பாற்பட்டது . உலகத்தில் வாழும் பல்வேறு தேசிய இனங்கள் கடுமையான பல இன்னல்களையும், இழப்புகளையும் தாண்டி தான் விடுதலை காற்றை சுவாசிக்கின்றன . முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்பது ஒரு சாதாரண சொற்றொடர் அல்ல. நம் கண்ணில் வழிகின்ற கண்ணீரை துடைத்து விட்டு..இன்னும் மூர்க்கமாக..இன்னும் திறமையாக.. மீண்டெழுதலுக்கான உந்துதல்.  அத்தகைய உந்துதலைத்தான் ஒரு பெண் போராளியின் பேட்டியாக விகடன் வெளியிட்டு இருக்கும் பதிவு மிகத் திறமையாக சிதைக்கிறது .  ’எல்லாம் முடிந்து விட்டதுஎன்பதான குரல் தொடர்ந்து இயங்குவதற்கான  மனநிலையை வீழ்த்துகின்ற அரசியலாகவே நம்மால் உணர முடிகிறது.

 தலைவர் இல்லை என்கிற குரலை சற்று உயர்த்தியே முழங்கும் அந்த பதிவு குறிவைத்து மாவீரர் மாதத்தில் ஏவப்பட்டதன் நோக்கம் ஆராயத் தக்கது. எம் தேசிய தலைவர் பிரபாகரன் இல்லை  என்பதை உலகத் தமிழினம் ஒத்துக் கொள்ள வேண்டும் என்கிற அழுத்தமும் அந்த பதிவில் தொனிக்கிறதுதேசியத் தலைவர் பிரபாகரன் உலகத் தமிழினத்தின் முகமாக ,முகவரியாக, அறவியல் அடையாளமாக திகழ்கிறார்அவரது உன்னத தலைமையும், அர்ப்பணிப்பும், தியாகமும் உலகத் தமிழர் வாழும் நிலங்களில் ..குறிப்பாக தமிழ்நாட்டின் அரசியல் சூழல்களில் மிகப் பெரிய தாக்கத்தினை இன்று ஏற்படுத்தி இருக்கின்றன. நேர்மையும், தியாகமும் உடைய சமரசமற்ற தலைமை குறித்தான இக்கால தமிழின இளைஞர்களின் கனவாக தேசியத் தலைவர் திகழ்கிறார். அவரது நிலைப்பாடுகளை இன்று பெருகி வரும் நூல் வாசிப்பு மூலம், இணையத்தின் மூலம் அறிந்துக் கொள்ளும் இளையத் தலைமுறையினர் சுயநல ,சமரச, வியாபார அரசியல் தலைவர்கள் மீது  கடுமையாக ஆவேசம் கொள்கின்றனர். ஒரு தலைமை மாசற்ற வடிவமாக, புனிதத்துவமாக திகழ வேண்டும் என்கிற எளிய இளைஞனின் அக விருப்பம் ..எம் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் ஒப்பற்ற தியாகம்,வீரத்தினால் விளைந்தது  ஆகும் . எனவே தான் அவர் இருக்கிறார் என்கிற நினைவோடு தாயக கனவை நோக்கி உலகத் தமிழர் இன்று பயணப்படுகின்றனர் .

 வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்குமாவீரர் தினம்குறித்த அளவீடுகள் புனிதத் தன்மை வாய்ந்ததாக மேம்பட்டு  நிற்பதன் காரணமும் இது தான்.இன்று  உலகம் முழுவதும் தமிழர் வாழ்கின்ற நிலங்களில் மாவீரர் தினம் அனுசரிக்காத பகுதி இல்லை என்கிற நிலை ஏற்பட்டு இருக்கிறது. சாதி மறுப்பு,பெண்விடுதலைபொருளாதார சமநிலை வாழ்வு, விடுதலை உணர்வு ஆகியவற்றின் குறியீடாக தேசியத் தலைவர் திகழ்கிறார்அதனால் சிங்கள பேரினவாதம் உடல் ஒன்றினை காட்டிய போதும், அவ்வப்போது தமிழரின் உளவியலை சிதைக்கின்ற செய்திகளை கசிய விடுகின்ற போதும்.. மீறி வரும் கண்ணீரையும் கண்ணுக்குள்ளேயே தேக்கி, அடங்காத ஆவேசம் விளைவிக்கும் கனத்த மெளனத்தோடு, காயங்கள் தந்த வன்மத்தோடு தமிழர்கள் இறுகிக் கிடக்கிறார்கள்தங்களை இயக்கும் சக்தியாக  தலைவரின் இருப்பு குறித்த நம்பிக்கைகளை தங்களுக்குள் விதைத்து கொண்டு முன்னேறுகிறார்கள்இவையெல்லாம் விகடன் அறியாததா என்ன..?

                  ஒரு பெண் போராளி பாலியல் தொழிலாளியாக மாற்றப்பட்டதன் சூழல் நமக்கு இன்னும் போராடுவதற்காக ஆவேசத்தினை ஏற்படுத்த வேண்டும். மாறாக அந்த பதிவுஎல்லாம் முடிந்து விட்டதுஎன உரத்த குரலில் அறிவிப்பது..இப்போது இருக்கின்ற கேடான சூழலில் இருந்து மீண்டு வருவதற்கான கதவுகளை அடைப்பதற்கு சமம். தமிழ்நாட்டில் இருக்கின்ற,புலம் பெயர்ந்து இருக்கின்ற தமிழர்கள் ஈழம் அழிவில் அரசியல் செய்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு ..இதற்காக போராடி வருகின்ற அமைப்புகளை பின்னடைவிற்கு உள்ளாக்கும் செயலாக தெரிகிறதுஈழம், தலைவர் பிரபாகரன் போன்ற சொற்கள் பயன்படுத்தக் கூட தடையாகவும் ,அச்சமாகவும் இருந்த இந்தியா உள்ளீட்ட உலகச்சூழல் இன்று மாறி இருக்கிறது. ஈழத்தின் அழிவும், நடந்த இனப்படுகொலைகளுமே சென்ற தமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தலில் அதிகம் வாக்களித்த இளைய தமிழ்ச் சமூகம் கொண்டிருந்த காரணங்களாக விளங்கின. முகமூடியும்,புனைவும் அணிந்த அரசியல் தலைமைகள் இளைய தமிழ்ச் சமூகத்தின் ஆவேசத்தினால் நிர்மூலமாக்கப்பட்டு முடிந்திருக்கிறார்கள். எனவே ஈழத் தமிழர்களின் அழிவு என்பது பலவித காரணிகளை கொண்டு விரிவாக்கப்பட்ட ஆழ்நிலை காரணமாக, பல்வேறு அரசியல் செயல்களுக்கு மூலமாக இருக்கின்றதுஈழத்தின் அழிவு ஓட்டு மொத்த தமிழ்த் தேசிய இனத்தின் இழப்பு என்பதாலேயே அரச, நில எல்லைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு மாவீரன் முத்துக்குமார் உள்ளீட்ட பல தமிழர்கள் தங்கள் உயிரை ஈகம் செய்தார்கள். தமிழ்நாட்டில் பிறந்த முத்துக்குமார் ஈழ நாட்டின் விடுதலையை தனது தாயக விடுதலையாக கருதினார் . அங்கு விளைந்த இழப்புகளை தன் இழப்புகளாக உணர்ந்த காரணத்தினால் தான்   உயிர் ஈகம் செய்யும் அளவிற்கு வலியை பெற்றார்ஒரு முத்துக்குமார் இறந்தார். ஆனால் இன்னும் பல முத்துக்குமார்கள் உயிருடன் உலவி, தன் இனத்திற்காக களமாடி நிற்பதற்கான நம்பிக்கைகளை விதைத்தது அந்த பிரபாகரன் என்கிற ஒற்றை சொல்.

தலைவர் இல்லை. நீ படுத்து தூங்கு. நாங்கள் அடிமைகளாக வாழ்கிறோம் என்று சொல்ல ஈழத்தமிழர் மட்டுமல்ல யாருக்குமே உரிமை இல்லை. ஈழமும் ,தமிழகமும் ஒரு தேசிய இனத்தின் இரு தாய்நிலங்கள் என்பதாலேயே முத்துக்குமார் ,அப்துல் ரவூப் போன்ற இளைஞர்கள் தன் உயிர் தந்தனர். அதை தலைவர் பிரபாகரன் அவர்களும் நன்கு உணர்ந்திருந்த காரணத்தினால் தான் தமிழ்நாட்டில் உயிர் ஈகம் செய்த முத்துக்குமாருக்குமாவீரர்தகுதி அளித்து விடுதலை புலிகள் அன்று வீர வணக்கம் செலுத்தினர் .

 நம் கண் முன்னால் நம் இனம் அழிந்த  நிகழ்வு ஆறாத குற்ற உணர்ச்சியாய் இன்று தமிழர் மனதில் மாறி நிற்பதன் விளைவே இன்று கூடங்குளம் அணு உலை பிரச்சனையாக இருக்கட்டும், மூன்று தமிழரை மரண தண்டனையில் இருந்து காக்கும் போராட்டமாக இருக்கட்டும், காவிரி,முல்லை பெரியாறு என நதி நீர் சிக்கலாக இருக்கட்டும்  ..திரண்டு வருகின்ற இளைஞர் கூட்டம் அமைப்புகள் ,கட்சிகள் சாராத்து என்பது குறிப்பிடத்தக்கது .  இங்கு ஈழமே ஆதியாக இருக்கிறது அனைத்திற்கும்.

குளிர் நிறைந்த காலமென்றாலும் ,கொட்டும் பனியிலும் குழந்தை குட்டிகளுடன் நின்று சிங்கள இன அதிபர் ராசபக்சே விற்கு எதிராக ஆவேசமாக எதிர்ப்பினை காட்டிய புலம் பெயர் உறவுகளின் உணர்வினைஎல்லாம் முடிந்து விட்டதுஎன அறிவித்து உத்திரத்தில்  போட்டு விடலாமா ?

உலகத் தமிழர்களின் ஓயாத உழைப்பினால் போர் குற்றங்கள், இனப்படுகொலைக்கு எதிரான விசாரணை  என சிங்கள நாட்டிற்கு எதிராக வருகிற ஜனவரி மாதத்தில் வர இருக்கின்றதே.. அதையும்எல்லாம் முடிந்து விட்டதுஎன அறிவித்து அழித்து விடுவோமா..?

ஒரு பெண் போராளி பாலியல் தொழிலாளியாக மாறிய அவலத்திற்கு சிங்கள பேரினவாதம் காரணமே ஒழிய..இழிநிலை துடைக்க ,விடுதலை கனவோடு போராடியவர்களும், போராடுபவர்களும் காரணம் இல்லை. என் சகோதரி ஒரு பாலியல் தொழிலாளியாக எதிரியால் மாற்றப்பட்டிருப்பதன் சூழல்எல்லாம் முடிந்து விட்டதுஎன நான் முடங்கிப் போவதால் மாறி விடுமா..?.

         சுகமாக,பாதுகாப்பாக இருந்துக் கொண்டு ஈழத்தை பற்றி பேசுகிறார்கள் என்றால்.. நீரில் முழ்குபவர்களை கரையில் நிற்பவர்கள் தான் காப்பாற்ற இயலுமே ஒழிய ..குறைந்த பட்சம் காப்பாற்ற கோரி கத்த முடியமே ஒழிய.. கரையில் நிற்கிறாய்..உனக்கென்ன தெரியும் முழ்குதலின் வலி..? ..கத்தாமல் அமைதியாக நில் என சொல்வதுதான் சரியானதா…?

தலைவர் இல்லை என்பதை ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள் என்றால்.. அவரை  நடமாடும் உடலாக பார்த்தவர்களுக்கு தான் இருப்பு,இறப்பு சிக்கல். அவரை அறவியல் அடையாளமாக , தமிழின மரபின் வடிவமாக, தானே தோன்றிய தத்துவமாக,உளவியல் வலிமையாக காண்கிற இளையத் தமிழ் பிள்ளைகளுக்கு  ’அவர் இருக்கின்றார்’ .
 
             இறுதி கட்டப் போரின் போது விகடன் ஆற்றிய ஊடகச் சேவை மகத்தானது.ஆனால் சமீப காலமாக  விகடன் குரலின் தொனி பிசகி இருப்பதை நுட்பமான வாசகர்கள் கவனித்து தான் வருகிறார்கள் . தமிழினம் புத்தெழுச்சி அடைந்து..தம் இனத்திற்காக  ஒன்று பட்டு போராடி  சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக ,இழைக்கப்பட்ட ,இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்கு எதிராக ,இனப்படுகொலைக்கு எதிராக..நம்பிக்கை ஒளியை பாய்ச்ச வேண்டிய விகடன் அவநம்பிக்கை குழியில் தள்ளியிருப்பது அதன் ஊடக நேர்மைக்கு நேர்ந்த சறுக்கல்.

              பேட்டி வழங்கி இருப்பதாக சொல்லப்படுகின்ற எம் சகோதரி பாலியல் தொழிலாளியாக மாறிய சூழல் தனி நபருக்கு விளைந்தது அல்ல. அது எம் இனம் அடைந்த இழிவு. இந்த இழிவும் ,அழிவும் ஏற்பட்டு விடக் கூடாது என்கிற காரணத்தில் தான்  தேசியத் தலைவர் பிரபாகரன் போராடினார் . மறுக்கப்பட்ட தாயக விடுதலைக்காகவும், இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கும்  எதிராகத்தான்   இன்றளவும் தமிழக வீதிகளிலும், உலக வீதிகளிலும்..எண்ணற்ற இளைஞர் கூட்டம் ..தன் வாழ்க்கை, தன் சுகம் மறுத்து வீதிகளில்   போராடுகிறார்கள்.

              அவநம்பிக்கை ஒளி அளித்து இனத்தை ,இனத்தின் விடுதலையை முடிக்க சிங்கள பேரினவாதம் முனைந்திருக்கிறது . எத்தனையோ காட்சிகள் தொடர்ந்து அரங்கேறுகின்றன..உளவியல் உறுதி ஏற்பட்டு விட  கூடாது சாகசங்கள் புரியப்படுகின்றனஇந்த உளவியல் தாக்குதலையும் தமிழ்த்தேசிய இனம் வெல்லும்

             இனப்படுகொலைக்கு எதிராக,மறுக்கப்பட்ட தாயக விடுதலைக்காக போராடியவர்கள்போராடுபவர்கள் போரின் மீது விருப்பம் கொண்டவர்கள் அல்லர். மாறாக இது சிங்கள பேரினவாதம் திணித்த போர்போர் கொடுமையானது தான். அதை விட கொடுமையானது அடிமைகளாக வாழ்வதுஎல்லாவற்றையும் விட கொடுமையானதுஎல்லாம் முடிந்து விட்டதுஎன்றெண்ணி அனைத்தையும் சகித்து கொண்டு வாழ்வது. மெளனமாய் நிற்பது. அவநம்பிக்கையோடு அடங்குவது.. இதுதான் விகடன் விளைவிக்க விரும்புகிறதா..?

                 மேலும் ஒரு பெண் போராளியின் துயரம் மிகுந்த பதிவாக முடியும் அந்த பேட்டியில் .. அந்த துன்பத்திற்கான தீர்வாக காட்டப்படுவது எதுவுமில்லை என்பது மட்டுமல்ல..ஈழத் துயரத்தின் காரணமாக விளையும் அரசியலையும் தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் கை விட்டு விட வேண்டும்  என்பதுதான். ஈழத்தின் துயரமும், இனப்படுகொலைகளும் இன்று ஒரு குறிப்பிட்ட நிலத்தின் அரசியலாக இருந்த நிலை மாறி , உலகத்தின் கண்களை திறந்திருக்கின்றன. ஈழத்தின் துயரம் தோய்ந்த முடிவு பக்கத்து நிலமான  தமிழ்நாட்டில் கூட அரசியலாக மாறாமல் போனால் அதை விட பின்னடைவு என்னவாக இருக்க இயலும்..? .மனித உரிமை,இனப்படுகொலை போன்ற பொதுவான அம்சங்கள் உலகச்  சமூகம் அனைத்திற்கும் தொடர்புடையது தானே..
  
                       முடிவாக விகடன் இந்த பெண் போராளியின் பதிவு மூலம் நிறுவ விரும்புவது ஈழத்தின் அவலம் மட்டும் தான் என்றால் இந்த எதிர்வினையே தேவையற்றது. ஆனால்  வேரோடும், வேரடி மண்ணோடும் ஈழ விடுதலைப் போராட்டம் பிடுங்கி எறியப்பட்டு விட்டது என்கிற பிரகடனம் தான் இதில் மிக முக்கிய அம்சமாக வெளிபடுகிறது. இந்த பிரகடனம் இன்றளவும் இனப்படுகொலைக்காக, போர் குற்றங்களுக்காக, தனி ஈழத்திற்காக, பொதுவாக்கெடுப்பிற்காக எடுக்கப்படும் முன்னெடுப்புகளை பலவீனப்படுத்துவதோடு வீழ்த்தவும் முயல்கிறது.

               எக்காலமும் சிங்கள பேரினவாதத்தின் முகம்எல்லாம் முடிந்து விட்டதுஎன்றெண்ணி சிரிப்பினை சிந்த வைக்க எம்மால் முடியாது. கடைசித் தமிழன் இருக்கும் வரை ஈழம் சாத்தியமே என்ற செய்திதான்  உலகத் தமிழினத்தின் ஒற்றை பிரகடனம். இதுதான் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

இதுவெல்லாம் விகடனுக்கு புரியும். இருந்தும் ஏன் இந்த வில்லங்க வேலை ..? யாருக்கு தெரியும்..? சிங்கள ரத்னாக்கள் புன்னகைக்கிறார்கள்.

     -மணி செந்தில்

தாய்நிலத்தை நேசிக்கும் தீரர்களின் போராட்ட பூமி -இடிந்தகரை


அவர்கள் சுழன்றடிக்கும் கடல் காற்றில் படகேறி வந்து சாரை சாரையாய் அந்த கடற்கரையோரம் அமைதியாக காத்திருந்தார்கள். கம்பீரமான அந்த அமைதி மூலம் இந்த உலகிற்கு செய்தி ஒன்றினை அவர்கள் தெரிவிக்க முயன்றார்கள். அந்த எளிய மக்கள் மாபெரும் கல்வி அறிவு கொண்டவர்கள் அல்ல. மதிப்பிற்குரிய அப்துல்கலாம் போல  ஏவுகணை நுட்பங்களை அறிந்தவர்கள் அல்ல. அமைச்சர் நாராயணசாமி போல அதிகார பலம் கொண்டவர்கள் அல்ல. திமுக தலைவர் கருணாநிதி போல போராட்டம் என்ற பெயரில் நடிக்கத் தெரிந்தவர்கள் அல்லமுதல் நாள் வரை ஆதரித்து விட்டு நம்பி நிற்கும் மக்களை நிராதரவாய் கைவிட்ட  தமிழக முதல்வர் ஜெயலலிதா போல நிமிட முடிவுகளை நொடிகளில் மாற்றும் வல்லமை கொண்டவர்கள் அல்ல. மாறாக எளிய கடற்கரை கிராம மக்கள். அன்றாடபிழைப்பிற்கு உயிரைப் பணயம் வைத்தால் தான் அன்றைய உணவு என்ற நெருக்கடியில் வாழ்பவர்கள் .
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாக தங்களைச்சுற்றி கட்டியெழுப்பப்பட்டு வரும்  மாபெரும் வல்லரசு ஒன்றின் அதிகாரம் தோய்ந்த கனவினை அவர்கள் தீரத்துடன் எதிர்த்து நின்றார்கள். சவரம் செய்யப்படாத ஒருவர்..தான் தேவ தூதனில்லை என அறிவித்துக் கொண்டு அமெரிக்காவில் பார்த்த வருமானம் வரத்தக்க பணியினை தூக்கி எறிந்து விட்டு அவர்கள் மத்தியில் வந்து சேர்ந்தார். அண்ணல் அம்பேத்கர் உரைத்தது போலகற்பி.ஒன்று சேர்.புரட்சி செய்..    அனைத்தும் நடந்தது.  இதற்காக அவர் கொடுத்த விலை மிகப் பெரியது. அவரது பள்ளிக்கூட்த்தினை இடித்து தரைமட்டமாக்கினர். போராட்டத்திற்காக நிதி வசூலிக்கிறார் என ஆயிரக்கணக்கான கோடிகளில் ஊழலில் திளைத்தவர்கள் குற்றம் சாட்டினர். அவர் அமைதியாக அங்குள்ள குழந்தைகளுக்கு வரப்போகும் ஆபத்து குறித்து வகுப்பெடுத்துக் கொண்டு இருந்தார். கடலுக்குப் போகும் மீனவன் ஒரு அறிவியல் விஞ்ஞானி அளவிற்கு புள்ளிவிபரங்களோடு ஆதாரப்பூர்வமாக விவாதிக்க துவங்கியது அங்குதான் நடந்தேறியது.
தன்னை ஒரு வளர்ந்து வரும் வல்லரசு என பீற்றிக் கொள்ளும் இந்தியாவின் ஜனநாயக முகத்திரையை கிழித்து எறிந்து இருக்கிறார்கள் இடிந்தகரை மக்களும், அண்ணன் உதயகுமார் அவர்களும்.  ராணுவம்,காவல்துறை,அதிகாரிகள்,அரசியல் தலைவர்கள்,ஊடகம் என அனைத்து விதமான சர்வாதிகாரமும் எளிய அம்மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டன. ஆனால் அவர்கள் அசரவே இல்லை. ஆரம்பத்தில் ஆதரவு தருவது போல நடித்து பின் நட்டாற்றில் கைவிட்ட தமிழக முதல்வரின் நடவடிக்கைகள் அம்மக்களை சற்றே பின்னடைய வைத்தாலும் அவர்கள் சோர்ந்து விடவில்லை . வல்லாதிக்க அரசின் பிரதிநிதியாகவே மாறிவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் கூட இடிந்தகரை மக்களுக்கு எதிராக நின்ற போதும் அவர்கள் உறுதியாகவே நின்றார்கள்.
இடிந்தகரையில் பிறந்திருக்கின்ற ஒரு சின்னஞ்சிறிய சிறுமிக்கு கூட அணு உலையின் ஆபத்து பற்றி புள்ளி விபரங்களோடு தெரிந்திருக்கிறது என்றால்..அது அண்ணன் உதயகுமார் அவர்களின் கடும் முயற்சியோடு வழங்கப்பட்ட பயிற்சி.
ஒரு வருட காலத்திற்கும் மேலாக ஆயிரக்கணக்கில் மக்களை திரள வைத்துக் கொண்டு ஒரு கோரிக்கையை தீவிரமாக எடுத்து வைத்து போராடுவது என்பது மிக சுலபமல்ல. அந்த வகையில் இடிந்தகரை மக்களும், அண்ணன் உதயகுமாரும் சமூகப் போராட்டங்களை சளைக்காமல் முன்னெடுக்கும் சக்திகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்திருக்கிறார்கள் . ஒரு மாபெரும் போராட்டத்தில் மக்கள் திரளை சளைக்காமல் பங்கெடுக்க வைப்பதற்கு மாபெரும் உளவியல் உந்துதல் தேவைப்படுகிறது. போராட்டங்களை எப்போதும் சாதாரண மக்கள் விரும்புவதில்லை. ஆனால் ஊழல் மலிந்த , பாகுபாடு நீதி முறை கொண்ட ,எப்போதும் அநீதிக்கு ஆதரவாக நிற்கின்ற அரசாதிகாரம் மக்களை போராட்டங்களுக்கு வலிந்து தள்ளுகின்றன. உடை, உணவு,உறையுள் ஆகிய 3 முக்கிய அம்சங்களில் ஏதேனும் ஒன்று பாதிக்கப்பட்டால் தான் சாதாரண மனிதன் வீதிக்கு வருகிறான் . ஆனால் இடிந்தகரை மக்கள் தம் மண்ணிற்காக, தன் எதிர்கால தலைமுறைக்காக போராடுகிறார்கள்.
மண்ணின் மைந்தர்கள் தங்கள் நிலம் காக்க  போராடுவதும்,அரச வல்லாதிக்க கரம் வன்முறை முகம் காட்டி அதனை முடக்க முயல்வதும் தமிழரின் வரலாற்றில் காலங்காலமாய் நடந்து வரும் நிகழ்வுகளாகும். எதிரி வலிமையானவன் என நன்கு தெரிந்தும் வேல் கொண்டும் வாள் கொண்டும் வெற்றிவேல், வீரவேல் என முழங்கி எதிரி நோக்கி பாய்ந்த பூலித்தேவன், மருது பாண்டியர், ராணி மங்கம்மாள் என நீளும் வீர மரபு மகத்தானது. தாய் மண்ணை காக்க போராடிய விடுதலைப் போராட்டம் தான் ஈழ மண்ணில் ரத்தம் சிந்தும் மாவீரர்களையும், தன்னையே இழந்து தன்னிலம் காக்க நின்ற தலைவனையும் இந்த உலகிற்கு அடையாளம் காட்டியது.  
  வெறும் வாழ்விடம் தானே..வெறும் நிலம் தானே.. அரசு காட்டும் வேற்றிடத்திற்கு போகவேண்டியது தானே.. என்றெல்லாம் குரல்கள் இடிந்தகரை மக்கள் மீது பாய்கின்றன. எம் பாட்டனும்,பூட்டனும் வழிவழியாய் வாழ்ந்து ,கலந்து,திரிந்து,சுமந்த நிலத்தினை அரச ஏதோச்சிக்கார வல்லாண்மை ஆசைக்கு பலி கொடுத்து விட்டு , பன்னாட்டு மயத்தின் மினுக்கத்தினால்  மேற்பூச்சில் மினுங்க நகர பொருளியல் வாழ்விற்காக  பூர்வீக பூமியை தொலைத்து விட்டு நகர தமிழ்த் தேசிய இனம் போன்ற தொன்ம இனங்களுக்கு எப்படி முடியும்..?
அணு உலை ஆபத்தானது என்றும், சுற்றுப்புற சூழலுக்கு எதிரானது என தெரிந்தும், தங்கள் அழிவிற்கு தாங்களே சம்மதிக்க வேண்டும் என கூடங்குளம், இடிந்த கரை மக்கள் மீது அரச பயங்கரவாதம் தொடுத்திருக்கும் இப்போர் அநீதியானது. ஆனால் உலகம் முழுக்க வாழும் பூர்வீக குடிகள் போலவே அம்மக்களும் தங்கள் மீது திணிக்கப்படும் அநீதி அணு உலையை அசராமல் எதிர்த்து வருகிறார்கள். மின்சாரம் தயாரிக்க மயானமாய் கூடங்குளமும்,இடிந்தகரையும் மாற வேண்டும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. கனிம வள கொள்ளைக்காக தண்டகாரண்ய காடுகள் துவங்கி தனது பேராசை நாவினை அலைய விடும் இந்திய வல்லாதிக்கத்தின் கொடூர முகம் .. இன்று கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிற மக்களையும் தீவிரவாதிகளாய்,வன்முறை வாதிகளாய் அடையாளம் காட்ட ஆசையுடன் நிற்கிறது. வெள்ளைக் கொடி ஏந்தி போராடும் அம் மக்கள் உலகின் மாபெரும் ஜனநாயக நாட்டின் கொடுங்கோன்மை பக்கங்களுக்கு வாழும் சாட்சிகளாக விளங்குகிறார்கள்.  தமிழ் மண்ணில் பிற இனத்தவர் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு, வசதி, தகுதிகளை ஏற்படுத்தி ஏற்றிவிடும்  தத்துவங்களாக ஒளிரும் திராவிடம், இந்திய தேசியம் என்பவற்றின் மீது நிற்கும் திராவிட தேசிய கட்சிகள்(விதிவிலக்கு மதிமுக மட்டும்) அணு உலைக்கு ஆதரவாக நிற்பதன் மூலமே புரியவில்லையா...? இது பூர்வீக குடி மக்களின் உரிமை போராட்டம் என.   காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. பொய்மையின் பூச்சினில் மிளிர்ந்த முகங்கள் அம்மணமாகி அம்பலப்பட்டுக் கொண்டே இருக்கின்றன..வெகு காலம் இப்படியே  நகர முடியாது. ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்கு முன்னோடம் தான் தாய் மண்ணை தன் உயிருக்கு மேலாக நேசிக்கும் தீரர்களின் பூமி – இடிந்தகரை.

இருண்மை வீதியில்
வெளிச்சத்துகள் உமிழும்
வெப்பம் சற்றே
காத்திரமானது தான்..

அதிகார நாவுகளின்
கொடுங்கோன்மை சொற்கள்
காலங்காலமாய் இதில் தான்
குளிர் காய்ந்தன..

ஏய்த்து மாய்மாலம் செய்த
முகங்கள் இதில் தான்
உல்லாச உவகையில்
சிவந்து திரிந்தன..

 பொய்மையில் நெளிந்த
நாவுகள் இதில் தான்
இந்த வெப்பத்தில் தான்
உண்மையின் உடலங்களை
பொசுக்கி பசியாறின..

அடுப்பில் நெருப்பாய்
அமைதியாய்
அமர்ந்திருக்கும்
இந்த நெருப்புத்தான் –நாளை
எரிமலையாய் எகிற இருக்கிறது
என்பது  இங்கு
எத்தனை பேருக்கு
தெரியும்....?

-மணி. செந்தில்


உதயகுமார் என்கிற தமிழன்




நான் தேவ தூதன் அல்ல - அண்ணன் உதயகுமார்.



அமெரிக்காவில் வகித்த உயர் பதவியை தூக்கி எறிந்து விட்டு, கல்வி அறிவு மறுக்கப்பட்ட , அப்பாவி மீனவ மக்களோடு தங்கி, அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்று,எந்த ஒரு அணு விஞ்ஞானிக்கும் சளைக்காமல் பதில் தரக்கூடிய அளவிற்கு அவர்களை அறிவு தெளிவூட்டி, தனது தெளிவான ,வெளிப்படையான ,நேர்மையான முறைகளால் ஒரு வருட காலத்திற்கு மேலாக போராட்டத்தினை முன்னெடுத்து, வன்முறையின் கரம் தீண்டி விட்ட பிறகும் கூட நிதானம் தவறாமல் ‘எம் அமைப்பின் புதிய தலைவர்கள்’ நாங்கள் தோற்கவில்லை..போராட்டத்தினை முன்னெடுப்பார்கள் என கம்பீரமாக அறிவித்து விட்டு..மக்களின் கண்ணீர் மழைகளுக்கு நடுவே சரண் அடைய காத்திருக்கும் அண்ணன் உதயகுமார் அவர்களே...

நீங்கள் தேவதூதன் அல்ல. நீங்கள் தான் தேவன்









அய்யா சுப.வீ அவர்களின் கொலை மிரட்டல் புகாரும்..அண்ணன் சீமான் அவர்களின் ’நச்’ பதிலும்..





அய்யா சுப.வீக்கு நீங்கள் கொலை மிரட்டல் விடுத்தீர்கள் என சுப.வீ சொல்கிறார் அண்ணா என்று அண்ணன் சீமானிடம் சொன்னேன். அதற்கு அண்ணன் சீமான் சொன்ன பளிச் பதில் - ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டவருக்கு நான் ஏன் கொலை மிரட்டல் விடுக்க வேண்டும்..?